search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுற்றுலா பயணிகள்"

    • சாரல் மழை பெய்ததையடுத்து சூரிய உதயத்தை பார்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
    • சுற்றுலா தலங்களில் கூட்டம் அலைமோதியதையடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    கோடை விடுமுறை முடிந்து வருகிற 6-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. கோடை விடுமுறை நிறைவடைவதற்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் சூரிய உதயத்தை காண்பதற்கும், சூரியன் மறைவதை பார்ப்பதற்கும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் படை எடுத்த வண்ணம் உள்ளனர்.

    கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வந்த நிலையில் சூரிய உதயம் மற்றும் மறைவதை பார்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் இன்று காலையில் சூரிய உதயத்தை பார்ப்பதற்கு சுற்றுலா பயணிகள் ஏராளமான ஒரு கடற்கரையில் குவிந்திருந்தனர்.

    ஆனால் இன்றும் சாரல் மழை பெய்ததையடுத்து சூரிய உதயத்தை பார்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து விவேகானந்தர் பாறைக்கு செல்வதற்கு சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு பல மணி நேரம் காத்திருந்து சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் பாறையை கண்டுகளிக்க சென்றனர். சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதியதையடுத்து கன்னியாகுமரியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. கன்னியாகுமரி மட்டுமின்றி திற்பரப்பு அருவியிலும் இன்று சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர். குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திற்பரப்பு அருவிக்கு வந்திருந்தனர். அவர்கள் குடும்பத்தோடு ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர். பத்மநாபபுரம் அரண்மனையிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. சொத்தவிளை பீச், முட்டம் பீச், சங்குத்துறை பீச், வட்டக்கோட்டை பீச் உள்பட மாவட்டத்திலுள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் இன்று காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர். சுற்றுலா தலங்களில் கூட்டம் அலைமோதியதையடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஏற்கனவே கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்று எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் சுற்றுலா பயணிகள் கடற்கரை பகுதிக்கு செல்வதை தடுக்கும் வகையில் போலீசார் அந்த பகுதிகளில் ரோந்து பணியிலும் ஈடுபட்டனர்.

    • பழைய குற்றால அருவியில் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளத்தில் சிறுவன் உயிரிழந்த நிலையில் பல்வேறு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டது.
    • இன்று காலையில் குற்றாலம் ஐந்தருவியல் மிதமாக விழுந்த தண்ணீரில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக முக்கிய சுற்றுலாதளமான குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    பழைய குற்றால அருவியில் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளத்தில் சிறுவன் உயிரிழந்த நிலையில் பல்வேறு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டது.

    இந்நிலையில் வெள்ளம் குறைந்ததால் சுற்றுலா பயணிகள் அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் போதிய மழை இல்லாததால் குற்றாலத்தில் பிரதான அருவிகளான மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளுக்கு தண்ணீர் வரத்து சற்று குறைய தொடங்கியுள்ளது.

    இன்று காலையில் குற்றாலம் ஐந்தருவியல் மிதமாக விழுந்த தண்ணீரில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

    • மழையின் அளவு மாவட்டத்தில் படிப்படியாக குறைந்தது.
    • பேச்சிப்பாறை அணைக்கு 625 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் பேச்சிப்பாறை அணையில் இருந்து மதகுகள் வழியாகவும், உபரியாகவும் தண்ணீர் திறக்கப்பட்டது. இதன்மூலம் ஆறுகள், கால்வாய்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. திற்பரப்பு அருவியிலும் அதிக அளவு தண்ணீர் கொட்டியதால் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் மழையின் அளவு மாவட்டத்தில் படிப்படியாக குறைந்தது. நேற்று காலை நாகர்கோவில், இரணியல் மற்றும் மலையோர பகுதிகளில் ஒரு சில இடங்களில் தூறலாகவே மழை இருந்தது. அதிக பட்சமாக முள்ளங்கினா விளையில் 16.4 மில்லி மீட்டர் மழை பெய்தது. அடையாமடைல் 6.2, குருந்தன்கோட்டில் 5.2, பெருஞ்சாணியில் 3.4 மில்லிமீட்டர் மழை பெய்ததாக பதிவாகி உள்ளது. இதனால் அணைகளுக்கு வரும் நீர்வரத்தும் குறைந்துள்ளது.

    இதன் காரணமாக திற்பரப்பு அருவியில் 8 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் இன்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    பேச்சிப்பாறை அணைக்கு 625 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டது. 48 அடி கொள்ளளவு கொண்ட அணையில் தற்போது 44.97 அடி நீர்மட்டம் உள்ளது. மதகுகள் வழியாக 636 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 58.25 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு 434 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 12.4 அடியாக உள்ளது.

    • புதுவையில் நேற்று இரவு முதல் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
    • கரையில் நின்று செல்பி மற்றும் ரீல்ஸ் எடுத்து இளம் தம்பதியினர் மகிழ்ந்தனர்.

    புதுச்சேரி:

    வங்க கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் காரணமாக புதுச்சேரி துறைமுகத்தில் 2-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    புதுவையில் நேற்று இரவு முதல் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இந்த நிலையில் விடுமுறை நாளான இன்று இருள் விலகாத அதிகாலையிலேயே சூரிய உதயத்தை காண கடற்கரைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.


    ஆனால் காலை வேளையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் சூரிய உதயம் தெரியவில்லை. இதனால் சூரிய உதயத்தை காண வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இருப்பினும் கடலில் இறங்கி சிலர் குளித்தனர்.

    அப்போது அங்கு வந்த போலீசார் ஆபத்தான கடல் பகுதி என்பதால் கடலில் குளிக்க தடை உள்ளதை சுட்டிகாட்டி சுற்றுலா பயணிகளை அப்புறப்படுத்தினார்கள். சூரிய உதயத்தை பார்க்க முடியவில்லை, கடலில் குளிக்கவும் அனுமதியில்லை என சுற்றுலா பயணிகள் கவலை அடைந்தனர். இருப்பினும் கரையில் நின்று செல்பி மற்றும் ரீல்ஸ் எடுத்து இளம் தம்பதியினர் மகிழ்ந்தனர்.

    • ஏற்காட்டில் இன்று 47-வது மலர் கண்காட்சி கடந்த 22-ம் தேதி தொடங்கியது.
    • இந்த கண்காட்சி தொடர்ந்து வருகிற 26-ந் தேதி வரை 5 நாட்கள் இந்த மலர் கண்காட்சி நடைபெறுகிறது.

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நிலவி வரும் குளுகுளு சீசனை அனுபவிக்க ஆண்டு தோறும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படும்.

    இதையடுத்து சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க கோடை விழா மலர் கண்காட்சி நடைபெறும். இந்த மலர் கண்காட்சியை தமிழகம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தினமும் கண்டு ரசித்து செல்வார்கள்.

    ஏற்காட்டில் இன்று 47-வது மலர் கண்காட்சி கடந்த 22-ம் தேதி தொடங்கியது. இந்த கண்காட்சி தொடர்ந்து வருகிற 26-ந் தேதி வரை 5 நாட்கள் இந்த மலர் கண்காட்சி நடைபெறுகிறது. மலர் கண்காட்சியையொட்டி ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டுக்கு இன்று வருகை தந்துள்ளனர்.

    இந்நிலையில், பொது மக்களின் கோரிக்கையை ஏற்று ஏற்காடு கோடை விழா மலர் கண்காட்சி மே 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    • கேரளா, கர்நாடகா போன்ற இடங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்துள்ளனர்.
    • ஏற்காட்டில் இன்று காலை கடுமையான பனிமூட்டம் நிலவியது.

    ஏற்காடு:

    ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி 3-வது நாளான இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் மலர் கண்காட்சியை காண திரண்டு வந்தனர்.

    தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகா போன்ற இடங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்துள்ளனர்.

    ஏற்காடு சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 வாரமாக பரவலாக மழை பெய்து சீதோசன நிலை மிகவும் குளுமையாக மாறி உள்ளது.

    இதனால் ஏற்காட்டில் குளிர் அதிகமாக காணப்படுகிறது தற்போது கோடை விழா மலர் கண்காட்சி நடைபெற்று வருவதால் இந்தகால சூழ்நிலையை இங்கு வந்துள்ள சுற்றுலா பயணிகள் வெகுவாக ரசித்து வருகின்றனர்.

    பூத்துக் குலுங்க மலர்களையும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள உருவங்களையும் கண்டு ரசித்து செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். ஏற்காட்டில் இன்று காலை கடுமையான பனிமூட்டம் நிலவியது. சுற்றுலா பயணிகள் பனிமூட்டத்தை போட்டோ எடுத்தும் செல்பி எடுத்தும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • மலைப்பகுதியில் மழை குறைந்ததால் ஐந்தருவி, சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீரின் வரத்து குறைந்தது.
    • மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் அந்த அருவிகளில் குளிப்பதற்கு தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்று மாலை வரை தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக குற்றாலத்தில் உள்ள பழைய குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் அங்கு குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.

    இந்நிலையில் இன்று காலையில் மலைப்பகுதியில் மழை குறைந்ததால் ஐந்தருவி, சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீரின் வரத்து குறைந்தது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். அதேநேரம் மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் அந்த அருவிகளில் குளிப்பதற்கு தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது.

    2 அருவிகளிலும் இன்று பிற்பகலில் தண்ணீர் வரத்து குறையும்பட்சத்தில் அங்கும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்படுவர் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடைவிழா தொடங்கி நடந்து வருகிறது.
    • தொட்டபெட்டாவின் இயற்கை அழகை பார்க்க ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடைவிழா தொடங்கி நடந்து வருகிறது. ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியும், ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சியும் நடந்து வருகிறது.

    கண்காட்சியை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்து அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

    சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்காவில் நடக்கும் மலர் கண்காட்சி, ரோஜா பூங்காவில் நடைபெறும் ரோஜா கண்காட்சி ஆகியவற்றை பார்வையிடுகிறார்கள்.

    அதனை தொடர்ந்து ஊட்டியில் உள்ள படகு இல்லம், தொட்டபெட்டா மலைச்சிகரம், பைக்காரா படகு இல்லம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களுக்கும் சென்று சுற்றிப் பார்ப்பது வழக்கம்.

    இந்த நிலையில் தொட்டபெட்டா மலைச் சிகரத்துக்குச் செல்லும் பகுதியில் வனத்துறை சாா்பில் சோதனைச் சாவடி அலுவலக கட்டுமான பணி தொடங்கி உள்ளது.

    இதன் காரணமாக தொட்டபெட்டா மலைச்சிகரம் தற்காலிகமாக மூடப்பட்டது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தற்காலிகமாக மூடப்பட்டிருந்த தொட்டபெட்டா காட்சி முனை 7 நாட்களுக்குப் பின் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

    தொட்டபெட்டாவில் விட்டு விட்டுப் பெய்யும் சாரல் மழை, அடிக்கடி சூழ்ந்து கொள்ளும் மேக மூட்டத்தால் நிலவும் குளிரில் இயற்கை அழகை பார்க்க இன்று ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

    • மலைரெயில் பாதையில் உள்ள தண்டவாளத்தில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்தன.
    • மலைரெயிலில் பயணிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரிக்கு தினமும் மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது. காடுகளுக்கு நடுவே செல்வதால் இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கலாம் என்பதால் இந்த ரெயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள்.

    நீலகிரி, மேட்டுப்பாளையத்தில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் கடந்த 18-ந் தேதி மலைரெயில் பாதையில் பாறைகள், மண்சரிவு ஏற்பட்டது. இதனால் 18-ந் தேதி தல் 21-ந் தேதி வரை 4 நாட்கள் ரத்து செய்யப்பட்டது.

    சீரமைப்பு பணிகள் முடிந்து நேற்று மீண்டும் மலைரெயில் போக்குவரத்து தொடங்கியது. இந்த நிலையில், மீண்டும் மழை பெய்ததால், மலைரெயில் பாதையில் உள்ள தண்டவாளத்தில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்தன. இதுகுறித்து ரெயில்வே ஊழியர்கள் ரெயில்வே நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து இன்று ஒருநாள் மலைரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்படும் என சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் மலைரெயிலில் பயணிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    • 4 துறைகளின் செயல்பாடுகளை விளக்கும் விதமாக படகில் அலங்காரம் செய்யப்பட்டு அணிவகுப்பு நடைபெற்றது.
    • அலங்கார அணிவகுப்பை கோட்டாட்சியர் சிவராமன் தொடங்கி வைத்தார்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் கடந்த 17ஆம் தேதி மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இன்று கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் அரசுத்துறை சார்பாக படகு அலங்கார அணிவகுப்பு போட்டி நடைபெற்றது.

    இதில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, தோட்டக்கலைத்துறை, சுற்றுலாத்துறை, மீன்வளத்துறை ஆகிய 4 துறைகளின் செயல்பாடுகளை விளக்கும் விதமாக படகில் அலங்காரம் செய்யப்பட்டு அணிவகுப்பு நடைபெற்றது. இதில் முதல் பரிசை உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சித் துறை தட்டிச் சென்றது. 2வது பரிசை மீன்வளத்துறையும், 3வது பரிசை சுற்றுலாத்துறையினரும் பெற்றனர்.

    அலங்கார அணிவகுப்பை கோட்டாட்சியர் சிவராமன் தொடங்கி வைத்தார். வட்டார வளர்ச்சி ஆணையாளர் பாலகிருஷ்ணன், நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன், மாவட்ட சுற்றுலா அலுவலர் கோவிந்தராஜன், உதவி சுற்றுலா அலுவலர் சுதா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் காயத்ரி மற்றும் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கொடிவேரி தடுப்பணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.
    • கொடிவேரி தடுப்பணைக்கு செல்லும் நுழைவுவாயில் அடைக்கப்பட்டது.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி தடுப்பணையில் பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி செல்கிறது.

    கொடிவேரி தடுப்பணையில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் ஈரோடு மாவட்ட மக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் பலர் வந்து அங்கு கொட்டும் தண்ணீரில் குளித்து செல்கிறார்கள். இதனால் விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட அதிகளவில் கொடிவேரி அணைக்கு வருவார்கள்.

    இந்த நிலையில் தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால் கொடிவேரி தடுப்பணைக்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பலத்த மழை கொட்டி வருகிறது. குறிப்பாக மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான கோபிசெட்டிபாளையம், நம்பியூர், சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டி வருகிறது.

    மேலும் கொடிவேரி தடுப்பணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கொடிவேரி தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

    இதேபோல் பவானி ஆற்று பகுதிகளிலும் தொடர்ந்து மழை கொட்டுகிறது. இதனால் கொடிவேரி தடுப்பணைக்கு கடந்த 2 நாட்களாக தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

    இதனால் கொடிவேரி தடுப்பணைக்கு வழக்கத்தை விட அதிகளவில் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக கொடிவேரி தடுப்பணையில் இரு கரைகளையும் தொட்டப்படி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    மேலும் சுற்றுலா பயணிகள் குளிக்கும் பகுதியில் அதிகளவில் தண்ணீர் கொட்டி செல்கிறது. இதனால் தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெருக்கெடுத்து ஓடுகிறது.

    இந்த நிலையில் தடுப்பணையில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்வதால் பொதுமக்களின் பாதுகாப்பை கருதி கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.

    இதனால் கொடிவேரி தடுப்பணைக்கு செல்லும் நுழைவுவாயில் அடைக்கப்பட்டது. மேலும் தடுப்பணைக்கு செல்லும் வழியிலேயே தடுப்புகள் வைக்கப்பட்டு எச்சரிக்கை போர்டு வைக்கப்பட்டு உள்ளது. அதில் தடுப்பணையில் அதிகளவில் தண்ணீர் செல்வதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் கொடிவேரிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என எழுதப்பட்டு உள்ளது.

    இதையொட்டி அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு அந்த வழியாக வருபவர்களை அறிவுரை கூறி அனுப்பி வைத்து வருகிறார்கள்.

    இதை பற்றி தகவல் அறியாததால் இன்று காலை பொதுமக்கள் பலர் வந்திருந்திருந்தனர். தடை விதிக்கப்பட்டு தடுப்பணைக்கு செல்லும் வழி அடைக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர். தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார் மற்றும் அணை ஊழியர்கள் கண்காணித்து வருகிறார்கள்.

    • 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வண்ண மலர் தொட்டிகளைக் கொண்டு மலர்க்காட்சி அமைக்கப்பட்டு வருகிறது.
    • அண்ணா பூங்காவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை கொண்டு பல்வேறு வடிவ அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

    சேலம்:

    சேலம் மாவட்டம், ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர்கண்காட்சி நாளை (புதன்கிழமை) தொடங்கி 26-ந் தேதி வரை 5 நாட்கள் நடை பெறுகிறது.

    தோட்டக்கலைத் துறையின் சார்பில் அண்ணா பூங்காவில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மலர்களை கொண்டு இயற்கை வளங்கள் மூலம் மின்சாரம் உருவாக்குவதை எடுத்துரைக்கும் வகையில் பிரமாண்ட காற்றாலை, சுற்றுச்சூழலில் கடல் வாழ் உயிரினங்களின் பங்கினை உணர்த்தும் வகையில் பவளப்பறைகள், நண்டு, சிற்பி, ஆக்டோபஸ், நட்சத்திர மீன், கடல் குதிரை போன்ற உருவங்களும், குழந்தைகளிடம் மரம் நடுதலை ஊக்குவிக்கும் வகையில் கார்ட்டூன் கதாப்பாத்திரங்களான டொனால்டு டக், மிக்கிமவுஸ், டாம் அண்டு ஜெரி மரங்களை நடுவது போலவும், நீர் பாய்ச்சுதல் போலவும் காட்சிப்படுத்தப்பட உள்ளது. மேலும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வண்ண மலர் தொட்டிகளைக் கொண்டு மலர்க்காட்சி அமைக்கப்பட்டு வருகிறது.

    மேலும், அண்ணா பூங்கா வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரித்திடவும், ஏரி பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வண்ண மலர்களால் ஆன செல்பி பாயிண்டுகளும் அமைக்கப்பட உள்ளன. அண்ணா பூங்காவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை கொண்டு பல்வேறு வடிவ அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அண்ணா பூங்காவில், ஏற்காட்டில் விளையும் காப்பி ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை தேவைக்கேற்ப சுவைத்து அந்த காப்பிரங்களை வாங்கி செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    சுற்றுலாத்துறையின் சார்பில் ஏற்காடு படகு இல்லத்தில் நாளை காலை 10 மணி முதல் 12 மணி வரை பொதுமக்களுக்கான படகு போட்டியும், சமூக நலத்துறையின் சார்பில் 23-ந் தேதி அன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை பொதுமக்களுக்கான அடுப்பிலா சமையல் போட்டியும், விளையாட்டுத்துறையின் சார்பில் 23-ந் தேதி அன்று மான்போர்ட் விளையாட்டு மைதானத்தில் காலை 10 மணி முதல் 12 மணி வரை ஆண்களுக்கான கால்பந்து போட்டி, பெண்களுக்கான பந்து வீசுதல் போட்டி, 50 மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல், நின்று நிலை தாண்டுதல், கயிறு இழுத்தல் போட்டிகள் நடத்தப்படவுள்ளது.

    மேலும், கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் 25-ந் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை நாய்கள் கண்காட்சியும், சமூக நலத்துறையின் சார்பில் 26-ந் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை குழந்தைகளின் தளிர்நடை போட்டியும் நடத்தப்படவுள்ளது.

    சுற்றுலாத்துறை மற்றும் கலைப்பண்பாட்டுத்துறையின் சார்பில் சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் கொம்பு இசை, சிலம்பாட்டம், பறை இசை, மாடுஆட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை, பரதநாட்டிய நிகழ்ச்சி, நாட்டுப்புறபாடல்கள், கரகாட்டம், பப்பட் ஷோ, கிராமிய கலைநிகழ்ச்சிகள் மற்றும் பல்சுவை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. 

    ×