தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த மென்பொறியாளர் கவின், கடந்த ஆண்டு ஜூலை 27-ம் தேதி திருநெல்வேலி கே.டி.சி. நகரில் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய காதலியின் குடும்பத்தினர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கவினின் காதலியான சுபாஷினியின் தம்பி சுர்ஜித், தந்தையும் போலீஸ் எஸ்.ஐ.,யுமான சரவணன், உறவினர் ஜெயபாலை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்திருந்தனர்.
இந்த கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, 83 சாட்சிகள் மற்றும் டிஜிட்டல் மற்றும் சிசிடிவி ஆதாரங்களுடன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் தங்களது மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி சுர்ஜித்தின் பெற்றோரான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, அவர்கள் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
உயர்நீதிமன்றத்தி இந்த உத்தரவை அடுத்து சுர்ஜித்தின் பெற்றோர் இருவரும் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அதேசமயம், வழக்கில் தொடர்புடைய உறவினர் ஜெயபால் தாக்கல் செய்த ரத்து மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
குற்றப்பத்திரிகை ரத்து செய்தது தவறான முன்மாதிரி என்று வி.சி.க தலைவர் திருமாவளவன் எதிர்வினை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:-
நெல்லை கவின் கொலைவழக்கில் குற்றம் சாற்றப்பட்ட சுர்ஜித்தின் (ஏ1) பெற்றோர் சரவணன் (ஏ2) கிருஷ்ணகுமாரி (ஏ3) ஆகியோர் மீதான 'குற்றச்சாற்று அறிக்கையை' மதுரை உயர்நீதிமன்றம் 'ரத்து' செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
விசாரணைக்குப் பின்னர் ஆதாரங்கள் இல்லையென விடுதலை செய்வதுதான் நீதிமன்றத்துக்குள்ள அதிகாரம். குற்றவிசாரணை தொடங்குவதற்கு முன்னரே குற்ற அறிக்கையை 'ரத்து' செய்வது 'தவறான முன்மாதிரி' ஆகும்.
கவின் கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட சரவணன் பிணையில் (ஜாமீனில்) வெளியே வந்ததும் இன்னொரு கொலைவழக்கில் கூலிப்படையினரோடு தொடர்பிருப்பதாக மீண்டும் கைது செய்யப்பட்டிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய பின்னணி கொண்ட ஒருவரையும் அவரது மனைவியையையும் குற்றமற்றவர்கள் என்கிற தோற்றத்தை உருவாக்கும் வகையில் உயர்நீதிமன்ற நடவடிக்கை அமைந்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்திட ஆவன செய்ய வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
என்று தெரிவித்துள்ளார்