என் மலர்tooltip icon

    செய்திகள்

    • அமெரிக்காவும் ஈரானின் பல்வேறு இலக்குகளை ஏவுகணைகள் மற்றும் டிரோன்களால் தகர்த்தது
    • ஈரானின் பெரும்பாலான ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை தங்கள் வான்பாதுகாப்பு அமைப்பு தாக்கி அழித்ததாக இஸ்ரேல் கூறியுள்ளது.

    துபாய்:

    ஈரானின் அணு ஆயுத தயாரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கடந்த 28-ந் தேதி அந்த நாடு மீது போரை தொடங்கின. தலைநகர் டெஹ்ரானில் நடந்த அதிரடி தாக்குதலில் ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார்.

    இதனால் ஆவேசமடைந்த ஈரான் இஸ்ரேல் மீதும், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீதும் அதிரடி தாக்குதலை தொடர்ந்தது. இதனால் வளைகுடா பிராந்தியம் முழுவதும் பயங்கரமான போர் மூண்டுள்ளது. உலகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள இந்த போர் நேற்று 5-வது நாளாக உக்கிரமாக நடந்தது.

    ஈரானின் பாதுகாப்பு படைகளை குறிவைத்து இஸ்ரேல் அதிரடி தாக்குதலை நடத்தியது. இதனால் தலைநகர் டெஹ்ரான் முழுவதும் பயங்கர குண்டுவெடிப்பு சத்தமும், அவசரகால படையினரின் சைரன் சத்தமுமாக காதைப்பிளந்தன.

    இதைப்போல அமெரிக்காவும் ஈரானின் பல்வேறு இலக்குகளை ஏவுகணைகள் மற்றும் டிரோன்களால் தகர்த்தது. குறிப்பாக ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்பு, ஈரானின் நூற்றுக்கணக்கான நீண்டதூர ஏவுகணைகள், ஏவுதளங்கள் மற்றும் டிரோன்களை அழித்ததாக அமெரிக்க கடற்படை அதிகாரி பிரட் கூப்பர் கூறினார்.

    மறுபுறம் ஈரானும் இஸ்ரேலை நோக்கி நேற்றும் அலையலையாக ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை வீசி தாக்குதல் நடத்தியது. இதனால் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் நகர்களை சுற்றிலும் வெடிச்சத்தங்கள் கேட்டுக்கொண்டே இருந்தன.

    எனினும் ஈரானின் பெரும்பாலான ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை தங்கள் வான்பாதுகாப்பு அமைப்பு தாக்கி அழித்ததாக இஸ்ரேல் கூறியுள்ளது.

    இதற்கிடையே வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை குறி வைத்தும் ஈரான் பயங்கர தாக்குதல்களை நிகழ்த்தியது.

    அந்தவகையில் அமெரிக்காவின் 5-வது கடற்படைப்பிரிவு அமைந்துள்ள பஹ்ரைனில் நேற்று காலையிலேயே சைரன்கள் ஒலித்ததை கேட்க முடிந்தது. இதைப்போல கத்தாரில் ஈரான் வீசிய 2 ஏவுகணைகளில் ஒன்று அல்-உதைத் தளத்தில் விழுந்ததாகவும், எனினும் இதில் சேதம் எதுவும் இல்லை என்றும் அந்த நாட்டு ராணுவ அமைச்சகம் கூறியுள்ளது.

    மேலும் சவுதி அரேபியாவிலும் தொடர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் முக்கியமாக சவுதி அரேபியாவின் ராஸ்தனுரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது மீண்டும் தாக்குதல் நடந்தது. முன்னதாக கடந்த 2-ந் தேதி யும் இந்த நிறுவனத்தில் ஈரான் தாக்குதல் நடத்தியதால் அந்த ஆலை தற்காலிகமாக மூடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இதைப்போல ஈராக், சிரியாவை கடந்து துருக்கி நோக்கி வந்த ஈரானின் நீண்டதூர ஏவுகணை ஒன்றை மத்திய திரைக்கடல் பகுதியில் உள்ள நேட்டோ அமைப்பின் வான்பாதுகாப்பு அமைப்பு தாக்கி அழித்தது.

    எனினும் இந்த ஏவுகணை துருக்கியை குறிவைத்து செலுத்தவில்லை என ஈரான் கூறியுள்ளது. அது சைப்ரசை நோக்கி செலுத்தப்பட்டது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் நடமாட்டத்துக்கு தடை விதித்துள்ள ஈரான், அதை மீறி அந்த வழியாக செல்லும் கப்பல்களை தாக்கி வருகிறது. அந்தவகையில் மால்டா கொடியுடன் சென்ற கப்பல் ஒன்றை நேற்று ஏவுகணை ஒன்று தாக்கியது.

    அந்த கப்பலில் இருந்த 2 ஊழியர்களை ஓமன் படைகள் காப்பாற்றியதாக கூறப்பட்டு உள்ளது. இது கடந்த 24 மணி நேரத்தில் நடந்த 4-வது தாக்குதல் ஆகும்.

    ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்தி வரும் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,000-ஐ கடந்து விட்டது.

    மறுபுறம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலில் நிகழ்ந்த உயிரிழப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.

    எனினும் போரின் முதல் 2 நாட்களிலேயே அமெரிக்காவின் 500-க்கு மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டதாக ஈரானின் புரட்சிகர காவல்படை கூறியுள்ளது.

    ஆனால் இஸ்ரேலில் நிகழ்ந்த இறப்பு விவரங்கள் வெளியாகவில்லை. அங்கே இதுவரை 11 பேர் மட்டுமே இறந்ததாக அந்த நாடு கூறியுள்ளது.

    உலக நாடுகளை உலுக்கி வரும் போர் 5-வது நாளை எட்டியுள்ள நிலையில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என ஈரான் கூறியுள்ளது. அமெரிக்காவை நம்ப தயாரில்லை எனவும், நாங்கள் விரும்பும் வரை போரை தொடர்வோம் எனவும் அயதுல்லா அலி காமேனியின் ஆலோசகர் ஒருவர் கூறினார்.

    இதைப்போல ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரி ஜானி தனது எக்ஸ் தளத்தில், 'நேட்டன்யாகுவுடன் சேர்ந்து தனது கோமாளித்தனமான செயல்களால், அமெரிக்க மக்களை ஈரானுடன் நியாயமற்ற போருக்கு இழுத்துள்ளார் டிரம்ப். இந்த போரில் 500-க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ள நிலையில் அமெரிக்கா முதலாவதா அல்லது இஸ்ரேல் முதலாவதா என்பதை அவர் கணக்கிட்டு கொள்ளட்டும்' என்று கூறியிருந்தார்.

    மேலும் அவர், 'கதை தொடர்கிறது. இமாம் காமேனியின் தியாகம் உங்களிடமிருந்து பெரும் விலையைக்கோரும்' என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

    போர் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலுக்கு ஆதரவாக யாரும் பேசினாலோ அல்லது செயல்பட்டாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரான் தலைமை நீதிபதி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

    ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்க வெற்றிப்பாதையில் இருப்பதாக அந்த நாட்டு ராணுவ மந்திரி ஹெக்சேத் கூறியுள்ளார். ஈரானின் வான் பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கூறிய அவர், ஈரானுக்கு எதிராக இந்த போர் தீர்க்கமாகவும், பேரழிவு தரும் வகையிலும், கருணை இன்றியும் நடத்தப்படுவதாகவும் தெரிவித்தார். 

    • பல்வேறு காரணங்களால் வேளச்சேரி பரங்கிமலை பறக்கும் ரெயில் திட்டம் காலதாமதம் ஆனது.
    • கடந்த சில ஆண்டுகளாக விரைவுபடுத்தப்பட்டு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.

    சென்னை கடற்கரை- வேளச்சேரி இடையே பறக்கும் ரெயில் சேவை பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருந்து வரும் நிலையில் அதனை பரங்கிமலை வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று 2008-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.

    பரங்கிமலை புறநகர் ரெயில் நிலையத்தோடு இணைக்கும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால் நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வேளச்சேரி பரங்கிமலை பறக்கும் ரெயில் திட்டம் காலதாமதம் ஆனது.

    17 ஆண்டு கால காத்திருப்பு: வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார் பிரதமர்

    கோர்ட்டு வழக்குகளால் பணிகள் முடங்கிய நிலையில் கடந்த சில ஆண்டுகளாக விரைவுபடுத்தப்பட்டு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.

    இத்திட்டம் தொடங்கி 17 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் ஒரு சில நாட்களில் இந்த வழித்தடத்தில் சேவையை தொடங்க தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது. அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் இன்று அதிவேக சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது.

    வேளச்சேரி-பரங்கிமலை இடையான 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சிறப்பு ரெயில் மூலம் இன்று மதியம் 2 மணி முதல் 5.30 மணி வரை இந்த சோதனை ஓட்டம் முதன்மை ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் தலைமையில் நடக்கிறது.

    இந்த சோதனை ஓட்டத்தின்போது அனுமதி இல்லாத நபர்கள் யாரும் ரெயில் தண்டவாளங்களை நெருங்கவோ அதன் அருகில் வேலை செய்யவோ வேண்டாம் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    மருத்துவர்கள் 45% தீக்காயங்கள் இருப்பதாக மதிப்பிட்டுள்ளனர்.

    மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தின் கோரடி பகுதியில் புதன்கிழமை நான்கு வயது சிறுவனுக்கு ஹோலி பண்டிகை மிகவும் கொடூரமாக மாறியது. சிறுவன் தன்மீது வண்ண நீரை தெளித்ததால் கோபமடைந்த அவனது பாட்டி அவன் மீது வெந்நீரை ஊற்றினாள்.

    மார்ச் 3-ஆம் தேதி ஆராம்ஷின் பகுதியின் வார்டு எண் 2-இல் நடந்த இந்த சம்பவம், சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது தொடர்பான அதிர்ச்சி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

    சிறுவன் தனது வீட்டிற்கு வெளியே வண்ணப்பூச்சு நிரப்பப்பட்ட ஸ்ப்ரே பாட்டிலுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, சூடாக்கப்பட்ட தண்ணீரை வாளியில் நிரப்பிக் கொண்டிருந்த அவனது பாட்டி சிந்து தாக்கரே மீது தவறுதலாக தெளித்தான். இதனால் கோபமடைந்த பாட்டி, சிறுவன் மீது கொதிக்கும் நீரை ஊற்றியதாக போலீசார் தெரிவித்தனர்.

    வெந்நீர் ஊற்றியதை அடுத்து இடுப்புக்குக் கீழே பலத்த தீக்காயங்களுக்கு ஆளான சிறுவன், நாக்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் 45% தீக்காயங்கள் இருப்பதாக மதிப்பிட்டுள்ளனர். அந்தப் பெண் மீது குற்றப்பதிவு செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    வீடியோவில், கருப்பு சேலையில் சிந்து தண்ணீர் நிறைந்த வாளியுடன் நடந்து செல்வது காட்டப்பட்டுள்ளது. குழந்தை அவளை நெருங்கி வந்து அவள் மீது வண்ணங்களைத் தெளிக்க முயற்சிக்க, அவள் வாளியிலிருந்து தண்ணீரை அவன் மீது எறிந்தாள். குழந்தை வலியால் அலறிக் கொண்டு அந்தப் பெண்ணிடமிருந்து குதிக்கிறது. குளிர்ந்த நீர் இருந்த மற்றொரு பெண், வாளியுடன் வந்து, குழந்தையின் வலியைக் குறைக்க குளிர்ந்த நீரை ஊற்றுகிறாள். விரைவில் பாட்டியும் சேர்ந்து குழந்தையின் தீக்காயங்களில் குளிர்ந்த நீரை ஊற்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.



    • ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் போர் தொடுத்ததால் ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது.
    • பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் வாங்க ஏராளமானோர் அணிவகுத்து வந்தனர்.

    வாணியம்பாடி:

    ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் போர் தொடுத்ததால் ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் காரணமாக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என்றும், இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயரும் என்றும் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின.

    இதனைத்தொடர்ந்து வாணியம்பாடி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் வாங்க ஏராளமானோர் அணிவகுத்து வந்தனர். பலர் கேன்களுடனும் குவிந்தனர். அவர்கள் வாணியம்பாடி பஸ் நிலையம், நியூ டவுன், பைபாஸ் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் நீண்டநேரம் வரிசையில் நின்று கொண்டு பெட்ரோல் மற்றும் டீசலை தங்கள் வாகனங்களிலும், கேன்களிலும் நிரப்ப அலைமோதினர்.

    இதனால் அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் பதற்றமான சூழல் நிலவியது. பெட்ரோல் நிலைய ஊழியர்கள் இது வதந்தி என்று கூறி அவர்களை கட்டுப்படுத்த முயன்றபோது வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த நகர போலீசார் பெட்ரோல் நிலையங்களுக்கு விரைந்து வந்தனர். பெட்ரோல்-டீசல் விலை உயரும் என்பது வதந்தி என்று கூறி கூடியிருந்த அனைவரையும் கலைந்து போக செய்தனர். தொடர்ந்து பெட்ரோல் நிலையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவங்கள் காரணமாக வாணியம்பாடி முழுவதும் பரபரப்பாக இருந்தது.

    • ஈரானில் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலிகாமேனி உள்பட ஏராளமானோர் கொல்லப்பட்டு உள்ளனர்.
    • இந்த போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை நேற்று 1,000-ஐ கடந்து விட்டது.

    ஈரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் கூட்டாக நடத்தி வரும் தாக்குதல் நேற்று 5-வது நாளை எட்டியது. வளைகுடா பிராந்தியம் முழுவதும் விரிவடைந்துள்ள இந்த போரில் ஈரானில் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலிகாமேனி உள்பட ஏராளமானோர் கொல்லப்பட்டு உள்ளனர். மிகவும் தீவிரமாக நடந்து வரும் இந்த போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை நேற்று 1,000-ஐ கடந்து விட்டது.

    ஈரானின் புதிய தலைவராக யாரை தேர்ந்தெடுத்தாலும் கொலை செய்வோம்- இஸ்ரேல்

    அதன்படி நாடு முழுவதும் இதுவரை 1,045 பேர் கொல்லப்பட்டு இருப்பதாக அந்த நாட்டு அரசு நிறுவனம் தெரிவித்து உள்ளது. இவை அடையாளம் காணப்பட்டு அடக்கத்துக்கு தயாராக உள்ள உடல்களின் எண்ணிக்கை என ஈரானின் தியாகிகள் மற்றும் படைவீரர்கள் நலனுக்கான அந்த நிறுவனம் கூறியிருந்தது.

    • உலகிற்கு கேடு விளைவிக்கும் செயலுக்கு நாங்கள் உடந்தையாக இருக்க மாட்டோம்.
    • இது எங்கள் கொள்கை மற்றும் நலன்களுக்கு எதிரானது என கூறினார்.

    மாட்ரிட்:

    அமெரிக்காவின் வர்த்தக மிரட்டலுக்கு பயந்து எங்கள் முடிவை மாற்றிக்கொள்ள மாட்டோம் என ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் அதிரடியாக அறிவித்துள்ளார்.

    ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் ராணுவ நடவடிக்கைகளுக்கு ஸ்பெயின் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. குறிப்பாக, ஸ்பெயினில் உள்ள கூட்டு ராணுவத் தளங்களை ஈரான் மீதான தாக்குதலுக்கு பயன்படுத்த அமெரிக்காவிற்கு ஸ்பெயின் அனுமதி மறுத்துள்ளது.

    இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், "பேச்சை கேட்காவிட்டால் ஸ்பெயின் உடனான வர்த்தகத்தை முற்றிலுமாக துண்டிப்போம்" என கடந்த சில நாட்களுக்கு முன் எச்சரிக்கை விடுத்தார்.

    இந்த மிரட்டலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஸ்பெயின் நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் பெட்ரோ சான்செஸ், "ஈரான் போர் என்பது லட்சக்கணக்கான உயிர்களுடன் விளையாடும் 'ரஷியன் ரவுலட்' (ஒரே ஒரு தோட்டா மட்டும் நிரப்பப்பட்டு துப்பாக்கியில் தலையில் சுட்டு விளையாடுவது) போன்ற ஆபத்தானது.

    வெறும் வர்த்தகப் பழிவாங்கல்களுக்கு பயந்து, உலகிற்கு கேடு விளைவிக்கும் செயலுக்கு நாங்கள் உடந்தையாக இருக்க மாட்டோம். இது எங்கள் கொள்கை மற்றும் நலன்களுக்கு எதிரானது" என திட்டவட்டமாக தெரிவித்தார்.

    தெற்கு ஸ்பெயினில் உள்ள இரண்டு முக்கிய ராணுவத் தளங்கள் குறித்து பேசிய டிரம்ப். "ஸ்பெயின் அனுமதி அளிக்காவிட்டாலும், நாங்கள் நினைத்தால் அங்கு விமானங்களை இறக்கி பயன்படுத்த முடியும்" என தன்னிச்சையாக கூறினார். ஆனால், அந்த தளங்கள் ஸ்பெயினின் கட்டுப்பாட்டில் இருப்பதை சுட்டிக்காட்டியுள்ள சான்செஸ், போருக்கு 'நோ' என்ற வார்த்தைகளில் தனது நிலைப்பாட்டைச் சுருக்கினார்.

    ஏற்கனவே காசா போரின் போது இஸ்ரேலை விமர்சித்த ஸ்பெயின், இப்போது ஈரான் விவகாரத்திலும் அமெரிக்காவை எதிர்ப்பது சர்வதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக உள்ள ஸ்பெயின் மீது டிரம்ப் எப்படி தனிப்பட்ட முறையில் வர்த்தகத் தடையை விதிக்க முடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    மேலும், இந்த போர் ஈராக் போரைப் போலவே பயங்கரவாதத்தை மீண்டும் தூண்டிவிடும் என்றும் சான்செஸ் எச்சரித்துள்ளார்.

    மத்திய கிழக்கு நாடுகளில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது.

    அணுசக்தி போட்டி காரணமாக ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கூட்டு தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த சனிக்கிழமை முதல் தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. மேலும், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது.

    கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதைத் தொடர்ந்து பல நாடுகளில் வான்வெளி மூடப்பட்டு விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஈரான் மற்றும் பிற வளைகுடா நாடுகள் மீது வான்வெளி கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த பிப்ரவரி 28 முதல் மார்ச் 3 வரை மத்திய கிழக்கு மற்றும் குறிப்பிட்ட சர்வதேச இடங்களுக்கு 500-க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்யப்பட்டதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

    "மத்திய கிழக்கு மற்றும் குறிப்பிட்ட சர்வதேச இடங்களுக்கு பிப்ரவரி 28 முதல் மார்ச் 3-ஆம் தேதி வரை 500-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எங்கள் செயல்பாட்டுக் குழுக்கள் தொடர்ந்து வளர்ந்து வரும் பிராந்திய முன்னேற்றங்களை மதிப்பாய்வு செய்து வருகின்றன, விமான அட்டவணைகளை மறுசீரமைக்கின்றன. மேலும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவதைக் குறைக்கும் நோக்கத்துடன் இந்தியா மற்றும் அந்தந்த சர்வதேச அதிகார வரம்புகளில் உள்ள தொடர்புடைய அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளைத் திட்டமிடுகின்றன," என்று இண்டிகோ தெரிவித்துள்ளது.

    தற்போதைய சூழ்நிலை காரணமாக இந்திய விமான நிறுவனங்களின் 1,221 விமானங்களும், வெளிநாட்டு விமான நிறுவனங்களின் 388 விமானங்களும் (மார்ச் 3 வரை) ரத்து செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    அமைச்சக வலைத்தளத்தின்படி, மார்ச் 3-ஆம் தேதி இந்தியாவில் இருந்து புறப்பட்ட சர்வதேச விமானங்களின் எண்ணிக்கை 356 ஆகும், அதே நேரத்தில் 338 சர்வதேச விமானங்கள் நாட்டின் பல்வேறு சர்வதேச விமான நிலையங்களில் தரையிறங்கின.

    • எரிபத்த நாயனார் குரு பூஜை.
    • குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமானுக்கு அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு மாசி-21 (வியாழக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : துவிதியை மாலை 6.04 மணி வரை பிறகு திருதியை

    நட்சத்திரம் : உத்திரம் காலை 9.09 மணி வரை பிறகு அஸ்தம்

    யோகம் : மரண, சித்தயோகம்

    ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம் : தெற்கு

    நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று சுபமுகூர்த்த தினம், திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்குத் திருமஞ்சன சேவை

    இன்று சுபமுகூர்த்த தினம். எரிபத்த நாயனார் குரு பூஜை. கோவை ஸ்ரீ கோணியம்மன் பாரி வேட்டைக்கு எழுந்தருளல். வேதாரண்யம் ஸ்ரீ சிவபெருமான் புறப்பாடு. காரமடை ஸ்ரீ அரங்கநாதர் சாற்றுமுறை சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்க மன்னார் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்க பால் அபிஷேகம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர ரத வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம்.

    திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சன சேவை. குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமானுக்கு அபிஷேகம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம். திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாளுக்கு திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்கு திருமஞ்சனம். ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் பவனி. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-உயர்வு

    ரிஷபம்-நட்பு

    மிதுனம்-ஜெயம்

    கடகம்-பண்பு

    சிம்மம்-இயல்பு

    கன்னி-இன்பம்

    துலாம்- தெளிவு

    விருச்சிகம்-ஆதரவு

    தனுசு- உதவி

    மகரம்-உறுதி

    கும்பம்-பெருமை

    மீனம்-சாந்தம்

    அறிக்கையில் கூறப்பட்டதைத் தவிர வேறு எந்தத் தகவலும் இல்லை.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது கழுத்தில் ஏற்பட்ட சிவப்பு சொறிக்கு தடுப்பு நோக்கிலான சரும சிகிச்சை மேற்கொண்டு வருவதாக அவரது தனிப்பட்ட மருத்துவர் உறுதிப்படுத்தியுள்ளார். எனினும், இந்த உடல்நிலை குறித்து மேலும் எந்த விவரங்களையும் பகிர வெள்ளை மாளிகை திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

    கடந்த திங்கள்கிழமை வாஷிங்டனில் நடைபெற்ற 'மெடல் ஆஃப் ஹானர்' விருது வழங்கும் விழாவில் டிரம்ப் பங்கேற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களில், அவரது கழுத்தின் வலது பக்கத்தில் –காலர் அருகே சிவப்பு நிறத்தில் புள்ளி புள்ளியாகப் பரவிய சொறி தெளிவாகத் தெரிந்தது.

    புகைப்படங்கள் வேகமாக பரவிய நிலையில் விழாவுக்குப் பிறகு வெளியிடப்பட்ட சுருக்கமான அறிக்கையில், வெள்ளை மாளிகை மருத்துவர் டாக்டர் ஷான் பார்பரெல்லா, "அதிபர் ஒரு பொதுவான கிரீமை தோல் சிகிச்சையாகப் பயன்படுத்தி வருகிறார். இந்த சிகிச்சை ஒரு வாரம் மட்டுமே நீடிக்கும். சிவப்பு நிறம் இரண்டு-மூன்று வாரங்கள் வரை தொடரலாம்" என்று தெரிவித்தார்.

    புதன்கிழமை செய்தியாளர் சந்திப்பில் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட்ட், "மருத்துவரின் அறிக்கையில் கூறப்பட்டதைத் தவிர வேறு எந்தத் தகவலும் என்னிடம் இல்லை" என்று சுருக்கமாக பதிலளித்தார்.

    79 வயதான டிரம்பின் உடல்நிலை அவரது இரண்டாவது பதவிக்காலத்தில் தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வருகிறது. அவரது கைகளில் அவ்வப்போது தென்படும் காயங்கள், கால்களில் ஏற்படும் வீக்கம் ஆகியவை பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன. ஜனவரி மாதத்தில் கைகளில் காயங்கள் தெரிந்தபோது, டிரம்ப் தானே "அடிக்கடி ஆஸ்பிரின் உட்கொள்வதால் ஏற்படுகிறது" என்று விளக்கினார்.

    கடந்த ஜூலை மாதம் கணுக்கால்கள் வீங்கியிருந்ததைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட அல்ட்ராசவுண்ட் பரிசோதனையில், "நாள்பட்ட நரம்பு இரத்த ஓட்டக் குறைபாடு (Chronic Venous Insufficiency)" இருப்பது கண்டறியப்பட்டதாக மருத்துவர் அறிவித்தார். இது 70 வயதுக்கு மேற்பட்டோரிடையே மிகவும் பொதுவான, ஆபத்தற்ற நிலை என்றும் அவர் வலியுறுத்தினார்.

    கடந்த ஆண்டு இரண்டாவது முறையாக அதிபராகப் பதவியேற்றபோது அமெரிக்க வரலாற்றிலேயே மிக வயதான தலைவராக (78) பொறுப்பேற்ற டிரம்ப், தனது உடல்நிலையை முன்னாள் ஜனநாயகக் கட்சி அதிபர் ஜோ பைடனுடன் அடிக்கடி ஒப்பிட்டுப் பேசி வருகிறார்.

    • ஈரான் மீது கடந்த 28-ந்தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் போரை தொடங்கியது.
    • அந்த நாட்டு உச்சபட்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி காமேனியை படுகொலை செய்தது.

    துபாய்:

    ஈரான் மீது கடந்த 28-ந்தேதி போரை தொடங்கிய அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள், அந்த நாட்டு உச்சபட்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி காமேனியை படுகொலை செய்தது. இதைத்தொடர்ந்து புதிய உச்சபட் சத்தலைவரை தேர்ந்தெடுக்கும் பணிகளை ஈரான் முடுக்கி விட்டு உள்ளது. இதில் காமேனியின் மகன் முஜ்தபா தேர்வாகி இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் ஈரானின் புதிய உச்சபட்ச தலைவராக யாரை தேர்ந்தெடுத்தாலும் கொன்று விடுவோம் என இஸ்ரேல் மிரட்டல் விடுத்து உள்ளது.

    இதுகுறித்து அந்த நாட்டு ராணுவ மந்திரி இஸ்ரேல் காட்ஸ் தனது எக்ஸ் தளத்தில், 'இஸ்ரேலை அழித்தல், அமெரிக்காவையும், சுதந்திர உலகையும் பிராந்திய நாடுகளையும் அச்சுறுத்துதல், ஈரானிய மக்களை அடக்குதல் போன்ற திட்டங்களை தொடரவும், வழிநடத்தவும் ஈரானிய பயங்கரவாத ஆட்சியால் நியமிக்கப்படும் ஒவ்வொரு தலைவரும் அழிக்கப்படுவதற்கு இலக்காக இருப்பார்கள். அவரது பெயர் என்ன? எங்கே மறைந்திருக்கிறார்? என்பதெல்லாம் எங்களுக்கு கவலை இல்லை என குறிப்பிட்டு இருந்தார். இஸ்ரேலின் இந்த மிரட்டல் மேலும் பதற்றத்தை அதிகரித்து உள்ளது.

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    நல்லவர்களைச் சந்தித்து நலம் காணும் நாள். சுபச்செய்திகள் வீடு தேடி வரும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும்.

    ரிஷபம்

    நாட்டுப்பற்று மிக்கவர்களின் நல்லாதரவு கிடைக்கும் நாள். செல்வந்தர்களின் ஒத்துழைப்பு உண்டு. புதிய நண்பர்கள் அறிமுகமாவர். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

    மிதுனம்

    கொள்கைப் பிடிப்போடு செயல்படும் நாள். குடும்பத்தாரின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். மனைதேடி மங்கல செய்தி வந்து சேரும்.

    கடகம்

    மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். இல்லத்திற்குத் தேவையான பொருட்களை வாங்குவதில் விரயம் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகளைப் பகைத்துக் கொள்ள வேண்டாம்.

    சிம்மம்

    நம்பிக்கை நடைபெறும் நாள். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். பிள்ளைகள் வழியில் சுபச்செய்தி உண்டு. தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

    கன்னி

    முன்னேற்றம் கூடும் நாள். தன்னம்பிக்கையுடனும், தைரியத்துடனும் செயல்படுவீர்கள். சங்கிலித் தொடர்போல வந்த கடன் சுமை குறையும்.

    துலாம்

    சச்சரவுகள் அகலும் நாள். எந்தவொரு காரியத்தையும் தைரியமாக செய்து முடிப்பீர்கள். உறவினரால் ஏற்பட்ட மனக்கலக்கம் அகலும்.

    விருச்சிகம்

    புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். வி.ஐ.பி.க்களின் சந்திப்பு உண்டு. நேற்று பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.

    தனுசு

    பக்கபலமாக இருப்பவர்களால் சிக்கல்கள் தீரும் நாள். பிரியமாக பழகிய ஒருவரால் ஏற்பட்ட பிரச்சனை தீரும். முக்கிய புள்ளிகளைச் சந்தித்து முடிவெடுப்பீர்கள்.

    மகரம்

    லாபம் இரு மடங்காகும் நாள். உற்சாகத்துடன் பணியாற்றுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு உண்டு.

    கும்பம்

    எதையும் யோசித்துச் செய்ய வேண்டிய நாள். வீண் விரோதங்கள் வரலாம். விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. வெளிவட்டார பழக்கத்தில் பகை ஏற்படலாம்.

    மீனம்

    முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். வரவு திருப்தி தரும். பொதுவாழ்வில் புகழ் கூடும். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் துணை புரிவர். வாகனம் வாங்கும் யோகம் உண்டு.

    • எம்ஆர்எப் தொழிற்சாலை சுமார் 340 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ளது.
    • இதனால் நேரடியாக 1000 பேருக்கு வேலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    சிவகங்கை மாவட்டம் சிப்காட்-இலுப்பைக்குடி தொழிற்பூங்காவில், ரூ.5,300 கோடியில் எம்ஆர்எப் நிறுவனத்தின் டயர் உற்பத்தி ஆலை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.

    அடுத்த 12 ஆண்டுகளில் 1,000 பேருக்கு வேலை அளிக்கும் வகையில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் நேற்று கையெழுத்தானது.

    சுமார் 340 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள இந்தத் தொழிற்சாலை தமிழ்நாடு அரசின் கைடன்ஸ் திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் நேரடியாக ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    எம்ஆர்எப் நிறுவனம் டயர் தயாரிப்பில் முன்னணியில் உள்ள நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×