

முதலமைச்சர் 110 விதியின் கீழ் அறிவிக்கின்ற எல்லா அறிவிப்புகளும் மிக மிக சிறப்பாக வரவேற்கக்கூடியதாக இருக்கிறது என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டசபையில் இன்றைய நிகழ்வில் முதலில் வினாக்கள்-விடை நேரம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக்கக் கோரி தனித்தீர்மானத்தை கொண்டு வந்து முதலமைச்சர் விஜய் பேசினார்.
இதனை தொடர்ந்து தனித்தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் விவாதம் நடைபெற்றது. தனித்தீர்மானத்தை திமுக வரவேற்றது. , அதிமுக ஆதரவு தெரிவித்தது. இதையடுத்து பா.ம.க. எம்.எல்.ஏ. சவுமியா அன்புமணி பேசியதாவது:-
ஐகோர்ட்டில் தமிழை முதன்மை மொழியாக்கக்கோரி முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தீர்மானத்திற்கு பாமக முழு மனதுடன் வரவேற்கிறது. உலகில் மக்கள் அதிகம் பேசும் முதல் 25 மொழிகளில் தமிழும் உள்ளது. ஒரு வாரத்திற்கு 2 மொழிகள் அழிகிறது. 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் தமிழ் மொழிப்பாடம் என்ற வார்த்தையே இல்லை. மொழிப்பாடம் என்று தான் இருக்கிறது, அதை சரி செய்ய வேண்டும் என்றார்.
தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-
முதலமைச்சர் 110 விதியின் கீழ் அறிவிக்கின்ற எல்லா அறிவிப்புகளும் மிக மிக சிறப்பாக வரவேற்கக்கூடியதாக இருக்கிறது. இன்று மட்டும் இல்லை தினந்தோறும் பார்க்கிறேன். அந்த அறிவிப்புகள் எல்லாம் ஆக்கப்பூர்வமாக வெகு விரைவில் செயல்வடிவம் பெற வேண்டும் என்பதையும் இந்த அவையில் குறிப்பிட கடமைப்பட்டுள்ளேன். கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கு முன்பு இருந்தே உருவானது தான் தமிழ். நான் முதல்வரிடம் கேட்டுக்கொள்வது ஒன்றுதான். இது தமிழ்நாடு தமிழ்மொழிக்கு மிகமிக முக்கியத்துவம் தர வேண்டும். தமிழ் மொழி தமிழ்நாட்டில் முக்கிய இடத்தை பெற வேண்டும் என்றால் பள்ளிகளில் இருந்தே அதை கண்டிப்பாக கொண்டு வரவேண்டும்.
புதிதாக தலைமைச் செயலகம் கட்டப்படும் என்று முதலமைச்சர் அறிவித்து உள்ளார். இது வரவேற்கத்தக்கது. எந்த ஆட்சி வரட்டும், போகட்டும் ஆனால் நீங்கள் உருவாக்கப்போகும் புதிய தலைமைச் செயலகம் யார் வந்தாலும் எந்த காலத்திற்கும் தடை செய்யவே முடியாத அளவிற்கு கடுமையான சட்டத்தை உருவாக்கி விட்டு அந்த பணிகளை நீங்கள் தொடங்கவேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். உங்களின் அனைத்து தீர்மானத்தையும் வரவேற்கிறேன் என்றார்.