2 அல்ல 20 நாள் பிரசாரம் செய்தாலும் விஜயின் மாஸ் தாராபுரத்தில் பாஸ் ஆகாது - ஆர்.பி.உதயகுமார்

ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த 4 மாத காலத்தில் தமிழக அரசு ரூ. 40,000 கோடி கடன் வாங்கியும் எந்தவொரு நிலையான திட்டத்தையும் செயல்படுத்தவில்லை.
RB Udhayakumar
Published on
Summary

பதவி ஆசைக்கும் அதிகார ஆஃபர்களுக்கும் அதிமுக தொண்டர்கள் ஒருபோதும் இரையாக மாட்டார்கள் என்று ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

எடப்பாடி பழனிசாமி

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் இடைத்தேர்தலில் தளவாய் பட்டினம் பகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வாக்காளர் மத்தியில் பேசியதாவது:-

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் தாராபுரம் பகுதியில் நிறைவேற்றப்பட்ட நீர் மேலாண்மை திட்டங்கள், உயர்தர சாலை வசதிகள், குடிநீர் திட்டங்கள் ஆகியவை இன்னமும் தொகுதி மக்களால் மறக்கப்படவில்லை. வேட்பாளர் பானுமதி கருணாகரன் ஏற்கனவே மாவட்ட கவுன்சிலராக இருந்து பகுதி மக்களுக்கு பல்வேறு நன்மைகளைச் செய்து நன்மதிப்பைப் பெற்றவர். மக்களோடு மக்களாக எளிமையாகப் பழகக்கூடிய அவரை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கும் வாய்ப்பு மக்களுக்கு உள்ளது.

மின்வெட்டு

ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த 4 மாத காலத்தில் தமிழக அரசு ரூ. 40,000 கோடி கடன் வாங்கியும் எந்தவொரு நிலையான திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. கடுமையான மின்வெட்டு, விவசாயிகள் தட்கல் முறையில் பணம் கட்டியும் இலவச மின்சாரம் வழங்கப்படாதது, காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் என அனைத்து துறைகளிலும் சர்ச்சைகளும் அவநம்பிக்கையுமே நிலவுகின்றன.

விஜய் பிரசாரம்

மக்கள் மத்தியில் எழுந்துள்ள கடும் கோபத்தின் காரணமாகவே, தவெக வேட்பாளரால் காவல்துறை பாதுகாப்பு இல்லாமல் தொகுதிக்குள் பிரசாரத்திற்குக்கூட செல்ல முடிவதில்லை. 'விஜயின் மாஸ், தாராபுரத்தில் பாஸ் ஆகாது; பெயிலியர் தான் ஆகும்' என்பதைத் தொகுதி மக்கள் தெளிவாக உணர்த்தியுள்ளனர். கொளத்தூர் தொகுதியில் கொத்து புரோட்டா போட்டதாக கூறும் விஜய் இங்கு எதற்கு 2 நாள் பிரசாரம். அவர் 2 நாள் அல்ல 20 நாள் வந்து பிரசாரம் செய்தாலும் தாராபுரம் மக்கள் அவரை கொத்து புரோட்டா போடுவது உறுதி.

செங்கோட்டையன்

வரும் 2-ஆம் தேதி தாராபுரம் அருகே உள்ள தளவாய்பட்டணம் பகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேட்பாளரை ஆதரித்துப் பெருந்திரளான மக்கள் மத்தியில் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார். அதிமுகவிலிருந்து மேலும் பல எம்.எல்.ஏ-க்கள் தவெக-வுக்குச் செல்வார்கள் என்று செங்கோட்டையன் கூறிவருவது அவருடைய பகல்கனவு.

அதிமுக தொண்டர்கள்

54 ஆண்டுகால பாரம்பரியமும், 31 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்திலும் இருந்த இந்த இயக்கத்தை எந்தவொரு 'ஓடுகாலி'யாலும் அழிக்க முடியாது. பதவி ஆசைக்கும் அதிகார ஆஃபர்களுக்கும் அதிமுக தொண்டர்கள் ஒருபோதும் இரையாக மாட்டார்கள். செங்கோட்டையன் மீண்டும் எடப்பாடியாரிடமே வந்து நிற்கும் காலம் விரைவில் வரும்.

இவ்வாறு அவர் பேசினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com