பழனி கோவில் நில மோசடியில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை தீவிரம்- தி.மு.க. பிரமுகர் வீடுகளில் அதிரடி சோதனை

பழனியில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் வீட்டில் காலை முதலே சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
Pazhani Temple
Published on

பழனி கோயிலின் ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி விவகாரத்தில், அலங்காரப் பணி செய்பவர் வீட்டில் சிபிசிஐடி சோதனை நடத்தி வருகிறது.

நெல்லையில் அலங்காரப் பணி செய்யும் சண்முக சுந்தரம் வீட்டில் சிபிசிஐடி போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

வழக்கு தொடர்பான ஆவணங்கள் மற்றும் முக்கிய தகவல்களை சேகரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பழனியில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் வீட்டில் காலை முதலே சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

பழனி நில மோசடி விவகாரம்

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் சன்னதி வீதியில் அமைந்துள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் போலி ஆவணங்கள் மூலம் ரூ.2 கோடிக்கு மோசடி பதிவு செய்யப் பட்டது. இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

7 பிரிவுகளில் வழக்கு

இந்த வழக்கில் நிலத்தை பத்திரப்பதிவு செய்து கொடுத்த சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், போலி டிரஸ்ட் பிரமுகர் முருகதாஸ், நிலத்தை வாங்கிய சேதுபதி, வெள்ளைத்துரை ஆகிய 4 பேர் மீது கூட்டுச்சதி, மோசடி உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். சம்மந்தப்பட்ட ஆவணம் கடந்த ஏப்ரல் 1-ந் தேதி பதிவுக்காக சமர்ப்பிக் கப்பட்டது. அப்போதைய சார்பதி வாளர் பாலச்சந்தர் பதிவு செய்ய மறுத்து விட்டார்.

கடந்த ஏப்ரல் 10-ந் தேதி ரிட் மனு மீதான வழக்கில் ஆவணத்தை பதிவு செய்யு மாறு சார்பதிவாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பேரில் ஜூலை 3-ந் தேதி சார்பதிவாளர் பால சுந்தரம் பதிவு செய்தார்.

பாலசுந்தரம் விடுப்பில் சென்ற காரணத்தால் மாவட்ட பதிவாளர் அனுமதியுடன் ஜூலை 6-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை ஜஸ்டின் மணிகண்டன் பொறுப்பில் இருந்தார். அந்த காலக்கட்டத்தில்தான் இந்த மனு பதிவு செய்யப் பட்டது என்றும், அதற்கு எண் ஒதுக்கீடு செய்து கலெக்டருக்கு பரிந்துரைக்க மட்டுமே தான் செய்ததாகவும் மனுவில் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து ஜஸ்டின் மணிகண்டனுக்கு முன்ஜாமீன் வழங்கி வருகிற 27-ந் தேதி முதல் ஆகஸ்ட்டு 3-ந் தேதி வரை திண்டுக்கல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் முன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது. வழக்கில் விசாரணையும் அகஸ்ட் 4-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அதிகாலையில் சோதனை

இந்நிலையில் இன்று காலை திண்டுக்கல் ரவுண்டு ரோடு லிங்கா அவென்யூ பகுதியில் அமைந்துள்ள ஜஸ்டின் மணிகண்டனுக்கு சொந்தமான வீட்டில் சி.பி.சி.ஐ.டி.

டி.எஸ்.பி. அஜய் தங்கம் தலைமையில் 8 பேர் கொண்ட போலீசார் விசாரணைக்கு வந்தனர். அப்போது அவரது வீட்டில் ஜஸ்டின் மணிகண்டன் வீட்டில் இல்லை. அவரது மனைவி மற்றும் குழந்தைகள் மட்டுமே இருந்தனர். தொடர்ந்து 2 மணி நேரத்துக்கும் மேலாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வங்கி கணக்கு விபரங்கள், பத்திரப்பதிவு செய்த நாளிலும், அதற்கு முந்தைய நாட்களிலும் அவரது செல்போன் உரையாடல்கள் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து வருகின்றனர்.

இதே போல் பத்திரப்பதிவு செய்தபோது சாட்சி கையெழுத்து போட்ட வர்களின் விபரங்களையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சேகரித்தனர். அதில் பழனி இடும்பன் கோவில் அருகே உள்ள லெட்சுமணன் என்பவரும் ஒருவர் என்பதால் அவரது வீட்டுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிகாலை சென்றனர்.

ஆனால் அவர் வீட்டில் இல்லை. அவரது மனைவியிடம் கேட்டபோது தனது கணவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் அவர் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து அங்கு சென்றும் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். இதே போல் சாட்சி கையெழுத்திட்ட மேலும் சிலரது வீடுகளுக்கும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விரைந்துள்ளனர். லெட்சு மணன் இப்பகுதியின் தி.மு.க. வார்டு செயலாளராக இருந்து வருகிறார்.

சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த வழக்கில் அதிரடி திருப்பமாக அரசியல் பிரமுகர் ஒருவரிடம் விசாரணை நடத்தி இருப்பத பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் சேதுபதி, வெள்ளைத்துரை ஆகியோர் கடந்த சில நாட்களாகவே தலைமறைவாக உள்ளதால் அவர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com