search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆருத்ரா தரிசனம்"

    • சிவனடியாரின் பாதங்களில் விழுந்து, வணங்கி ஆசி பெற பணித்தார். அவளும் அந்த அடியாரின் பாதங்களில் விழுந்து வணங்கினாள்.
    • மற்ற தலங்களைவிட இங்கு உள்ள நடராஜரின் இடது திருவடி சற்று முன்னே நீண்டு காணப்படுகின்றது.

    தங்கம்போல் புடம்போட்டு தன் பக்தர்களை ஜொலிக்கச் செய்யும் பரமன், அந்த பக்தர்களின் பக்தியை பார்போற்றும்படி செய்திடுவான். அதற்கான சந்தர்ப்பத்தையும் உருவாக்கி, ஆட்கொள்வான். அப்படி பெருமானால் ஆட்கொள்ளப்பட்ட எண்ணற்ற அடியவர்களுள் ஒருவரே மானக்கஞ்சாறர்.

    மானமேப் பெரிதென வாழ்ந்த வேளாளர்க்குடியில் பிறந்த இவர், சோழ மன்னனின் படைகளுக்கு தலைமை வகிக்கும் படைத்தளபதியாக விளங்கினார். ''மலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ்சாறனுக்கு அடியேன்'' என்று சுந்தரர் தனது திருத்தொண்டத்தொகையில் இவரது பெருமையையும், வலிமையையும் புகழ்ந்து போற்றுகின்றார். சிறந்த சிவனடியாராகத் திகழ்ந்த மானக்கஞ்சாறர் தனது வீரத்தாலும், உழைப்பினாலும் செல்வங்கள் யாவையும் பெற்றார். இருப்பினும், இவருக்கு குழந்தைச் செல்வம் இல்லை. பல நாட்கள் குழந்தைப்பேறு இன்றி வருந்திய இவருக்கு ஈசன் அருளால் ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்தாள்.

    அவளுக்கு 'புண்ணியவர்த்தினி' என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார். நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்த புண்ணியவர்த்தினி பருவமெய்தி, திருமண வயதை அடைந்தாள். பேரழகுடைய இவளுக்கு ஏயர்கோன் கலிக்காமரை மணம் முடித்திட, பெரியவர்கள் நிச்சயித்தனர்.


    திருமண நாளும் வந்தது. சுற்றமும், நட்பும் சூழ்ந்தனர். தன் பக்தன் மானக்கஞ்சாறன் மீது தீராக்காதல் கொண்ட மகாதேவர், ருத்ராட்ச மாலையோடு, எலும்பு மாலைகளையும் அணிந்து கொண்டு, கேசத்தையே பூணூலாக தரித்துக் கொண்டு, உடல் முழுதும் விபூதி பூசிய வண்ணம் மகாவிரதம் பூண்ட மாவிரதராய் (அகோரியாக) மணப்பந்தலை வந்தடைந்தார்.

    அவரைக் கண்ட மானக்கஞ்சாறர் மனம் பூரிப்படைந்து, அவ்வடியாரை வரவேற்று மகிழ்ந்தார். தனது மகள் புண்ணியவர்த்தினியை அழைத்தார். சிவனடியாரின் பாதங்களில் விழுந்து, வணங்கி ஆசி பெற பணித்தார். அவளும் அந்த அடியாரின் பாதங்களில் விழுந்து வணங்கினாள். அப்போது அவளது அழகிய நீண்ட கருங்கூந்தலை கண்ணுற்றார் அகோரியாய் வந்த அர்த்தநாரீசர்.

    ''ஆஹா, இந்த நீண்டக் கூந்தல் எனது மார்பில் அணியும் பஞ்சவடிக்கு (கேசத்தால் அணியும் பூணூல்) உதவுமே'' என்று மானக்கஞ்சாறரிடம் கூறினார். திருமண வேளையில், அதுவும் மகளின் கூந்தலை வெட்டுவது அமங்கலம் என்று கூட கருத்தில் கொள்ளாத மானக்கஞ்சாறர், உடன் தனது வாளை எடுத்தார். தன் மகளின் கூந்தலை அறுத்தார். வந்திருந்த மாவிரதரிடம் அளித்தார். அதை வாங்கிட எழுந்த அவ்வடியார் மறைந்தார்.

    மறுகணமே தேவியுடன் ரிஷப வாகனத்தில் எழுந்து, கஞ்சாறரை ஆட்கொண்டு, அவரை கண்ணீர்மல்கச் செய்தார் கயிலைநாதர். ''உனது அன்பின் பெருமையை உலகிற்கு உணர்த்தவே தாம் இவ்வாறு செய்தோம்'' என்று கூறி அவரை ஆனந்தத்தில் திளைக்கச் செய்தார். அறுபட்ட புண்ணியவர்த்தினியின் கூந்தல் மீண்டும் வளர்ந்தது. ஈசனுக்கே தனது கேசத்தை அளித்து, பெரும் புண்ணியம் செய்த புண்ணியவர்த்தினி ஏயர்கோன் கலிக்காமரை மணந்தாள். இரு வரும் சிவத்தில் திளைத்து வாழ்ந்தனர். இறுதியில் இணையில்லா ஈசனடியைச் சேர்ந்தனர்.


    ஆதியில் சப்தமாதர்களுள் அன்னை கவுமாரி வழிபட்ட இப்பதி பாரிஜாத வனமாக திகழ்ந்துள்ளது. இந்த பாரிஜாத வனத்தில் ஆசிரமம் அமைத்து, தவமியற்றி வந்த பரத்வாஜ முனிவரின் வேண்டு கோளுக்கு இணங்க பெருமான் இங்கு தனது திருமணக் கோலத்தைக் காட்டியருளியுள்ளார். இதனால் இப்பதி ''பரத்வாஜாசிரமம்'' என்று அழைக்கப்பட்டது. இத்தல நாயகர் பரத்வாஜீஸ்வரர் என்றும் அழைக்கப்பட்டார். அதன் பின்னர் இத்தலம் கஞ்சாறூர் என்று வழங்கப்பட்டுள்ளது. ஆனந்த முனிவரை ஆட்கொண்ட பின்னர் ஆனந்த தாண்டவபுரம் என்றாகி, தற்போது ஆனதாண்டவபுரம் என்று மருவியுள்ளது.

    ஆனந்த மாமுனிவர் அனுதினமும் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் நீராடிவிட்டு, இரவு அர்த்தஜாம பூஜைக்கு சிதம்பரம் சென்று தில்லையம்பல வாணரை தரிசிப்பது வழக்கம். தினமும் சரியாக நடந்துவந்த இந்த வழக்கம் ஏனோ தில்லைக்கே உரிய திருநாளான ஆருத்ரா அன்று முரண்பாடானது. அன்றைய தினம் ராமேஸ்வர ஸ்நானம் முடித்து, கஞ்சாறூர் நெருங்கும் வேளையில் புயல் காற்றோடு, கடும் மழையும் பெய்தது. செய்வதறியாமல் திகைத்த ஆனந்த முனிவர் தன் உயிரையே மாய்த்துக் கொள்ளத் துணிந்தார். அடியார் துயரம் காணப் பொறுக்காத அம்பலத்தரசர் தனது ஆனந்தத் திருநடனத்தை இத்தலத்தில் ஆனந்தமாய் அரங்கேற்றினார். பேரானந்த பெருவெள்ளத்தில் மூழ்கினார் அனந்த மாமுனிவர். இதனால் இத்தலம் அன்று முதல் ஆனந்தத் தாண்டவபுரம் என்றே அழைக்கலானது.

    ஆனந்த மாமுனிவருக்கு ஆருத்ரா தரிசனத்தை இங்கேயே காட்டியருளியதால் சிதம்பரம் சென்று ஆருத்ரா தரிசனம் செய்ய முடியாதவர்கள் இந்த ஆனந்த தாண்டவபுரத்திலேயே அந்த அருட்காட்சியை கண்டு மகிழலாம். அதோடு சிதம்பரம் சென்று ஆருத்ரா தரிசனம் செய்வதற்கு முன்னரோ அல்லது தரிசனம் செய்த பின்னரோ கூட இங்கு நடராஜப் பெருமானை தரிசனம் செய்வது உன்னதமான சிவனடியார்களின் மரபாக உள்ளது.


    மற்ற தலங்களைவிட இங்கு உள்ள நடராஜரின் இடது திருவடி சற்று முன்னே நீண்டு காணப்படுகின்றது. இந்த தூக்கிய திருவடியே 'குஞ்சிதபாதம்' என்று போற்றப்படுகின்றது. திருவாசியின் துணையின்றி முயலகன் மீது மட்டுமே தனது வலது காலை ஊன்றி நிற்பது முற்றிலும் வித்தியாசமான அமைப்பாகும்.

    உற்சவர் சிலைகளில் விசேஷ மூர்த்தியாகத் திகழும் ஸ்ரீ ஜடாநாதர், அறிந்தக் கூந்தலை தனது இடது கையில் பிடித்தபடி காட்சி தரும் தரிசனத்தை வேறு எங்கும் நாம் காண முடியாது. அருகே மானக்கஞ்சாறரது விக்ரஹமும் உள்ளது. பின் தென் முகம் பார்த்தபடி அன்னை பிரஹன்நாயகி தனியே சன்னதி கொண்டிருக்கிறாள். அம்பிகையை வணங்கி ஈசன் சன்னிதியை அடையலாம்.

    கருவறையுள் சிறிய மூர்த்தமாக பேரருள் பொழிகின்றார், ஸ்ரீபஞ்சவடீஸ்வரர். ஆலய வாமபாகத்தில் இன்னொரு தல நாயகியாம் அன்னை ஸ்ரீகல்யாணசுந்தரி கிழக்கே முகம் காட்டி, தனியே சன்னிதி கொண்டிருக்கிறாள். தென்மேற்கில் தான்தோன்றி கணபதியும், மேற்கில் வள்ளி - தெய்வானை உடனுறை ஸ்ரீசுப்பிரமணியரும் வீற்றுள்ளனர்.

    தினசரி நான்கு கால பூஜைகள் நடக்கிறது. தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையும் இந்த ஆலயம் திறந்திருக்கும். தலவிருட்சமாக பாரிஜாதம் திகழ்கின்றது. பொதுவான சிவாலய விசேஷங்களோடு ஆருத்ரா மற்றும் மானக்கஞ்சாறர் குருபூஜை ஆகியன இங்கு கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன. சுவாமியும், அம்பிகையும் இங்கு திருமணக்கோலத்தில் உள்ளதால் திருமண தடை நீக்கும் தலமாக திகழ்கிறது.

    இங்குள்ள அமிர்த பிந்து தீர்த்தத்தில் நீராடி, இறை வன் - இறைவியை வழிபடுபவர்களுக்கு எல்லா விதமான தோல் நோய்களும் நிவர்த்தியடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. முற்பிறவியில் ஏற்பட்ட சாப-பாப-தோஷங்கள் யாவும் இத்தலத்தை வழிபட்டால் போக்கிக் கொள்ளலாம்.

    மயிலாடுதுறை - சேத்தூர் சாலையில் மயிலாடுதுறையில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஆனந்ததாண்டவபுரம்.

    • ஆருத்ரம் என்பது அக்னி பூர்வமான ருத்ர சக்திகளை ஜீவன்கள் தரிசிக்கும் நிலையாகும்.
    • மேலும், ஆருத்ரத்தில்தான் வேத பீஜ கோஷ சக்திகள் ஜீவன்களை வந்தடையும் வண்ணம் நன்கு பரிமளிக்கின்றன.

    ஒவ்வொரு தமிழ் மாதப் பவுர்ணமியும், பெரும்பாலும் ஒரு நட்சத்திரத்தை ஒட்டி வரும்.

    மார்கழி மாதத்தின் பவுர்ணமி திருவாதிரையை ஒட்டி வருவதால், ஆருத்ரா அபிஷேக நாளாக முதல் நாளும், ஆருத்ரா தரிசனமாக மறுநாளும் அமையும்.

    ஆருத்ரம் என்பது அக்னி பூர்வமான ருத்ர சக்திகளை ஜீவன்கள் தரிசிக்கும் நிலையாகும்.

    மேலும், ஆருத்ரத்தில்தான் வேத பீஜ கோஷ சக்திகள் ஜீவன்களை வந்தடையும் வண்ணம் நன்கு பரிமளிக்கின்றன.

    ஆருத்ர சக்திகள், ஈஸ்வரனுக்கு வலப் புறமாக அமைவது திருமணக் கோலமாகும். ருத்ராம்பத சக்திகளோடு,

    வலப்புற அம்பிகை சன்னதியோடு அனைத்துலக, அண்ட சராசர ஜீவன்களுக்காக அருள்கின்ற கோலமே மயிலை ஸ்ரீகபாலீஸ்வர அவதாரமாகும்.

    அதனால்தால் இத்தல வழிபடுதல் சிரசில் தேவசக்திகளின் விருத்தியை மேம்படுத்தும்.

    தலைச் சுழியிலும் நிறைய ரேகைகள் உண்டு.

    உள்ளங்கை ரேகைகள் நன்கு படிய தலைச் சுழியில் அழுத்தி ரேக ஸ்பரிசத்துடன் தேய்க்கும்போது, ஒரு விதமான சூடு உண்டாகும்.

    இந்த சூடு எழும் கபாலப் பகுதியே ஆர்த்ர கபாலமாகும்.

    சிவபெருமான் பிரம்மனுடைய ஐந்தாவது சிரசின் பிரம்ம கபாலத்தை மறைத்த போது அது ஈஸ்வரனின் உள்ளங்கையில்தான் ஒட்டிக் கொண்டது.

    எனவே, பிரம்ம கபாலத்திற்கும் உள்ளங்கைக்கும் நெருங்கிய பிணைப்பு உண்டு.

    திருவாதிரை தினத்தன்று வலது உள்ளங்கையை தலைச் சுழியின் மேல் வைத்து அதில் ஒருவிதமான ஆகர்ஷண ஓட்டமும்,

    மிதமான உஷ்ணமும் தோன்றுவதை நன்கு உணரலாம்.

    கபாலீஸ்வரர், குடுமீஸ்வரர் (குடுமியான்மலை), அபிமுகேஸ்வரர் (கும்பகோணம்), கூந்தலூரில் ஸ்ரீரோம மகரிஷி போன்ற கபால சக்தி நிறைந்த ஆலயங்களில் திருவாதிரை நட்சத்திர தினங்களில் வழிபடுதல் கபால நாளங்களை நன்கு ஆக்கப்படுத்தும்.

    மேலும், எந்த ஆலயத்தில் சுவாமிக்கோ மூல லிங்கத்திற்கோ குவளை, கிரீடம், தலைப் பாகை சார்த்தப்படுகின்றதோ,

    இத்தகைய ஆலயங்களில் கபாலக் கனி என்று அழைக்கப்படும் தேங்காய்கள், பன்னிரெண்டால் ஆன

    மாலைகள் சார்த்தி வழிபடுதல் விசேஷமானது.

    ஆருத்ரா அபிஷேக தினத்திற்கு அடுத்த நாள் வரும் ஆருத்ரா தரிசனத் திருநாளன்று திருஆதிரைக் களி என்பதாக, ஏழு அல்லது ஏழுக்குமேலான காய்கறிகள் கலந்த கூட்டுடன் இறைவனுக்குப் படைத்தளிக்க வேண்டிய முக்கியமான திருநாள்.

    மோதகத்தின் ஒரு வகையான திருவாதிரைக் களி மிகவும் சுவையுடையது.

    மோதகக் குடும்பத்தைச் சார்ந்த இனிப்பு வகை ஆதலால், பிள்ளையாரின் ஆசீர்வாதமும் சேர்ந்து வருவதாகும்.

    ஆருத்ரா தரிசனத்தின் போது கபாலத்தில் தலைச் சுழியில் அபூர்வமான ஆகர்ஷண சக்திகள் எழுகின்றன.

    இவற்றை விரயம் செய்து விடாமல் உடல் நாளங்களில் ஈர்த்துக் கொள்ளவே ஆலய வழிபாட்டிற்குப் பிறகு, இல்லத்திலும் பூஜையைத் தொடர்வதாகும்.

    உள்ளத்தில் ஆத்ம லிங்கம் ஒளிர்வதால், தினசரி தலைக்கு நீராடுவதையும் கூட ஆத்ம லிங்க அபிஷேகமாக, உத்தமத் தெய்வீக நிலைகளில் போற்றப்படுகின்றது.

    • ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்குவது வழக்கம்.
    • மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெறுகிறது.

    திருவள்ளூரை அடுத்த திருவாலங்காட்டில் உள்ள வடாரண்யேஸ்வரர் கோவில் நடராஜ பெருமானின் 5 சபைகளில் ரத்தின சபையாக திகழ்கிறது.

    இங்கு ஆண்டு தோறும் மார்கழி மாதம் வரும் திருவாதிரை நாளில் ஆருத்ரா தரிசன விழா விமரிசையாக நடப்பது வழக்கம்.

    ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்குவது வழக்கம்.

    விழாவின் 9வது நாள் இரவு பழைய ஆருத்ரா மண்ட பத்தில் உற்சவர் நடராஜப் பெருமானுக்கு ஆருத்ரா அபிஷேகம் நடைபெறுகிறது.

    மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெறுகிறது.

    தொடர்ந்து இரவு ரத்ன சபாபதி பெருமாள் கோவில் வளாகத்தின் பின்புறத்தில் உள்ள ஸ்தல விருட்சகத்தின் கீழ் அபிஷேகம் மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார்.

    இதன் பின்னர் விபூதி அபிஷேகத்துடன் ஆருத்ரா தரிசன விழா தொடங்குகிறது.

    நடராஜருக்கு நெல்லிப்பொடி, வில்வப்பொடி, பால், தேன் மற்றும் பழங்கள் என பல வகையான அபிஷேகங்கள் விடிய விடிய மறுநாள் காலை வரை நடத்தப்படுகிறது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    அபிஷேகம் முடிந்ததும் சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடைபெற்று நடராஜபெருமான் ஆலமர பிரகாரத்தை வலம் வந்து மறுநாள் அதிகாலை 5 மணிக்கு கோபுர தரிசனம் நடைபெறும்.

    பின்னர் பகல், 12 மணிக்கு, அனுக்கிரக தரிசனமும், காலை 8.45 மணிக்கு சாந்தி அபிஷேகமும் நடைபெறும்.

    • திருவாதிரை நட்சத்திரத்துக்கு ஆர்த்ரா என பெயர். அதுவே ஆருத்ரா என மாறியது.
    • பார்வதிதேவியின் தவத்துக்கு மெச்சி அவளை மணப்பதாக வாக்கு கொடுத்தது இந்நாளில்தான்.

    திருவாதிரை நட்சத்திரத்துக்கு ஆர்த்ரா என பெயர்.

    அதுவே ஆருத்ரா என மாறியது.

    அறுபத்து நான்கு நாயன்மார்களில் ஒருவரான சேந்தனார் என்பவர் அரசபதவியிலிருந்து சிவனின் திருவிளையாடலால் ஏழையாகினாலும் தன்னுடைய சிவத்தொண்டான அடியவருக்கு உணவளிக்காமல், தான் உண்பதில்லை என்ற கொள்கையிலிருந்து மாறாமல் இருந்தார்.

    கடும் வறுமையில் வாழ்ந்து வந்தபோது, ஒரு மழைநாளில் சமைக்க ஏதுமில்லாதபோதும், கோலமிட வச்சிருந்த பச்சரிசி மாவில், சிறிதளவு வெல்லம் சேர்த்து களியாய் கிளறி அடியவருக்காக காத்திருந்தனர்.

    இரவுப்பொழுது ஆகியும் யாரும் வராததால் பசியோடு உறங்க சென்றனர்.

    இதனால், சிவனே அடியவர் வேடம் போட்டு சேந்தனார் வீட்டு வாயிலில் நின்று பிச்சை கேட்டார்.

    அவருக்கு களி பரிமாறி பசியாத்தினர் சேந்தனார் தம்பதியினர்.

    களி மிக ருசியாயுள்ளது என சொல்லி நாளைக்கும் வேண்டுமென கூறி மிச்சம் மீதி களியையும் பெற்று சென்றார்.

    மறுநாள் கோவிலில் சென்று இறைவனை காணும்போது, கருவறையில், முதல் நாள் அடியவருக்கு கொடுத்தனுப்பிய களி அங்கு சிதறி இருந்தது.

    அப்படி சேந்தனார், களியமுது படைத்திட்ட நாள் மார்கழி திருவாதிரை நட்சத்திரம் நாளாகும்.

    அன்றிலிருந்து, ஆருத்ரா தரிசனம் நாளன்று களி சமைத்து படைப்பது வழக்கமாகிவிட்டது.

    களின்ற வார்த்தைக்கு உணவு பண்டம்ன்னு மட்டும் பொருள் இல்லை.

    களின்னா ஆனந்தம்ன்னும் பொருள் தரும்.

    அஞ்ஞானம் அகன்று மெய்ஞானம் தோன்றிய நிலையில் ஆன்மா ஆனந்த நிலையில் இருக்கும்.

    சத், சித் ஆனந்தம் கிட்டும் என்ற தத்துவத்தை அடிப்படையாக வைத்துதான் திருவாதிரைக்களி நிவேதனம் செய்விக்கப்படுகிறது.

    இந்த ஆருத்ரா தரிசன நாளில்தான், மாணிக்கவாசகர் திருவெம்பாவை பாடல்களை எழுதி முடித்தார்.

    கேரளத்தில் இந்நாளை ஈசன் காமனை எரித்த நாளாக கொண்டாடுகின்றனர்.

    பார்வதிதேவியின் தவத்துக்கு மெச்சி அவளை மணப்பதாக வாக்கு கொடுத்தது இந்நாளில்தான்.

    அதனால்தான், இந்நாளில் விரதமிருந்து ஈசனை வழிபட்டால் சிறந்த கணவன் கிடைக்கும், தாலிபலம் கூடும்.

    பிரிந்திருக்கும் கணவன் மனைவி ஒன்று சேர்வர்.

    • பல்வேறு சிறப்புகளை பெற்ற மங்களநாத சாமி கோவிலில் நடராஜருக்கென தனிக்கோவில் உள்ளது.
    • பல்வேறு சிறப்புகளை பெற்ற மங்களநாத சாமி கோவிலில் நடராஜருக்கென தனிக்கோவில் உள்ளது.

    நடராஜ பெருமான் சிதம்பரத்தில் அம்பலத்தில் ஆடியதாகவும், மதுரையில் கால் மாறி ஆடியதாகவும், திரு உத்தரகோசமங்கையில் அறையில் ஆடியதாகவும் வரலாறு.

    பல்வேறு சிறப்புகளை பெற்ற மங்களநாத சாமி கோவிலில் நடராஜருக்கென தனிக்கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் நடராஜர் ஆடும் திருக்கோலத்தில் ஒரே கல்லினால் ஆன 6 அடி உயர பச்சை மரகத சிலை உள்ளது.

    ஆண்டு முழுவதும் சந்தனம் பூசப்பட்டு காட்சியளிக்கும் இந்த சிலை வருடத்தில் ஒருநாள் மட்டும் சிவனுக்கு உகந்த நாளான ஆருத்ரா தரிசனத்தில் திருமேனி மீது சாத்தப்பட்ட சந்தன காப்பு களையப்படுகிறது.

    பின்னர் சந்தனாதி தைலம், கஸ்தூரி தைலம் ஆகியவைகளை கொண்டு சந்தனம் களைக்கப்பட்ட திருமேனியில் அபிஷேகம் செய்யப்படுகிறது.

    அதன் பிறகு 32 வகையான வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்படும்.

    இரவு வரை சந்தனம் படியில்லாமல் மரகத நடராஜராக அருள்பாலிக்கிறார்.

    ஆண்டு முழுவதும் சந்தனம் பூசப்பட்டு காணப்படும் நடராஜர், ஆருத்ரா தரிசனத்தன்று மரகத மேனியனாய் தரிசிக்கும் வாய்ப்பு பக்தர்களுக்கு காணக் கிடைக்காத காட்சி.

    ஆருத்ரா மகா அபிஷே கத்திற்கு பின் மீண்டும் சந்தன காப்பு சாத்தப்படுகிறது.

    நடராஜருக்கு பூசப்பட்டிருக்கும் சந்தனத்தை நீரில் கரைத்து உட்கொண்டால் நோய் நீங்கும், புத்திரபாக்கியம் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    ஆகவே பக்தர்கள் ஆருத்ரா தரிசனத்தன்று மணிக்கணக்கில் காத்து நின்று நோய் தீர்க்கும் சந்தனத்தை பெற்று செல்கின்றனர்.

    மாணிக்கவாசகரால் பாடல் பெற்ற இத்தலம் அவரது திருவாசகத்தில் 38 இடங்களில் சிறப்புற புகழப்பட்டுள்ளது.

    அவர் தன் முற்பிறவியில் இங்கு அவதரித்து சிவபெருமான் கட்டளைப்படி வேதாகமப் பொருளை இந்த உலகிற்கு தந்து அடுத்த பிறவியில் மதுரை அருகிலுள்ள திருவாதவூரில் அவதரித்து இங்கு வந்து மன்னும் உத்தரகோசமங்கைக்கரசே என திருவாசகத்தால் பாடியிருப்பது இந்த கோவிலின் மற்றுமொரு சிறப்பாகும்.

    சிவாலயங்களில் பள்ளியறை பூஜை நடக்கும்போது பாடப்படும் திருப்பொன்னுஞ்சல் பாடல் மாணிக்கவாசகரால் இக்கோவிலில் பாடப்பட்டதாகும்.

    • தாருகாவனம் என்ற வனத்தில் மிகவும் தவ வலிமை கொண்ட முனிவர்கள் இருந்தார்கள்.
    • அவர்களுக்கு ஈசுவரத் தியானத்தை உண்டாக்கும் பொருட்டு, சிவபெருமான், திருமாலை நினைத்தார்.

    தாருகாவனம் என்ற வனத்தில் மிகவும் தவ வலிமை கொண்ட முனிவர்கள் இருந்தார்கள்.

    நான்கு வேதங்கள், ஆறு சாஸ்திரங்கள் முதலியவற்றைக் கற்றுணர்ந்த அவர்கள் அதன்படியே தங்களுடைய காரியங்களைச் செய்து வந்த போதிலும் எல்லாவற்றிற்கும் காரணமான ஈசுவரன் ஒருவன் இருக்கிறான் என்ற நினைவே இல்லாது, ஈசுவரத் தியானமில்லாமல் இருந்தனர்.

    எனவே அவர்களுக்கு ஈசுவரத் தியானத்தை உண்டாக்கும் பொருட்டு, சிவபெருமான், திருமாலை நினைத்தார்.

    நினைத்த மாத்திரத்தில் தன் முன் தோன்றிய திருமாலுடன் சேர்ந்து முனிவர்களை நல் வழிப்படுத்த விரும்பினார்.

    சிவபெருமான், திருமாலை தாருகாவனத்தில் உள்ள முனிவர்களை மயக்கும் அளவிற்கு அழகிய பெண் வேடம் பூண்டு செல்லுமாறு கூறியதோடு, தானும் பிட்சாடன (பிச்சை எடுப்பவர்) வேடம் பூண்டு, நந்தி தேவரோடு தாருகா வனம் வந்தார்.

    நந்தி தேவரை ஓரிடத்தில் இருக்கச் சொல்லிவிட்டு, சிவபெருமான் முனிவர்களின் குடில்களுக்கு அருகில் சென்று பிச்சை கேட்பவரைப் போல, அங்கும் இங்கும் சுற்றி கொண்டிருந்தார்.

    அவரின் அழகில் மயங்கிய முனிபத்தினிகள் (முனிவர்களின் மனைவிகள்) அவரின் மேல் மோகம் கொண்டு அவரை அடைய விரும்பி அவர் பின்னாலேயே சுற்றி வந்தனர்.

    மறுபுறம் பெண் வேடமிட்டு வந்த திருமால் காம விகாரத்துடன் யாக சாலைகள் அமைக்கப்பட்டிருந்த இடங்களில் சுற்றி திரிந்தார்.

    அங்கிருந்த இளம் முனிவர்கள் பெண்ணின் அழகில் மயங்கி, தவத்தை கைவிட்டு அவளின் காமரூபத்தை கண்டவர்களாய், அவள் பின்னாலேயே சுற்றி வந்தனர்.

    இதைக்கண்ட வயது முதிர்ந்த முனிவர்களும், தங்களின் தவ நிலையிலிருந்து விலகாத மற்ற முனிவர்களும் கோபம் கொண்டும், தங்களுடைய இளம் முனிவர்களையும், பெண்களையும் காம விகாரத்தில் ஈடுபடச் செய்த இருவரையும் அழிக்க நினைத்தனர்.

    அதற்காக அக்னியில் எதிரியை அழிப்பதற்காக அதர்வண வேதத்தில் சொல்லியிருக்கின்ற ஹோமத்தை வளர்த்தனர்.

    ஹோமத்திலிருந்து முதலில் புலி பாய்ந்து வந்தது.

    அதை சிவபெருமான், தம்முடைய நகங்களால் இரண்டாகப் பிளந்து, அதன் தோலை ஆடையாக்கிக் கொண்டார்.

    பின்னர் ஹோமத்திலிருந்து வந்த பாம்புகளை முனிவர்கள் ஏவ, அவை சிவபெருமானுக்கு அணிகலன்களாகின.

    இதனால் கோபம் கொண்ட முனிவர்கள் முன்னினும் தீவிரமாக யாகத்தைச் செய்து அபஸ்மாரம் என்ற பெரிய பூதத்தை ஏவினார்கள்.

    அதை தன் வலக்காலுக்கு அடியில் போட்டு அதன் மீது சிவபெருமான் ஏறி நின்றார்.

    எதுவுமே பலிக்காத நிலையில் யாகம் வளர்த்த அக்னியை ஏவ, அதை தன் இடக்கையில் ஏந்தினார்.

    தங்களுடைய அக்னியை இழந்த முனிவர்கள், கடைசி ஆயுதமாக வேத மந்திரங்களை ஏவினர்.

    அவைகளைச் சிலம்புகளாக மாற்றி தன் பாதத்தில் அணிந்து கொண்டார்.

    தங்களால் நெடுங்காலமாக செய்து வரப்பட்ட தவம், அக்னி, வேத மந்திரங்கள் முதலிய எதனாலும் சிவபெருமானை வெல்ல முடியாது போகவே தாங்கள் தோற்றுவிட்டதாக மட்டுமே முனிவர்கள் நினைத்தனர்.

    எனவே அவர்களின் அறிவு கண்களைத் திறப்பதற்காக தன் சடைகள் எட்டுத்திக்கும் விரிந்தாட, அண்டங்கள் எல்லாம் குலுங்க, தாண்டவம் ஆடினார்.

    அதைக்கண்ட முனிவர்கள், பிட்சாடன் வேடமேற்று வந்திருப்பவர் சிவபெருமான் என்று அறிந்து தங்களின் தவற்றை பொறுத்தருள வேண்டினர்.

    அவர்களின் வேண்டுகோளை ஏற்றி சிவபெருமான், தன்னுடைய ருத்ர தாண்டவத்தை ஆனந்த தாண்டவமாக மாற்றி அவர்களுக்கு அருள் புரிந்தார்.

    மார்கழி மாதம் குளிர் அதிகமாக இருக்கும். எங்கும், எதிலும் குளிர்ச்சி தான்.

    அதனால் அம்மாதத்தில் சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரம் வரும் நாளில் ருத்ரதாண்டவம் ஆடியவரை அபிஷேகங்களால் மேலும் குளிர்விக்கின்றோம்.

    அபிஷேகத்தின்போது களி செய்து படைத்து வணங்குகிறோம்.

    சிவனுக்குப் பிடித்தமான பொருள் என்பதால் மட்டும் களி செய்து படைப்பதில்லை.

    அகம்பாவம் கொண்டு, அறிவிழந்து நடப்போரை சிவபெருமான் தன் காலடியில் போட்டு மிதித்துள்ள அசுரனை போல மிதித்து களியாக்கி விடுவார் என்பதே அதன் தத்துவமாகும்.

    ஆருத்ரா தரிசனம் அன்று சிவபெருமானை வணங்கி வழிபடுபவர்களுக்கு எதையும் சாதிக்கும் ஆற்றல் உண்டாகும்.

    ஆணவம் அழிந்து அன்பு உண்டாகும். இறைவனிடம் கொள்ளும் பக்தி முக்தி அளிக்கும்.

    • ஆருத்ரா என்ற வடமொழிச்சொல் திரிந்து தமிழில் ஆதிரை ஆனது.
    • சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரம் திருவாதிரை நட்சத்திரமாகும்.

    மார்கழி மாதத்து பவுர்ணமியோடு திருவாதிரை நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாள் "திருவாதிரை" விழாவாக கொண்டாடப்படுகிறது.

    இதை "ஆருத்ரா தரிசனம்" என்றும் அழைக்கின்றனர்.

    ஆருத்ரா என்ற வடமொழிச்சொல் திரிந்து தமிழில் ஆதிரை ஆனது.

    அதோடு திரு என்ற அடைமொழியை பெற்று திருவாதிரை என்றானது.

    சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரம் திருவாதிரை நட்சத்திரமாகும்.

    இந்நட்சத்திர நாளில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் மிகவும் விசேஷம்.

    சிவபெருமானுக்குரிய ஐந்து சபைகளில் பொற்சபை உள்ள இடம் சிதம்பரம் ஆகும்.

    இதற்கு தில்லை என்றொரு பெயரும் உண்டு.

    இங்கு எழுந்தருளியிருக்கும் சிவபெருமான், நடராஜர் என அழைக்கப்படுகிறார்.

    இத்தலத்தில் தான் தாருகா வனத்து ரிஷிகளின் செருக்கை அடக்க சிவபெருமான் ருத்ர தாண்டவம் ஆடினார்.

    • தேரில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி.
    • சிறப்பு பூஜைகள் நடந்தது.

    சிதம்பரம்:

    புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா வெகு விமரிசையாக நடைபெறும். சிவபெருமானுக்குரிய ஜென்ம நட்சத்திரமான திருவாதிரை நாளில் ஆடல் அரசனான நடராஜருக்கு சிறப்பு மகா அபிஷேகம் செய்யப்படுகிறது.

    நிகழ்ச்சியில் சுவாமி நடராஜமூர்த்தி, சிவகாமசுந்தரி அம்பாள் ஆகியோர் திருநடனம் புரிந்தபடி பக்தர்களுக்கு காட்சி அளிப்பது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.இந்த தரிசனத்தின் போது மூலவரே தேரில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். இது வேறு எந்த கோவிலிலும் இல்லாத தனிச்சிறப்பாகும்.

    ஆகையால், நடராஜரின் தரிசனத்தை காண தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சிதம்பரம் வருவார்கள்.

    அதன்படி இந்த ஆண்டு மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கடந்த 18-ந்தேதி கோலாகலமாக தொடங்கியது. இதை தொடர்ந்து, தினமும் நடராஜருக்கு காலை, மாலை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெறும்.

    விழாவில் 9-ம் நாளான நேற்று முன்தினம் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் மூலவராகிய நடராஜமூர்த்தி, சிவகாமசுந்தரி அம்பாள் உற்சவராக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    பின்னர் தேரில் இருந்து நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் ஆகியோர் ஊர்வலமாக ராஜசபை என அழைக்கப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளினார்கள். அங்கு நேற்று முன்திம் இரவு 10 மணிக்கு மேல் லட்சார்ச்சனை நடைபெற்றது.

    பின்னர், சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் நேற்று அதிகாலை 2 மணி முதல் தொடங்கியது. அப்போது ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகா அபிஷேகம் நடந்து, திருவாபரண அலங்கார காட்சி நடைபெற்றது.

    பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜை நடந்தது. தொடர்ந்து மதியம் 2 மணி அளவில் பஞ்ச மூர்த்திகள் கோவிலில் இருந்து 4 ரதவீதிகளிலும் வீதி உலாவாக வந்து 3 மணி அளவில் கோவிலின் ஆயிரங்கால் முகப்பு மண்டபம் முன்பு காட்சி கொடுத்தனர்.

    இதையடுத்து மாலை 4 மணி அளவில் மேள, தாளங்கள் முழங்க திருவெம்பாவை, தேவாரம், பாடியபடி சிவனடியார்கள் நடன பந்தலுக்கு ஊர்வலமாக வந்தனர். அவர்களை தொடர்ந்து ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து மூலவர் நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் பல்லக்கில் எழுந்தருளி சித்சபைக்கு புறப்பட்டனர்.

    அப்போது, பல்லக்கில் ஆடல் அரசன் நடராஜர், நடன பந்தலில் முன்னும் பின்னும் அசைந்தாடியபடி தரிசனம் தந்தார். இந்த அற்புத காட்சியை கோவிலுக்குள் திரண்டு நின்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு சிவ, சிவா, ஓம் நமசிவாயா என்று பக்தி கோஷங்களை எழுப்பியும், இரு கைகளை தட்டியும் நடராஜரை தரிசனம் செய்தனர்.

    இதையடுத்து மாலை 4.30 மணி அளவில் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் கோவில் உட்பிரகாரத்துக்கு வந்தனர். அங்கு கருவறையில் வைத்து சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

    விழாவில் இன்று (வியாழக்கிழமை) பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கு வீதிஉலா நடக்கிறது. அத்துடன் இந்த ஆண்டுக்கான மார்கழி ஆருத்ரா தரிசன விழா நிறைவு பெறுகிறது.

    • மகா தீப மை நடராஜருக்கு திலகமிடப்பட்டது.
    • மங்கள வாத்தியங்கள் முழங்க தீபாராதனை நடந்தது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நடராஜருக்கு மகா தீப மை திலகமிடப்பட்டது.

    மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நேற்று நடந்தது.

    ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு அருணாசலேஸ்வரர் கோவிலில் 5-ம் பிரகாரத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    தொடர்ந்து நேற்று காலை நாடராஜருக்கும், அம்பாளுக்கும் பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிவகாம சுந்தரி சமேத நடராஜருக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க தீபாராதனை நடந்தது.

    தொடர்ந்து சமீபத்தில் நடந்து முடிந்த கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்பட்ட மகா தீப கொப்பரையில் இருந்து எடுக்கப்பட்ட மகா தீப மை நடராஜருக்கு திலகமிடப்பட்டது.

    அப்போது ஆயிரங்கால் மண்டபத்தில் திரண்டு இருந்த பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்று பக்தி கோஷங்கள் எழுப்பினர்.

    தொடர்ந்து மாணிக்கவாசகர் உற்சவம் முன்னே செல்ல நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து பக்தர்கள் வெள்ளத்தில் ஆடியபடி திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே மாடவீதியை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து தீப மை பிரசாதம் வருகிற 30-ந் தேதி முதல் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் மூலம் வினியோகம் செய்யப்பட உள்ளது. நெய் காணிக்கை செலுத்திய பக்தர்கள் அதற்கான ரசீதுகளை காண்பித்து கோவில் நிர்வாக அலுவலத்தில் தீப மை பெற்றுக் கொள்ளலாம் என்று கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • புண்ணிய தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.
    • மரகத நடராஜர் மீது பூசப்பட்டிருந்த சந்தனக்காப்பு களையும் நிகழ்ச்சி

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் அருகே உள்ள திருஉத்தரகோசமங்கை கோவிலானது முக்கிய புண்ணிய தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. உலகில் முதலில் தோன்றிய கோவில் என்ற பெருமையும் இதற்கு உண்டு. இந்த கோவிலில் சிவபெருமான் மங்களநாதராகவும், அம்மன் மங்களநாயகியாகவும் அருள்பாலிக்கின்றனர். இங்கு நடராஜருக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. இந்த சன்னதியில் ஆடும் திருக்கோலத்திலான அபூர்வ பச்சை மரகத நடராஜர் சிலை உள்ளது.

    மத்தளம் முழங்க மரகதம் உடைபடும் என்பதால் ஒளி, ஒலி அதிர்வுகளில் இருந்து இந்த சிலையை காப்பதற்காக மரகத நடராஜர் மீது ஆண்டு முழுவதும் சந்தனக்காப்பு பூசப்பட்டு இருக்கும். ஆண்டில் ஒருநாள், அதுவும் ஈசனுக்கு உகந்த நாளான திருவாதிரைக்கு முதல்நாள் இந்த சந்தனக்காப்பு களையப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு வைக்கப்படுவது வழக்கம்.

    இதன்படி ஆருத்ரா தரிசன விழாவையொட்டி மரகத நடராஜர் மீது பூசப்பட்டிருந்த சந்தனக்காப்பு களையும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்காக காலை 7.45 மணி அளவில் நடராஜர் சன்னதி நடைதிறக்கப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அதை தொடர்ந்து நடராஜர் மீது பூசப்பட்டிருந்த சந்தனக்காப்பு களையப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பச்சை மரகத நடராஜரை தரிசனம் செய்தனர்.

    பின்னர் மரகத நடராஜருக்கு சந்தனம், நெய், பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், நெல்லிபொடி, பஞ்சாமிர்தம், விபூதி உள்ளிட்ட 32 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அபூர்வ மரகத நடராஜரின் திருமேனியில் ஆண்டு முழுவதும் பூசப்பட்டிருக்கும் சந்தனம் மருத்துவ குணம் மிகுந்தது என கருதப்படுவதால் இந்த சந்தனத்தை பக்தர்கள் வாங்கிச் சென்றனர்.

    தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, நான்கு ரத வீதிகளிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து சந்தனம் களையப்பட்ட அபூர்வ மரகத நடராஜரை தரிசனம் செய்து சென்றனர்.

    இன்று (புதன்கிழமை) ஆருத்ரா தரிசனத்தையொட்டி அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன்னர் அருணோதய காலத்தில் அபூர்வ மரகத நடராஜர் மீது மீண்டும் சந்தனக்காப்பு பூசப்பட்டு இதைத்தொடர்ந்து நடராஜருக்கு தீபாராதனை காண்பிக்கப்படும்.
    • 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
    • நடராஜப் பெருமானுக்கு ஆருத்ரா அபிஷேகம் நடைபெறும்.

    மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரம் மிகவும் உயர்வானது. திருவாதிரை நட்சத்திரத்தை யொட்டி, நடராஜப் பெருமானுக்கு மிகச்சிறந்த விழா, 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதற்கு `திருவாதிரை திருவிழா' என்று பெயர். இத்திருவிழாவை ஒட்டி பல சிவாலயங்களில் உள்ள நடராஜப் பெருமானுக்கு ஆருத்ரா அபிஷேகம் நடைபெறும். திருவாதிரை நட்சத்திர தினத்தில் செய்யப்படும் மகாஅபிஷேகத்தையும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் ஆருத்ரா தரிசனமும் காண பக்தர்கள் குவிவார்கள்.

    ஆருத்ரா தரிசனத்தை தரிசிப்பவர்களுக்கு எல்லா பாவங்களும் நீங்கி பெரும் புண்ணியம் சேரும். வியாக்கிரபாத முனிவரும் பதஞ்சலி முனிவரும் சிவபெருமானின் திருநடனத்தைக் காண விரும்பி அவரை துதிக்க, அவர் தன்னுடைய திருநடனத்தை, இந்த ஆதிரை நாளில் நிகழ்த்திக் காட்டியதாக புராண வரலாறு. நடராஜ மூர்த்திக்கு ஒரு ஆண்டில் ஆறு முறை மட்டுமே சிறப்பு அபிஷேகம் செய்யப்படும். அதில் முக்கியமான அபிஷேகம் ஆருத்ரா அபிஷேகம் ஆகும். உத்தரகோசமங்கை எனும் தலத்தில் மகா அபிஷேகம் மிகவும் சிறப்பாக நடைபெறும். இதுதவிர மற்ற திருநடனம் ஆடிய பஞ்ச சபைகளிலும் இந்த சிறப்பு உண்டு.

    திருஆலங்காடு, மதுரை, நெல்லை, குற்றாலம் முதலிய இடங்களில் உள்ள சிவாலயங்களிலும் அபிஷேகப் பெருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த விழாவின்போது திருவாதிரைக் களி படைப்பார்கள். பெருமானுக்கு விசேஷமான திருவாதிரைக் களியும், பல்வேறு காய்கறிகளை போட்டு கூட்டினை செய்வார்கள். களி என்பது ஆனந்தம் என்ற பொருள் தரும். அஞ்ஞானம் அகன்று மெய்ஞானம் தோன்றிய நிலையில் ஆன்மாவானது ஆனந்தமாக இருக்கும்.

    அந்த களியைத் தரும் பிரசாதம் திருவாதிரை நாளில் நிவேதனம் செய்யப்படும் திருவாதிரைக் களி ஆகும். மார்கழி மாத திருவாதிரை தினத்தன்று, விரதம் இருந்து, சிவபெருமானை பூஜித்து வழிபட்டால், நல்ல மாங்கல்ய பலம் பெருகும். பாவங்கள் நீங்கும். அறிவும் ஆற்றலும் கூடும்.

    • உற்சவ மூர்த்திகள் தனி, தனி தேர்களில் வீதிவலம் வந்தனர்.
    • ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவில் சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று தங்கர தத்தில் பிச்சாண்டவர் வெட்டுங்குதிரை வாகன வீதிஉலா நடைபெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) தேர்த்திருவிழா நடை பெற்றது.

    சித்சபையில் வீற்றுள்ள மூலவரான நடராஜமூர்த்தி, சிவகாமசுந்தரி அம்பாள் மற்றும் உற்சவ மூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்ரர் ஆகிய ஐவரும் தனி, தனி தேர்களில் வீதிவலம் வந்தனர். இதில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தேரோட்டத்தை யொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பின்னர் இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது.

    நாளை (புதன்கிழமை) அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகா பிஷேகம் நடைபெறுகிறது.

    பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜை யும், பஞ்சமூர்த்தி வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 3மணிக்கு ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது.

    28-ந்தேதி (வியாழக்கிழமை) இரவு பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலாவுடன் உற்சவம் முடிவடைகிறது. தேரோட்டத்தை யொட்டி சிதம்பரம் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

    ×