சென்னை மாநகராட்சிக்கு கொடி தந்த ம.பொ.சி. || ma po si history
Logo
சென்னை 11-02-2016 (வியாழக்கிழமை)
சென்னை மாநகராட்சிக்கு கொடி தந்த ம.பொ.சி.
சென்னை மாநகராட்சிக்கு கொடி தந்த ம.பொ.சி.

"மதராஸ் மனதே''! ஆந்திராவிலிருந்து அன்று பலத்த குரல்கள் ஒலித்தன. அப்போது மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கவிருந்த நேரமது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் "தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்'' என்ற எதிர்ப்புக் குரல் சென்னையிலிருந்து கிளம்பியது! இக்குரலுக்குச் சொந்தக்காரர்!

ஒரு தமிழ் அறிஞர். ஆரம்பக் கல்வி கூட பெற இயலாமல், வறுமையின் கோரப்பிடியில், சிக்கித்தவித்து நெசவுத் தொழிலாளியாகவும், பின் அச்சுக் கோர்ப்பவராகவும் தன் வாழ்க்கையைத் தொடங்கி தன் சொந்த முயற்சியால் படித்து தமிழ் அறிஞரானவர். தமிழகத்தின் தலைவர்களுள் தலைசிறந்த ஒருவராய் விளங்கியவர்.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். அவர்தான் சொல்லின் செல்வர் இரா.பி.சேதுப்பிள்ளை அவர்களால் "சிலம்புச் செல்வர்'' என பெயர் சூட்டப்பட்ட ம.பொ.சி. என்னும் மூன்று எழுத்துகளுக்கு சொந்தக்காரர். சென்னையில் எழுந்த எதிர்ப்புக் குரல் கேட்டு அடங்கியது, ஆந்திர மாநிலம்.

தற்காலிகமாவது சென்னையை சொந்தமாக்கிக் கொள்கிறோம் என்று அப்போதைய பிரதமர் நேருஜியிடம் கேட்டனர். தற்காலிகமாகக் கூட விட்டுக் கொடுக்க மாட்டோம். சென்னை தமிழ்நாட்டுக்கே சொந்தம் என்று தன் தொண்டர்கள் படையான தமிழரசுக் கழகத் தோழர்களைக் கொண்டு கடுமையாக போரடினார் சிலம்புச் செல்வர்.

அதில் மாபெரும் வெற்றியும் பெற்றார். வேங்கடத்தையும் விட மாட்டோம் என்றார். திருப்பதியா? திருத்தணியா? என்றக் கேள்வி எழுந்தபோது திருத்தணி மட்டுமல்லாது சுற்றியுள்ள 5 தாலுக்காக்கள் தமிழகத்தின் வசமாயின. ஆனால் திருப்பதி கிடைக்காதது ஏமாற்றமே.

ஆயினும் திருப்பதியை விடமாட்டேன் என போராட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைக்காமல் -கமாபோட்டு வைத்திருக்கிறேன் என்றார். இப்போராட்டமே வடக்கெல்லைப் போராட்டமானது. அடுத்ததாகக் குமரி முனையை மீட்க தேசமணியின் ஆதரவோடு குமரி, செங்கோட்டை, தேவிகுளம், பீர்மேடு ஆகியவற்றிற்காக போராடினார் ம.பொ.சி. அவர்கள்.

இதனால் குமரியும், செங்கோட்டையும் தமிழகத்திற்கு சொந்தமாயின. இந்நிகழ்ச்சியே தெற்கெல்லைப் போராட்டமானது. இத்தோடு முடிந்ததா? இவருடைய போராட்டம்! இல்லையே. "மெட்ராஸ் ஸ்டேட்'' என்று அழைக்கப்பட்ட அம்மாநிலப் பெயரை மாற்றி "தமிழ்நாடு'' என்று தன்மானப் பெயர் வைக்கப் போராடி அதில் வெற்றி கண்டார்.

இப்படியெல்லாம் தன் வாழ்க்கையை போராட்டகளமாக மாற்றிக் கொண்ட இவர் தன் சுயசரிதை நூலுக்கு வைத்தபெயர் "எனது போரட்டம்'' என்பதாகும். ஆம்! வாழ்க்கையில் இவர் கண்டவையெல்லாம் போராட்டங்களே! "சிலம்புச் செல்வம்'' என்ற சிறப்புப் பெயர் பெற்ற இவருக்கு எல்லைகளை "மீட்டுத் தந்ததால்'', "எல்லைக் காவலர்'' என்ற பட்டப்பெயர் அளித்தே இத்தமிழகம் நன்றியுடன் அழைத்தது.

இவரால் உருவாக்கப்பட்ட கழகம் தமிழரசுக் கழகம். அக்கட்சியின் சின்னமாக உருவாக்கப் பெற்ற கொடியின் நிறம் இரண்டு பங்கு வெண்மை, ஒரு பங்கு சிவப்பு. இதில் நடுவில் இருக்கும் மூவேந்தர்களின் சின்னங்களான வில், புலி, மீன் போன்ற சின்னங்களாகும்.

இவரால் உருவாக்கப்பட்ட இந்தக் கழகத்தை ஆட்சிக் கட்டிலில் அமர்த்த ஆசைப்படாமல் தன் இறுதிக் காலம்வரை நாட்டின் நலனுக்காகப் பாடுபடச் செய்தவர். "தமிழ்'' என்ற வார்த்தையையே தன் உயிர் மூச்சாகக் கொண்டவர். "எங்கும் தமிழ் எதிலும் தமிழ்'' என்பதே இவரின் தாரக மந்திரம்.

இவர் மொழிக்காக நடத்திய போராட்டங்களும் உண்டு. இது மட்டுமல்லாமல் இவர் சென்னை கார்ப்பரேஷனில் ஆல்டர்மேனாக இருந்தபொழுது தன் கட்சியின் சின்னமான வில், புலி, மீன் இம்மூன்று சின்னத்தை கார்ப்பரேஷன் கொடிச் சின்னமாக்கினார். அப்பொழுது கவர்னர் ஜெனரலாக இருந்த மூதறிஞர் ராஜாஜியின் ஒப்புதலோடு கையெழுத்திடச் செய்தவர் ம.பொ.சி. ஆவார்.

இன்றைய தலைமுறையினரானோர் அன்னையர் தினம், தந்தையர் தினம், நண்பர்கள் தினம், செவிலியர் தினம், மகளிர் தினம், காதலர் தினம் என்றெல்லாம் கொண்டாடும் இவர்கள் ஏன் சென்னை தமிழகத்தோடு இணைந்த நாளை கொண்டாடவில்லை? எதனால் இந்த நல்லதொரு காரியத்தை எண்ணிப் பார்க்கவில்லை?

ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய 3 மாநிலங்களும் மொழிவழி மாநிலம் அமைந்த (நவம்பர் 1) நாளை விமரிசையாகக் கொண்டாடும்போது தமிழ் நாட்டவராகிய நாம் கொண்டாடாமல் மறந்து போனோம்?

(இன்று ம.பொ.சி. பிறந்த நாள்)

-ம.பொ.சி. மாதவி பாஸ்கரன்
Banner.gif

மேலும் காலச் சுவடுகள்

    தகவல் இல்லை

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif