

ராகுலின் செயல்பாடு காரணமாகவே மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி, 'பிலாங்கிங் எ ஜர்னி ஆப் லவ்' என்ற சுயசரிதை புத்தகத்தை எழுதியுள்ளார். ஹார்பர்காலின்ஸ் இந்தியா பதிப்பகத்தால் கடந்த 10-ந் தேதி வெளியிடப்பட்ட இந்த புத்தகத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு விழா, டெல்லியில் உள்ள ஐ.டி.சி. மவுரியா ஓட்டலில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, தமிழக முதலமைச்சர் விஜய், ஜார்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன், ஜம்மு-காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லா, கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவகுமார், இமாசல பிரதேச முதல்-மந்திரி சுக் விந்தர் சிங் சுகு, தமிழக அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்பிரியா சுலே. தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிலையில், சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி அழைப்பு விடுத்ததாகவும், ராகுல் அழைப்பை மு.க.ஸ்டாலின் ஏற்க மறுத்து விட்டதாகவும் பிரபல நாளிதழ் ஒன்றில் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றிருந்தன. தேர்தலுக்கு முன்பு இருந்தே திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டு, கூட்டணியில் குழப்பம் நீடித்து வந்தது.
தேர்தலில் திமுக தோல்வியடைந்த நிலையில் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறி தவெக கூட்டணியில் இணைந்து ஆட்சியில் இடம் பெற்றுள்ளது. தவெக அரசில் காங்கிரசுக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
தொகுதி பங்கீடு இழுபறியின்போது ராகுலை தொடர்பு கொள்ள முயன்றதாகவும் 5 முறை தொடர்பு கொள்ள முயன்றும் மு.க.ஸ்டாலினின் அழைப்பை ராகுல் ஏற்கவில்லை. தொகுதி பங்கீட்டின்போது காங்கிரஸ் நடந்துகொண்ட முறையை மு.க.ஸ்டாலின் விரும்பவில்லை. ராகுலின் செயல்பாடு காரணமாகவே மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
ராகுல் காந்தியுடன் உரையாடுவதை மு.க.ஸ்டாலின் விரும்பவில்லை, காங்கிரசுடன் இனி கூட்டணி வேண்டாம் என்பதில் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.