என் மலர்
- சென்னையில் போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் 19 ஆயிரம் போலீசார் புத்தாண்டு பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
- நகர் முழுவதும் 426 இடங்களில் தடுப்புகள் அமைத்து சட்டம்-ஒழுங்கு போலீசாரும், போக்குவரத்து போலீசாரும் ஒருங்கிணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னையில், புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான 'ஹாட் ஸ்பாட்'டான மெரினா கடற்கரையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31-ந்தேதி இரவு மக்கள் உற்சாகம் கரை புரண்டு ஓடும். இரவு 8 மணிக்கே மக்கள் கூட்டம் அலைமோதும். ஆனால் நேற்று இரவு 10 மணிக்கு மேலாகியும் மக்கள் கூட்டம் மிகவும் குறைவாக இருந்தது. இரவு 12 மணியை நெருங்கியபோது மக்கள் கூட்டம் ஓரளவு காணப்பட்டது.
போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம் எதிரே உள்ள மணிக்கூண்டின் கடிகார முள் 12 மணியை தொட்டவுடன், 'ஹாப்பி நியூ இயர்' என்று வாழ்த்து கோஷங்களை எழுப்பியும், 'கேக்' வெட்டியும் மக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் புத்தாண்டை வரவேற்றனர்.
மெரினா கடற்கரையில் வழக்கமான ஆட்டம்-பாட்டம்- கொண்டாட்டம் குறைந்திருந்த நிலையில் பெசன்ட் நகர் கடற்கரையில் மக்கள் உற்சாகம் கரை புரண்டு ஓடியது.
புத்தாண்டு கொண்டாட்டங்களில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாத வகையில் தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சென்னையில் போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் 19 ஆயிரம் போலீசார் புத்தாண்டு பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
மெரினா, பெசன்ட் நகர் கடற்கரையில் போலீசார் அதிகளவில் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 'டிரோன்' கேமராக்கள் மூலமாகவும் மக்கள் கூட்டத்தை கண்காணித்தனர். மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபவர்கள், அதிவேகமாக வாகனங்களை ஓட்டி செல்பவர்கள், வீலிங் சாகசம் செய்பவர்கள், மதுபோதையில் வாகனங்களை ஓட்டுபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காக நகர் முழுவதும் 426 இடங்களில் தடுப்புகள் அமைத்து சட்டம்-ஒழுங்கு போலீசாரும், போக்குவரத்து போலீசாரும் ஒருங்கிணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
விபத்தில்லா புத்தாண்டு கொண்டாட்டமாக அமையும் வகையில் சென்னையில் உள்ள 25 மேம்பாலங்களும் நேற்றிரவு 10 மணி முதல் மூடப்பட்டன. புத்தாண்டு தினமான இன்று கடற்கரைகள், சுற்றுலாத்தலங்களில் மக்கள் அதிகளவில் கூடுவார்கள் என்பதால் இன்றும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.
இதன் காரணமாக சென்னை மாநகரில் நேற்று இரவு மோட்டார் சைக்கிள் விபத்துகளோ, குற்ற செயல்களோ எதுவும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றிரவு சென்னையில் எந்த இடத்திலும் விபத்தால் உயிரிழப்பு, குற்றச்சம்பவங்கள் நடக்கவில்லை என சென்னை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.
உரிய முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு இருந்ததால் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்று சென்னை மாநகர காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நாடு முழுவதும் ராணுவத்திற்குப் பின்னால் ஒற்றுமையாக இருக்கிறது.
- உக்ரைனுக்கு எதிரான சிறப்பு ராணுவ நடவடிக்கையில் ரஷியா தனது இலக்குகளை எட்டி வெற்றி பெறும்.
ரஷியா-உக்ரைன் இடையேயான 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார்.
இதற்காக 20 அம்சங்கள் கொண்ட அமைதி ஒப்பந்தத்தை டிரம்ப் பரிந்துரைத்தார். இந்த ஒப்பந்தம் தொடர்பாக ரஷியா-உக்ரைனுடன் அமெரிக்க குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
மேலும் ரஷிய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோருடன் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஆனாலும் அமைதி ஒப்பந்தம் தொடர்பாக இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்த நிலையில் ரஷிய அதிபர் புதின், புத்தாண்டையொட்டி நாட்டு மக்களுக்கு தொலைகாட்சியில் உரையாற்றினார். இதில் உக்ரைன் போர்க்களத்தில் உள்ள ரஷிய வீரர்களை பாராட்டினார்.
அவர் கூறியதாவது:-
போர்க்களத்தில் உள்ள எங்களின் நாயகர்களான உங்கள் (ரஷிய வீரர்கள்) மீதும், நமது வெற்றியின் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளோம்.
ரஷியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் மற்றும் நான் உங்களுக்கு உறுதிஅளிக்கிறோம். புத்தாண்டின் இந்தத் தருணத்தில் வீரர்களுக்காக வேண்டிக்கொள்கிறோம்.
நாடு முழுவதும் ராணுவத்திற்குப் பின்னால் ஒற்றுமையாக இருக்கிறது. உங்களை பற்றி மக்கள் நினைக்கிறார்கள். உங்களை நம்புகிறார்கள்.
நமது அனைத்து வீரர்களுக்கும் தளபதிகளுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். நாங்கள் உங்களையும் எங்கள் வெற்றியையும் நம்புகிறோம்.
உக்ரைனுக்கு எதிரான சிறப்பு ராணுவ நடவடிக்கையில் ரஷியா தனது இலக்குகளை எட்டி வெற்றி பெறும். ரஷியா மக்களின் ஒற்றுமை, தாய்நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கிறது. இவ்வாறு புதின் கூறினார்.
இதற்கிடையே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியதாவது:-
அமைதி ஒப்பந்தம் 90 சதவீதம் தயாராகிவிட்டது. 10 சதவீதம் மீதமுள்ளது. போரை முடிவுக்குக் கொண்டு வர ஒப்பந்தம் ஏற்படுவதற்கு உக்ரைன் 10 சதவீத தொலைவில் உள்ளது.
அந்த 10 சதவீதம்தான் அமைதியின் தலைவிதியையும், உக்ரைன் மற்றும் ஐரோப்பாவின் தலைவிதியையும் தீர்மானிக்கும்.
போரை முடிவுக்குக் கொண்டுவர உக்ரைன் விரும்பினாலும், எதிர்கால ஆக்கிரமிப்பைத் தடுக்க எந்தவொரு தீர்வும் வலுவான பாதுகாப்பு உத்தரவாதங்களின் அடிப்படையில் அமைய வேண்டும்.
உக்ரைனின் நீண்டகால பாதுகாப்பை பலவீனப்படுத்தக்கூடிய அல்லது ரஷியாவைத் தூண்டிவிடக்கூடிய சலுகைகள் மூலம் அமைதி ஒப்பந்தம் ஏற்படக்கூடாது. நாங்கள் சரணடைய தயாராக இருக்கிறோம் என்று யாராவது நினைத்தால் அது தவறானது என்றார்.
- ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெறுவது வழக்கம்.
- புத்தாண்டையொட்டி பேராலயம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கண்கொள்ளாக்காட்சியாக திகழ்ந்தது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உலக பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த பேராலயம் கீழை நாடுகளின் "லூர்து நகர்" என்று அழைக்கப்படுகிறது.
இந்த ஆலயத்திற்கு உலகின் பல்வேறு நாடுகள், மாநிலங்கள், மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் வந்து, புனித ஆரோக்கிய மாதாவை பயபக்தியுடன் வழிபட்டு செல்வது வழக்கம்.
கிறிஸ்தவ ஆலயங்களில் "பசிலிக்கா" என்ற சிறப்பு அந்தஸ்து பெற்ற ஆலயமாக வேளாங்கண்ணி பேராலயம் விளங்குகிறது.
பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெறுவது வழக்கம்.
அதேபோல் இந்த ஆண்டும் புத்தாண்டு பிறப்பையொட்டி நேற்று இரவு விண்மீன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
இதில் 2025-ம் ஆண்டிற்கு நன்றி தெரிவித்து வழியனுப்பும் வகையில், இரவு 10.45 மணி முதல் 11.45 மணி வரை பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் மறையுரையும், சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து, புத்தாண்டை வரவேற்கும் விதமாக இரவு 11.45 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் தலைமையில், 10-க்கும் மேற்பட்ட அருட்தந்தையர்கள் பங்கேற்ற சிறப்பு பாடல் திருப்பலி நடைபெற்றது.

நள்ளிரவு 12 மணிக்கு ஆயர் சகாயராஜ் குத்து விளக்கேற்றி புத்தாண்டை வரவேற்றார். அப்போது பேராலய வளாகத்தில் வாணவேடிக்கைகள் நடைபெற்றது.
புத்தாண்டையொட்டி பேராலயம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கண்கொள்ளாக்காட்சியாக திகழ்ந்தது.
பின்னர் பேராலயம் சார்பில் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.
இதில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
- முரளி கிருஷ்ணாவை குண்டூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
- ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்த போது அவரது பெருங்குடலில் பேனா இருப்பது தெரிய வந்தது.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் கோத்தபேட்டையை சேர்ந்தவர் சீனிவாச ராவ். இவரது மகன் முரளி கிருஷ்ணா (வயது 16).
இவர் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 9-ம் வகுப்பு படித்து வந்தார். அப்போது இவரது நண்பர்கள் பேனாவை விழுங்கினால் ரூ.50 தருவதாக பந்தயம் கட்டினர். அப்போது முரளி கிருஷ்ணா பேனாவை விழுங்கினார்.
அன்று முதல் முரளி கிருஷ்ணாவுக்கு வயிற்று வலி இருந்து வந்தது. இருப்பினும் தனக்கு வயிற்று வலி இருப்பது குறித்து பெற்றோரிடம் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் கடந்த 18-ந்தேதி முரளி கிருஷ்ணாவுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. அவரது நண்பர்கள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு முரளி கிருஷ்ணா பேனாவை விழுங்கியதாக அவரது பெற்றோரிடம் தெரிவித்தனர். இதையடுத்து முரளி கிருஷ்ணாவை குண்டூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்த போது அவரது பெருங்குடலில் பேனா இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து டாக்டர்கள் கவுண்டர் குழாய் மூலம் ரெட்ரோகிரேட் எண்டோஸ்கோபி முறையில் பெருங்குடலில் இருந்த பேனாவை அறுவை சிகிச்சையின்றி அகற்றினர். இதனால் மாணவரின் பெற்றோர் நிம்மதி அடைந்தனர்.
- தங்கம் விலை மீண்டும் ரூ.1 லட்சத்துக்கு கீழ் வந்துள்ளது.
- வெள்ளி விலை இன்று குறைந்து உள்ளது.
தங்கம், வெள்ளி விலை தாறுமாறாக உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை பதிவு செய்திருந்தது. அதன்படி, தங்கம் கடந்த மாதம் (டிசம்பர்) 15-ந்தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டியது.
பின்னர் சற்று விலை குறைந்து மீண்டும் 22-ந்தேதிக்கு பிறகு ரூ.1 லட்சத்துக்கும் குறையாமல் எகிறியது. தொடர்ந்து விலை அதிகரித்து, கடந்த மாதம் 27-ந்தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 800 என்ற விலையிலும், அதேநாளில் வெள்ளி ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 85 ஆயிரம் என்ற விலையிலும் புதிய உச்சத்தை எட்டிப் பிடித்தது.
மேலும் விலை அதிகரித்துவிடுமோ? என அச்சம் கொண்ட நிலையில், விலை குறையத் தொடங்கியது. கடந்த 29-ந்தேதியில் இருந்து விலை குறைந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக 3-வது நாளாக நேற்றும் விலை சரிந்து காணப்பட்டது.
நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 600-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 800-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம், மாலை நேர நிலவரப்படி மேலும் கிராமுக்கு ரூ.70-ம், சவரனுக்கு ரூ.560-ம் என மொத்தம் ஒரே நாளில் கிராமுக்கு ரூ.120-ம், சவரனுக்கு ரூ.960-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 480-க்கும், ஒரு சவரன் ரூ.99 ஆயிரத்து 840-க்கும் விற்பனை ஆனது. இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் ரூ.1 லட்சத்துக்கு கீழ் வந்துள்ளது.
இந்நிலையில் தங்கம் விலை இன்றும் குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.12,440-க்கும், சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.92,520-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் இன்று குறைந்து உள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.256-க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
31-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.99,840
30-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,00,800
29-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,160
28-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,800
27-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,800
26-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,03,120
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
31-12-2025- ஒரு கிராம் ரூ.257
30-12-2025- ஒரு கிராம் ரூ.258
29-12-2025- ஒரு கிராம் ரூ.281
28-12-2025- ஒரு கிராம் ரூ.285
27-12-2025- ஒரு கிராம் ரூ.285
26-12-2025- ஒரு கிராம் ரூ.254
- மக்கள் உற்சாகத்துடன் புத்தாண்டை வரவேற்றனர்.
- புத்தாண்டு பிறந்ததையடுத்து அரசியல் தலைவர்கள் பலரும் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
2025-ம் ஆண்டு விடைபெற்று 2026-ம் ஆண்டு இனிதே பிறந்துள்ளது. உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியது. மக்கள் உற்சாகத்துடன் புத்தாண்டை வரவேற்றனர்.
புத்தாண்டு பிறந்ததையடுத்து அரசியல் தலைவர்கள் பலரும் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
புத்தாண்டு அன்று ஆண்டுதோறும் ரசிகர்களை நேரில் சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து கூறுவது வழக்கம்.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தின் முன்பு திரண்டிருந்த ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் நேரில் வந்து ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
- சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
- நடிகர் யோகி பாபு நாயகனாக நடித்து வெளியான ‘மண்டேலா’ படம் 2 தேசிய விருதுகளை பெற்றுள்ளது.
- நடிகர் விஜய் சேதுபதி படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இயக்குநர் அமீரின் 'யோகி' திரைப்படம் மூலம் ரசிகர்களிடையே பிரபலமாக அறியப்பட்டவர் நடிகர் யோகி பாபு. இதனை தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்பட ஏராளமான மொழிகளைச் சேர்ந்த திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.
இதனிடையே, நடிகர் யோகி பாபு நாயகனாக நடித்து வெளியான 'மண்டேலா' படம் 2 தேசிய விருதுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நடிகர் யோகிபாபு நடிக்கும் 300-வது திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். இப்படத்திற்கு 'அர்ஜுனன் பேர் பத்து' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு நடிகர் விஜய் சேதுபதி படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் ராஜ்மோகன் இயக்கத்தில் உருவாகும் இந்த புதிய படத்தில் நடிகர் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். டி.இமான் இசையமைக்கும் இப்படத்தில் காளி வெங்கட், மைனா நந்தினி, அருள்தாஸ், சென்றாயன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
- 2024-ம் ஆண்டு இந்தியாவில் 2 கோடியே 34 லட்சத்து 13 ஆயிரத்து 498 குழந்தைகள் பிறந்துள்ளன.
- தமிழ்நாட்டை பொறுத்தவரையில் பிறப்பு எண்ணிக்கை சுமார் 7 லட்சத்து 80 ஆயிரமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. உலக மக்கள் தொகையை கணக்கிட்டால் தற்போதைய நிலவரப்படி, 823 கோடியாக இருக்கிறது. இதில் இந்தியாவில் 146.3 கோடியாக உள்ளது. அதாவது உலக மக்கள் தொகையில் 17.7 சதவீதத்தை இந்தியா கொண்டிருக்கிறது.
இந்தநிலையில் 2025-ம் ஆண்டில் மட்டும் எவ்வளவு பிறப்பு எண்ணிக்கை இருந்துள்ளது என்ற விவரம் வெளியாகி உள்ளது. ஐ.நா. 23.1 மில்லியன் அதாவது 2 கோடியே 31 லட்சம் இருக்கலாம் என கணித்திருந்தது.
அதன்படி, ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை பிரிவு வெளியிட்ட அறிக்கையில், 2025-ல் இந்தியாவில் பிறப்பு எண்ணிக்கை 2 கோடியே 30 லட்சத்து 7 ஆயிரம் என்று கூறியுள்ளது. இது உலகிலேயே ஒரு நாட்டில் ஆண்டில் அதிகபட்ச பிறப்பு எண்ணிக்கையாக கணிக்கப்பட்டு இருக்கிறது.
இதே நிலையில் 2024-ம் ஆண்டு இந்தியாவில் 2 கோடியே 34 லட்சத்து 13 ஆயிரத்து 498 குழந்தைகள் பிறந்துள்ளன. சீனாவை விட 3 மடங்கு அதிகம் பிறப்பு எண்ணிக்கையை கொண்டிருக்கிறது இந்தியா. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் பிறப்பு எண்ணிக்கை சுமார் 7 லட்சத்து 80 ஆயிரமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்தியாவில் பிறப்பு எண்ணிக்கை அதிகமாக இருப்பது போல் தெரிந்தாலும், பிறப்பு விகிதம் என்பது கடந்த ஆண்டுகளைவிட குறைந்து வருவதாகவே சொல்லப்படுகிறது. 1960-களில் ஒரு பெண்ணுக்கு சராசரியாக 6 குழந்தைகள் என்று இருந்த நிலை மாறி, இப்போது 1.9 ஆக குறைந்துள்ளது. இது 2.1 என்ற நிலைத்தன்மை விகிதத்தை விட குறைவு ஆகும்.
பிறப்பு விகிதம் குறைந்ததற்கு தாமதமான திருமணங்கள், கருத்தரிப்புகள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு காரணமாக குடும்ப கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு, குழந்தை வளர்ப்புக்கான பொருளாதார செலவுகள் அதிகரிப்பு ஆகியவை காரணமாக சொல்லப்படுகிறது.
2025-ம் ஆண்டு பிறப்பு எண்ணிக்கையை பொறுத்தவரையில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக, சீனாவில் 87 லட்சமாகவும், நைஜீரியாவில் 76 லட்சமாகவும், பாகிஸ்தானில் 69 லட்சமாகவும், காங்கோவில் 46 லட்சமாகவும், இந்தோனேசியாவில் 44 லட்சமாகவும், எத்தியோப்பியாவில் 42 லட்சமாகவும், அமெரிக்காவில் 37 லட்சமாகவும், வங்காளதேசத்தில் 34 லட்சமாகவும், பிரேசிலில் 25 லட்சமாகவும் இருந்துள்ளன.
நடப்பு ஆண்டில் (2026) இந்தியாவில் பிறப்பு எண்ணிக்கை 2 கோடியே 29 லட்சமாக இருக்கலாம் என ஐ.நா. கணித்திருக்கிறது. ஐ.நா.வின் கணிப்புகள் ஒருபுறம் இருக்க மத்திய அரசு 2026 ஏப்ரல் 1-ந்தேதி முதல் நாட்டின் அதிகாரப்பூர்வ மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகளை தொடங்க திட்டமிட்டுள்ளது. இது 2027-ல் நிறைவடையும்போது, இந்தியாவின் உண்மையான பிறப்பு மற்றும் இறப்பு தரவுகள் இன்னும் துல்லியமாகத் தெரியவரும்.
- தொலைத்தொடர்பு துறையை மேம்படுத்துவதற்காக அவர் பாடுபட்டு வருகிறார்.
- ஜோதிராதித்ய சிந்தியாவின் நீண்ட ஆயுளுக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும் பிரார்த்திக்கிறேன்.
மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் 55-வது பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
தொலைத்தொடர்பு துறையை மேம்படுத்துவதற்காக அவர் பாடுபட்டு வருகிறார். வடகிழக்கு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான அவரது முயற்சிகள் அதே அளவு குறிப்பிடத்தக்கவை.
அவரது நீண்ட ஆயுளுக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும் பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.











