என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • ராமா என சொல்லுகின்ற இடத்தில் எல்லாம் அனுமன் இருப்பது நிச்சயம் என்பது ஐதீகம்.
    • கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.

    அனுமன் ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் பக்தர்கள் பலரும் விரதம் இருந்து ஆஞ்சநேயரை வழிபடுவார்கள்.

    ராமா என சொல்லுகின்ற இடத்தில் எல்லாம் அனுமன் இருப்பது நிச்சயம் என்பது ஐதீகம். அனுமன் இருக்கும் இடத்தில் வெற்றியைத் தவிர வேறொன்றும் இல்லை என்பது நம்பிக்கையாகும்.

    அனுமன் ஜெயந்தியான இன்று விரதம் இருப்பவர்கள் அதிகாலை குளித்து, ராம நாமம் சொல்லி வணங்கி, உபவாசம் தொடங்க வேண்டும். அருகில் இருக்கும் ராமர் அல்லது அனுமன் கோவிலுக்குச் சென்று, அனுமனுக்குத் துளசி மாலை, வெற்றிலை மாலை சாத்தி வழிபடலாம். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.

    அனுமன் ஜெயந்தி அன்று, அனுமனை வழிபடும்போது அவருக்கு பிடித்த நைவேத்தியப் பொருட்களை படைத்து வழிபட்டால் சிறப்பான பலன்களை பெறலாம்.

    துளசி மாலை - ராமபிரான் கடாட்சம் பெற்று நற்கல்வி, செல்வம் பெறலாம்.

    வெற்றிலை - விருப்பங்கள் நிறைவேறும்.

    மல்லிகை - கெட்ட சக்திகள் விலகும்.

    வடைமாலை - துன்பங்கள் நீங்கும்.

    சந்தனம் - மங்களகரமான வாழ்க்கை அமையும்.

    செந்தூரம் - அறிவும், ஆற்றலும் பெருகும்.

    வீட்டில் அனுமன் படம் வைத்து அஷ்டோத்திரங்கள் சொல்லி பூஜை செய்து, வெண்ணெய், உளுந்துவடை, பொரி, பழம், அவல், கடலை, சர்க்கரை, தேன், பானகம், இளநீர் போன்றவைகளை நைவேத்தியம் செய்யலாம். ஸ்ரீராமஜெயம் என எழுதுவதும் நல்ல பலன்களை அளிக்கும்.

    அனுமன் ஜெயந்தி அன்று விரதம் இருந்தால் சகல மங்களங்களும் உண்டாகும், நினைத்த காரியம் கைகூடும், வாழ்க்கையில் நலம் பெருகும்.

    • ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஆஞ்சநேயரை வழிபடுவது சிறப்பாகும்.
    • ஆஞ்சநேயரை வழிபட்டால் குழந்தை பேறு, புகழ், கல்வி, செல்வம், வீரம், உடல் ஆரோக்கியம் போன்றவற்றை பெறலாம்.

    ராமரின் தீவிர பக்தனான அனுமன் துணிச்சல், வலிமை, அறிவு, ஆரோக்கியம், புகழ், வீரம் ஆகிய அனைத்தையும் ஒன்றாக அமையப் பெற்றவர். மகாவிஷ்ணு ராமராக அவதாரம் எடுத்தபோது, மகாலட்சுமி சீதா தேவியாகவும், ஆதிசேஷன் லட்சுமணனாகவும் அவதரித்தனர். அதுபோல, ராமருக்கு உதவி செய்வதற்காக சிவபெருமான் அனுமனாக அவதரித்ததாக கூறப்படுகிறது. எனவே அனுமனை வழிபடுவதன் மூலம் சிவபெருமானையும், பெருமாளையும் சேர்த்து வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அனுமன் அவதரித்த தினமாக கொண்டாடப்படும் அனுமன் ஜெயந்தி நாளான இன்று அனுமன் பற்றிய சில தகவல்களை பார்ப்போம்.

    அனுமன் ஜெயந்தி மார்கழி மாதம் மூல நட்சத்திரமும், அமாவாசையும் சேர்ந்து வரும் நாளில் கொண்டாடப்படுகிறது. மார்கழியில் மூல நட்சத்திரமும், அமாவாசையும் சேர்ந்து வராவிட்டால் அமாவாசையில் ஆஞ்சநேயர் ஜெயந்தியை கொண்டாடலாம். ஆனால் வட மாநிலங்களில் ஆஞ்சநேயர் ஜெயந்தி வைகாசி மாதத்தில் வளர்பிறையில் வரும் தசமி திதியன்று கொண்டாடப்படுகிறது.

    ஆஞ்சநேயர் என்றால் பளிங்கு போல் களங்கமற்ற மனம் உடையவன் என்று பொருள். பொன் நிறமுடையவன், அஞ்சனை மைந்தன், குண்டலங்களால் ஒளிவிடும் முகத்தை உடையவன், கரங்கூப்பி வணங்கி கொண்டு இருப்பவன் என்ற பொருள்களும் உண்டு.

    திருமாலின் வாகனமாக கருதப்படும் கருட பகவான் 'பெரிய திருவடி' என்று அழைக்கப்படுகிறார். அதுபோல ஆஞ்சநேயர் 'சிறிய திருவடி' என்று போற்றப்படுகிறார்.

    ஆஞ்சநேயரை எல்லா நாட்களிலும் வழிபடலாம். இருப்பினும் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஆஞ்சநேயரை வழிபடுவது சிறப்பாகும்.

    ஆஞ்சநேயரை வழிபட்டால் குழந்தை பேறு, புகழ், கல்வி, செல்வம், வீரம், உடல் ஆரோக்கியம் போன்றவற்றை பெறலாம்.

    ஆஞ்சநேயரை மனதில் நினைப்பவர்கள் இந்த பிறவியில் சர்வ காரிய சித்தி பெற்று ஆரோக்கியத்துடன் வாழ்வர். மறு பிறவியில் ராமன் அருளால் முக்தியும் அடைவார்கள்.

    ஆஞ்சநேயர் வாலில் நவக்கிரகங்கள் இருப்பதாக ஐதீகம். எனவே ஆஞ்சநேயரின் வாலுக்கு 48 நாட்கள் சந்தனம், குங்குமம் வைத்து வழிபட்டு வந்தால் நவக்கிரக தோஷங்கள் நீங்கி, நன்மைகள் பல அடையலாம்.

    படிப்பில் பின்தங்கிய குழந்தைகளை 108 அல்லது 1008 முறை 'ஸ்ரீ ராமஜெயம்' எழுத வைத்து, அதை மாலையாக கோர்த்து ஆஞ்சநேயருக்கு அணிவித்தால், அந்த குழந்தைகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.

    ஆஞ்சநேயரின் படத்தையும், ராமர் பட்டாபிஷேக படத்தையும் வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபடலாம்.

    ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி வழிபடுபவர்களுக்கு, வெண்ணெய் கரைந்து போவதுபோல துன்பங்கள் கரைந்து போகும்.

    சனிக்கிழமைதோறும் அனுமன் கவசம் பாடி வழிபட்டால் எதிரிகளின் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள்.

    அனுமனுக்கு செந்தூரம் பூசி, வடை மாலை அணிவித்து, வெண்ணெய் சாற்றி, திராட்சை பழம் படைத்து, ஸ்ரீ ராம ஜெயம் எழுதி, அதை காகித மாலையாக அணிவித்து வழிபட்டால் வேண்டிய வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    • நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு சிறப்பு அபிஷேகம், வடைமாலை சாற்றல்.
    • இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் தலங்களில் பால் அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு மார்கழி-4 (வெள்ளிக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : அமாவாசை (முழுவதும்)

    நட்சத்திரம் : கேட்டை நள்ளிரவு 12.04 மணி வரை பிறகு மூலம்

    யோகம் : மரண / அமிர்தயோகம்

    ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சர்வ அமாவாசை, அனுமன் ஜெயந்தி

    சர்வ அமாவாசை, அனுமன் ஜெயந்தி. ராமேஸ்வரம், வேதாரண்யம், திலகைப்பதி, திருவெண்காடு, திருவள்ளூர் தலங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய நன்று. நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு சிறப்பு அபிஷேகம், வடைமாலை சாற்றல். தொண்டரடிப்பொடியாழ்வார், பெரிய நம்பி திருநட்சத்திர வைபவம். ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் திருநெடுந்தாண்டகம். கீழ்த் திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சனம், மாலை ஊஞ்சல் சேவை. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு, திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. லால்குடி ஸ்ரீ பிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீபெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம்.

    கரூர் தான் தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சனம். பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை தலங்களில் அபிஷேகம். திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் கிளி வாகன சேவை. இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் தலங்களில் பால் அபிஷேகம். ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. திருக்கண்ணபுரம் ஸ்ரீசௌரிராஜப்பெருமாள் ஸ்ரீ விபீஷ்ணாழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-கவனம்

    ரிஷபம்-பெருமை

    மிதுனம்-இன்பம்

    கடகம்-ஒற்றுமை

    சிம்மம்-வாழ்வு

    கன்னி-பரிசு

    துலாம்- நன்மை

    விருச்சிகம்-சலனம்

    தனுசு- உழைப்பு

    மகரம்-இன்பம்

    கும்பம்-ஆர்வம்

    மீனம்-கடமை

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    பணிச்சுமை அதிகரிக்கும் நாள். மற்றவர்களை முழுமையாக நம்பிச் செயல்பட முடியாது. உத்தியோகத்தில் சக பணியாளர்களால் தொல்லை உண்டு.

    ரிஷபம்

    சம்பள உயர்வு பற்றிய சந்தோஷத் தகவல் வந்து சேரும் நாள். தட்டுப்பாடுகள் அகலும். வளர்ச்சிப் பாதைக்கு வித்திட்ட சிலரின் சந்திப்பு கிட்டும்.

    மிதுனம்

    பரபரப்பாகச் செயல்படும் நாள். நிச்சயித்த காரியமொன்றில் திடீர் மாற்றங்களைச் செய்வீர்கள். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு உண்டு.

    கடகம்

    சந்திக்கும் நண்பர்களால் சந்தோஷம் கூடும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு.

    சிம்மம்

    மனதில் உற்சாகம் குடிகொள்ளும் நாள். மதிப்பும், மரியாதையும் உயரும். அயல்நாட்டிலுள்ள நிறுவனங்களில் பணிபுரிய அழைப்புகள் வரலாம்.

    கன்னி

    வம்பு வழக்குகள் தீர்ந்து வளம் காணும் நாள். நேற்றைய சேமிப்பு இன்று செலவிற்கு கைகொடுக்கும். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும்.

    துலாம்

    யோகமான நாள். தள்ளிச் சென்ற காரியம் தானாக முடிவடையும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் செயல்பாடுகளைப் பாராட்டுவர்.

    விருச்சிகம்

    நட்பால் நல்ல காரியங்கள் நடைபெறும் நாள். போட்டிகளுக்கு மத்தியில் முன்னேற்றம் கூடும். பிரபலமானவர்களின் சந்திப்பு கிடைக்கும்.

    தனுசு

    கனிவாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்ளும் நாள். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கும் முயற்சி கைகூடும்.

    மகரம்

    பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். கடமையில் ஏற்பட்ட தொய்வு அகலும். லட்சியங்களை நிறைவேற்றுவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.

    கும்பம்

    கருத்து வேறுபாடுகள் அகலும் நாள். பிறருக்காகப் பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை கைக்கு வரும். பொருளாதார நிலை உயரும்.

    மீனம்

    தன்னம்பிக்கையோடு பணிபுரிந்து தடைகளை அகற்றும் நாள். பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். புது முயற்சிக்கு நண்பர்கள் உறுதுணை புரிவர்.

    • இரவில் தூங்கும் முன் ஸ்ரீராமஜெயம் என 108 முறை சொல்ல வேண்டும்.
    • ராமதூதர் அனுமனுக்கு துளசிமாலை சாத்துவதால் ராம கடாட்சம் பெற்று நல்ல கல்வி, செல்வம் பெறலாம்.

    மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தவர் அனுமன். அவரது ஜெயந்தி நாள் நாளை கொண்டாடப்படுகிறது. கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றையும் பெற அருள்தரும் தெய்வமாக ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். அனுமன் ஜெயந்தி அன்று காலையிலேயே எழுந்து சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். அனுமனின் ஆசிரியர் சூரியன். அவரிடமே அனுமன் இலக்கணம் படித்து, சர்வ வியாகரண பண்டிதர் என்னும் பட்டம் பெற்றார். வியாகரணம் என்றால் இலக்கணம்.

    காலையில் சூரிய நமஸ்காரம் செய்வது அனுமனின் குருவை நமது குருவாக மதித்து போற்றுவதாக அர்த்தம். ராம பக்தன் அனுமனின் ஜெயந்தி நாளில் ராமனின் புகழ் பரப்பும் பாடல்களை பாட வேண்டும்.

    மாலையில் ஸ்ரீராம ஜெயம் சொல்ல வேண்டும். அவரது கோவிலுக்குச் சென்று வெண்ணெய், வெற்றிலை, வடை மாலை சாத்தி வழிபட வேண்டும். ஏழைக் குழந்தைகளுக்கு புத்தகம்-நோட்டு தானம், கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும்.

    இரவில் தூங்கும் முன் ஸ்ரீராமஜெயம் என 108 முறை சொல்ல வேண்டும். பொதுவாக ஆஞ்சநேயர் பெருமாள் கோவில்களில் தனி சன்னதியிலும், சிவாலயங்களில் தூணிலும் அருள்பாலிப்பது வழக்கம்.

    சொல் ஒன்று இருந்தால் அதற்கு ஒரு அர்த்தம் இருப்பது போல், ராமா என சொல்லுகின்ற இடத்தில் எல்லாம் ஆஞ்சநேயர் இருப்பது நிச்சயம். இவரது வழிபாட்டில் ராமநாம பஜனையும், செந்தூரப்பூச்சும், வெற்றிலை மாலையும் நிச்சயம் இடம் பெறும். இவரது சன்னதியிலும் துளசியே பிரதான பிரசாதம்.

    அனுமன் அவதார நாளில் அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று

    ஓம் ஆஞ்சநேயாய வித்மகே

    ராமதூதாய தீமகி

    தன்னோ அனுமன் பிரசோதயாத்

    என்ற அனுமன் காயத்ரி மந்திரம் சொல்லி வணங்கவேண்டும்.

    அனுமனை வணங்குவதால், புத்தி, பலம், புகழ், குறிக்கோளை எட்டும் திறன், அஞ்சா நெஞ்சம், ஆரோக்கியம், விழிப்புணர்வு, வாக்குவன்மை ஆகியவற்றைப் பெறலாம். ராமதூதர் அனுமனுக்கு துளசிமாலை சாத்துவதால் ராம கடாட்சம் பெற்று நல்ல கல்வி, செல்வம் பெறலாம்.

    அசோகவனத்தில் சீதையைக் கண்டு ராமபிரானின் நிலையை அனுமன் எடுத்துரைத்தார். சந்தோஷமடைந்த சீதை அனுமனை ஆசீர்வதிக்க எண்ணி அருகில் வளர்ந்திருந்த வெற்றிலையைக் கிள்ளி தலையில் தூவி ஆசிர்வதித்தாள். இந்த இலை உனக்கு வெற்றியைத் தரட்டும் என்றாள்.

    வெற்றிலையை காரணமாக்கி ஆசீர்வதித்தமையால் பக்தர்கள் தங்கள் செயல்பாடுகள் வெற்றி பெற வெற்றிலை மாலை சாத்துகின்றனர். திருமணங்களில் வெற்றிலை தாம்பூலம் கொடுப்பது, மணமக்களுக்கும், அவர்களை ஆசிர்வதிக்க வந்தவர்களுக்கும் வாழ்க்கை வெற்றிகரமாக அமைய வேண்டும் என்பதற்காகத் தான்.

     

    நரசிம்மன், வராகம், கருடன் ஆகிய சக்திகள் அனுமனிடத்தில் ஒருங்கே அமைந்ததாலும், அனுமனுக்கு ஈஸ்வர அம்சம் உள்ளதாலும் எலுமிச்சம்பழ மாலை சாற்றி வழிபடலாம்.

    ராமசேவைக்காக தன் உடம்பைப் புண்ணாக்கிக் கொண்டவர் அனுமன். போர்க்களத்தில் அவர் பட்ட காயம் கொஞ்ச நஞ்சமல்ல. அவரைக் கட்டிப் போட்டு தெருத்தெருவாக இழுத்துச் சென்றார்கள். காயத்தின் வேதனை குறைய குளிர்ந்த பொருள் பூசுவது இயல்பு தானே! அதனால் தான், அனுமனுக்கு வெண்ணெய் சாத்தும் வழக்கம் ஏற்பட்டது.

    வெண்ணெய் போன்று வெள்ளை உள்ளமுள்ள பக்தர்களை அனுமனே தன்னுடன் சேர்த்து அருள் செய்கிறான் என்பதன் அடையாளமாக வெண்ணெய் சாத்தப்படுகிறது.

    ஆஞ்சநேயர் அவல், சர்க்கரை, தேன், பானகம், நீர் மோர், கதலிப்பழம், கடலை முதலிய நிவேதனப் பொருட்களை அவர் விரும்பி உண்டு மகிழ்வார். ஸ்ரீராம நவமி உற்சவம் கொண்டாடும் இடங்களில் எல்லாம் ஆஞ்சநேயர் நேரில் வந்து அடியார்களுள் அடியாராய் பக்தருள் பக்தராய் அமர்ந்து ரசித்து அனைவருக்கும் சகல சுபிட்சங்களையும் வாரி வழங்கிப் பேரருள் புரிகிறார்.

    "ஆத்யந்த பிரபு'

    விநாயகரும், அனுமனும் இணைந்த வடிவத்தை "ஆத்யந்த பிரபு' என்பர். ஆதி+அந்தம் என்பதையே இவ்வாறு சொல்கிறார்கள். "ஆதி' என்றால் "முதலாவது'. முதல் கடவுள் விநாயகர். "அந்தம்' என்றால் "முடிவு'. விநாயகரை வணங்கி ஒரு செயலைத் துவங்கினால், அனுமன் அதை வெற்றிகரமாக முடித்து வைப்பார். ஒருபுறம் விநாயகரின் தும்பிக்கையும், மறுபுறம் வானர முகமும் கொண்டது ஆத்யந்த பிரபு வடிவம். பிரம்மச்சர்ய விரதம் மேற்கொண்டுள்ளோர், இந்த இரண்டு பிரம்மச்சாரிகளும் இணைந்த வடிவத்தை தங்கள் இஷ்ட தெய்வமாகக் கொண்டுள்ளனர். அனுமன், சிவனின் அம்சம். விநாயகர் சக்தியிடமிருந்து (பார்வதி) உருவானவர்.

    அனுமன் துதி

    அஞ்சிலே ஒன்று பெற்றான்

    அஞ்சிலே ஒன்றைத் தாவி

    அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக்

    கண்டு அயலார் ஊரில்

    அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன்

    எம்மை அளித்துக் காப்பான்.

    பொருள்: வாயுவுக்கு பிறந்தவன் அனுமன். ஆகாயத்தில் பறந்து, கடல் தாண்டி இலங்கை சென்றான். பூமிதேவியின் மகளான சீதையைக் கண்டான். அவளை மீட்க இலங்கைக்கு நெருப்பு வைத்தான். அவன் தன்னையே நமக்கு தந்து பாதுகாப்பான்.

    பஞ்சபூதங்களில் ஒன்றான வாயுவுக்கு பிறந்தான். வானில் (ஆகாயம்) பறந்தான். கடலை (நீர்) தாண்டினான். ஜனகர் தங்கக் கலப்பையால் யாக குண்டத்திற்கு பூமியை (மண்) தோண்டும் போது கிடைத்த சீதையைக் கண்டான். பஞ்சபூதங்களில் ஒன்றான நெருப்பை இலங்கைக்கு வைத்தான். ஆக, பஞ்சபூதங்களையும் அடக்கியாண்டவர் அனுமன். அவரை வணங்கினால் இந்தபஞ்ச பூதங்கள் நமக்கு நன்மையை மட்டுமே செய்யும்.

    எப்போது வழிபடலாம்?

    தமிழ் பஞ்சாங்கப்படி, இந்த ஆண்டு நாளை (வெள்ளிக்கிழமை) அனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளது. நாளை காலை 5.57 மணிக்கு தொடங்கி, நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 7.54 வரை அமாவாசை திதி உள்ளது.

    ஆனால் சனிக்கிழமை அதிகாலை 12.05 மணிக்கு தான் மூலம் நட்சத்திரம் துவங்குகிறது. இதனால் திதியை அடிப்படையாக வைத்து அனுமன் ஜெயந்தியை கொண்டாடுபவர்கள் நாளையும், நட்சத்திரத்தை அடிப்படையாக வைத்து கொண்டாடுபவர்கள் நாளை மறுநாளும் அனுமன் ஜெயந்தியை கொண்டாடலாம்.

    ஆனால் நாளை மறுநாள் காலை 7.54 மணி வரை மட்டுமே அமாவாசை திதி உள்ளதால், அதற்கு முன்பாக அனுமன் ஜெயந்தி வழிபாடுகளை செய்வது சிறப்பு.

    • ஆலயத்தில் கிருஷ்ணர், ருக்மணி சத்யபாமா சமேதராக அருள்பாலிக்கிறார்.
    • தொடர்ந்து ஐந்து செவ்வாய்க்கிழமைகள் இத்தலம் வந்து கனகாசல குமரனுக்கு விளக்கேற்றி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

    ஈரோடு மாவட்டம் எழுமாத்தூரில் பிரசித்தி பெற்ற கனக்கிரி மலை உள்ளது. இந்த மலை உச்சியில் கனகாசல குமரன் கோவில் அமைந்துள்ளது. ஒரு முறை அகத்திய முனிவரின் அறிவுரைப்படி, புலிப்பாணி சித்தர் பத்தரை மாற்று தங்கத்துக்காக இந்த மலையை குடைந்தார். அப்போது முருகப்பெருமானின் அருளால் தங்கம் கிடைத்தது. ஆனால், அது ஏழரை மாற்றுத் தங்கமாக அவருக்கு கிடைத்தது. இதன் காரணமாக இந்த ஊர் 'ஏழரைமாற்றூர்' என்று அழைக்கப்பட்டது. பின்பு ஏழரைமாத்தூர்' என்றாகி, தற்போது மருவி எழுமாத்தூர்' என்றானது.

    இப்பகுதியில் இருந்த மக்கள் இந்த மலையின் சிறப்பையும், முருகப்பெருமானின் மகிமையும் அறிந்து, மலை உச்சியில் கோவில் எழுப்பினர். தங்கத்தை தந்த மலை என்பதால், இங்கு அருள்பாலிக்கும் முருகப்பெருமானுக்கு 'கனகாசல குமரன்' என்று திருநாமம் சூட்டி வழிபட தொடங்கினர்.

    ஆலயத்தில் கிருஷ்ணர், ருக்மணி சத்யபாமா சமேதராக அருள்பாலிக்கிறார். இக்கோவிலின் தல விருட்ச - மாக இலந்தை மரம் உள்ளது. இந்த இலந்தை மரத்தடியில் விநாயகப்பெருமான் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அவருக்கு முன்பாக சிறிய மூசிகம் காணப்படுகிறது. விநாயகரின் அருகில் ராகு, கேது மற்றும் ஏழு கன்னியர்கள் உள்ளனர். இங்குள்ள விநாயகரை வணங்கிவிட்டு, கனகாசல குமரனை மனதார வழிபட்டு வந்தால் பிரார்த்தனைகள் நிறைவேறும், நல்ல வாழ்க்கை அமையும், பொன்னும் பொருளும் சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    தொடர்ந்து ஐந்து செவ்வாய்க்கிழமைகள் இத்தலம் வந்து கனகாசல குமரனுக்கு விளக்கேற்றி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள். மேலும் செவ்வாய்க்கிழமை தோறும் கோ பூஜை சிறப்புற நடைபெறுகிறது. அப்போது இந்தக் கோவிலைச் சேர்ந்த கன்றுக்குட்டிகள் தானாக மலையேறி வந்து, பூஜை செய்யும் காட்சியை பார்ப்பது வியப்பளிக்கிறது.

    ஆலயத்தில் சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், கந்தசஷ்டி, தைப்பூசம், விநாயகர் சதுர்த்தி, திருக்கார்த்திகை, சிவராத்திரி போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
    • ஆலங்குடி ஸ்ரீ குருபகவானுக்கு கொண்டைக்கடலைச் சாற்று வைபவம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு மார்கழி-3 (வியாழக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : சதுர்த்தசி மறுநாள் விடியற்காலை 5.56 மணி வரை பிறகு அமாவாசை

    நட்சத்திரம் : அனுஷம் இரவு 9.34 மணி வரை பிறகு கேட்டை

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம் : தெற்கு

    நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று மாத சிவராத்திரி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் ஸ்ரீராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை

    இன்று மாத சிவராத்திரி. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ ஆதிநாதன் பொலிந்து நின்ற பிரான் (நின்ற கோலம்) ஸ்ரீ ஆதிநாதவல்லி கோவிலில் காலை அலங்கார திருமஞ்சன சேவை. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். மைசூர் மண்டபம் எழுந்தருளல். சுவாமி மலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர் புறப்பாடு. சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர ரத வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சன சேவை.

    ஆலங்குடி ஸ்ரீ குருபகவானுக்கு கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சன சேவை. குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமானுக்கும், ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கும் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாளுக்கும், திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் ஸ்ரீ ராமர் மூலவருக்கும் திருமஞ்சன சேவை. ஸ்ரீபெரும்பு தூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள், ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் பவனி.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-ஊக்கம்

    ரிஷபம்-பெருமை

    மிதுனம்-ஆதரவு

    கடகம்-புகழ்

    சிம்மம்-நிம்மதி

    கன்னி-நன்மை

    துலாம்- உற்சாகம்

    விருச்சிகம்-பரிவு

    தனுசு- சாந்தம்

    மகரம்-போட்டி

    கும்பம்-நற்சொல்

    மீனம்-மேன்மை

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    வரவைக் காட்டிலும் செலவு கூடும் நாள். உறவினர் ஒருவரால் பிரச்சனை ஏற்படலாம். நேற்று செய்யாமல் விட்ட காரியமொன்றால் அவதிப்பட நேரிடும்.

    ரிஷபம்

    முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் தலைமைப் பொறுப்புகள் தேடி வரலாம்.

    மிதுனம்

    பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். உத்தியோகத்தில் ஏற்பட்ட இடையூறுகள் அகலும். வெளிவட்டாரப் பழக்கம் விரிவடையும்.

    கடகம்

    இடமாற்றங்களால் இனிய மாற்றம் ஏற்படும் நாள். வரவைவிடச் செலவு அதிகரிக்கும். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும்.

    சிம்மம்

    ஆதாயம் கிடைக்கும் நாள். அன்றாடப் பணிகள் தொடர அடுத்தவர் உதவி கிட்டும். தொலைபேசிவழித் தகவல் உத்தியோக முயற்சிக்கு வழிகாட்டும்.

    கன்னி

    எதிர்பார்த்தபடியே லாபம் கிடைக்கும் நாள். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி கைகூடும். ஆபரணங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    துலாம்

    மனக்குழப்பம் அகலும் நாள். பம்பரமாகச் சுழன்று பணிபுரிந்து பலரது பாராட்டுக்களைப் பெறுவீர்கள். தொழில் முன்னேற்றம் உண்டு.

    விருச்சிகம்

    கூட்டு முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். பணவரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள்.

    தனுசு

    புதிய பாதை புலப்படும் நாள். பிறரிடம் ஒப்படைத்த பொறுப்புகள் நல்லபடியாக நடைபெறும். விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    மகரம்

    கல்யாண முயற்சி கைகூடும் நாள். கடன்சுமை குறைய புதிய வழிபிறக்கும். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிடைக்கும்.

    கும்பம்

    எதிரிகள் விலகும் நாள். லாபம் வரும் வழியைக் கண்டு கொள்வீர்கள். கௌரவம், அந்தஸ்து உயரும். கருத்து வேறுபாடுகள் அகலும்.

    மீனம்

    இனிமையான நாள். இல்லத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு உண்டு.

    • சுமார் 10 நிமிடம் வரை நீடித்த இந்த நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.
    • திருப்பள்ளி எழுச்சி சிறப்பு அபிஷேகம், உதயமார் தாண்ட பூஜை, பிரசாதம் வழங்குதல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.

    தமிழ்நாட்டில் உள்ள பழமையான சிவ ஆலயங்களில் நெல்லை மாவட்டம் உவரி சுயம்பு லிங்கசுவாமி கோவிலும் ஒன்றாகும்.

    வங்க கடலோரம் சுவாமி சுயம்புவாக தோன்றிய இக்கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் முழுவதும் அதிகாலையில் சூரிய ஒளியானது மூலவர் சுயம்பு லிங்கசுவாமி கோவில் மூலவர் மீது விழும் அதிசய நிகழ்வு நடைபெறும்.

    அதன்படி மார்கழி 2-ந் தேதியான இன்று அதிகாலையில் சூரிய உதயத்தை தொடர்ந்து கோவில் மூலவர் மீது காலை 6.35 மணிக்கு கோவிலில் உள்ள மூலவர் மீது சூரிய ஒளி விழுந்தது.

    சுமார் 10 நிமிடம் வரை நீடித்த இந்த நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர். சிவபெருமானை சூரியன் வழிபடுவதாக நெகிழ்சியுடன் தெரிவித்தனர்

    முன்னதாக மார்கழி மாதத்தையொட்டி கோவில் நடை அதிகாலை திறக்கப்பட்டது. தொடர்ந்து திருப்பள்ளி எழுச்சி சிறப்பு அபிஷேகம், உதயமார் தாண்ட பூஜை, பிரசாதம் வழங்குதல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.

    நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கடல் மண்ணை பெட்டியில் சுமந்து அதை கடற்கரையில் கொட்டி நேர்த்தி கடன் செலுத்தினர். ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன் செய்திருந்தார்.

    • மார்கழியில் விஷ்ணு வழிபாடு மட்டுமின்றி, சிவன் வழிபாடும் சிறப்பானதாகும்.
    • கொடிய விஷத்தை சிவபெருமான் உண்டு, உலக உயிர்களை காத்ததும் மார்கழி மாதத்தில்தான்.

    'மாதங்களில் நான் மார்கழி என்று கீதையில் கிருஷ்ணர் அருளியுள்ளார். அதற்கேற்றால்போல் பல சிறப்புகளை மார்கழி மாதம் பெற்றுள்ளது. மார்கழி மாதம் வந்தாலே அதிகாலையில் எழுந்து நீராடி, இறைவனை வழிபடுவது என்பது வழக்கமான ஒன்றாகும்.

    மனிதர்களுக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாளாகும். தேவலோகத்தில் தை மாதம் முதல் ஆனி மாதம் வரை பகல் பொழுதாகவும், ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை இரவாகவும் கருதப்படுகிறது. பகல் பொழுதை உத்தராயணம் என்றும், இரவு பொழுதை என்றும் அதன்படி தட்சிணாயனம் அழைப்பார்கள். அதிகாலையான, பிரம்ம முகூர்த்தமாக தேவர்களுக்கு மார்கழி மாதம் உள்ளது. இதனால் மார்கழி மாதத்தில் செய்யப்படும் வழிபாடுகளுக்கு தனிச் சிறப்புகளும், பலன்களும் உண்டு. எனவேதான் மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து கோவிலுக்கு செல்ல வேண்டும் என்கிறார்கள்.

    ஜோதிட சாஸ்திரப்படி, சூரிய பகவான் தனுசு ராசியில் பிரவேசிக்கும் மாதமாக மார்கழி மாதம் உள்ளது. எனவே மார்கழி மாதம், 'தனுர் மாதம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தெய்வ வழிபாட்டுக்குரிய சிறப்புமிக்க மாதமான மார்கழியில் விஷ்ணு வழிபாடு மட்டுமின்றி, சிவன் வழிபாடும் சிறப்பானதாகும். மார்கழி மாதம் அதிகாலையில் வைணவ தலங்கள் திறக்கப்பட்டு, திருப்பாவை பாசுரங்கள் பாடி திருப்பள்ளியெழுச்சி நடைபெறும். அதுபோல சிவன் கோவில்களிலும் மாணிக்க வாசகர் அருளிய திருவெம்பாவை பாடப்படுகிறது.

    மார்கழி மாதம் விடியற்காலையில் கன்னி பெண்களை துயில் எழுப்பி, ஆற்றில் நீராடி இறைவனை போற்றி வழிபடுவதை ஆண்டாள் திருப்பாவையில் விவரித்துள்ளார். அதன்படி, மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து, குளித்துவிட்டு பாவை நோன்பு இருந்து இறைவனை வழிபட்டால் மனதிற்கு பிடித்த கணவன் கிடைப்பார் என்பது நம்பிக்கை. திருப்பாவை போன்று சிவ பக்தைகள், நோன்பு நோற்பதற்காக தோழிகளை எழுப்புவதாக அமைந்ததே, திருவெம்பாவை. சிவன் அடியாளர்களே கணவனாக வேண்டும் என்றும், பின்பு அவரோடு சேர்ந்து சிவனை தொழ வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

    கோகுலத்தில் இந்திரனால் பெருமழை உருவாக்கப்பட்டு, மக்கள் அனைவரும் துன்பப்பட்டபோது, கிருஷ்ணர் கோவர்த்தன மலையை குடையாகப் பிடித்து மக்களை காப்பாற்றினார். இந்நிகழ்வு நடந்தது மார்கழி மாதத்தில் தான். திருப்பாற்கடலை கடைந்தபோது, அதில் இருந்து ஆலகால விஷம் வெளிவந்தது. அந்த கொடிய விஷத்தை சிவபெருமான் உண்டு, உலக உயிர்களை காத்ததும் மார்கழி மாதத்தில்தான்.

    மகாவிஷ்ணுவுக்கு உகந்த வைகுண்ட ஏகாதசி, இந்த ஆண்டு மார்கழி மாதம் 15-ந் தேதி (30-12-2025) அன்று செவ்வாய்க்கிழமை வருகிறது. அன்றைய தினம், ஆண்டு முழுவதும் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் சொர்க்கவாசல் திறக்கப்படும். அந்த சொர்க்கவாசல் வழியாக நுழைந்துவந்தால், வாழ்வில் உள்ள சிக்கல்கள் நீங்கும், செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை.

    சிவாலயங்களில் நடைபெறும் முக்கிய உற்சவங்களில் ஒன்றான ஆருத்ரா தரிசனம் மார்கழி மாதத்தில் நடத்தப்படும். அதன்படி மார்கழி மாதம் 19-ந் தேதி (3-1-2025) அன்று சனிக்கிழமை ஆருத்ரா தரிசனம் வருகிறது. இது சிதம்பரம் நடராஜர் கோவிலில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    அனுமன் அவதரித்த நாளாக மார்கழி மாதம் அமாவாசை நாள் கருதப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு மார்கழி மாதம் 4-ந் தேதி (19-12-2025) கொண்டாடப்படுகிறது. அன்றைய தினமும் ஆஞ்சநேயருக்கு வடைமாலை, வெற்றிலை மாலை அணிவித்து வழிபட்டால் வாழ்வில் வெற்றிகள் குவியும்.

    மார்கழி மாதம் 10-ந் தேதி (25-12-2025) வியாழக்கிழமை அன்று பிள்ளையார் நோன்பு வருகிறது. திருக்கார்த்திகையில் இருந்து 21 நாட்கள் விரதம் இருந்து விநாயகரை வழிபட வேண்டும். இந்த விரதம் இருந்து வழிபட்டால் இனிமையான வாழ்வு அமையும்.

    மார்கழி மாதம் 30 நாட்களும் பெண்கள் அதிகாலையில் எழுந்து, நீராடிவிட்டு வீட்டின் முன்பு கோலமிட்டு அதன் மீது அழகான மலர்களால் அழகுபடுத்துவார்கள். கோலத்தின் மீது பரங்கிப்பூக்களை வைத்து அழகுபடுத்துவது வழக்கம். இதன்மூலம் மகாலட்சுமியே வீட்டிற்குள் குடியேறுவாள் என்பது ஐதீகம்.

    இத்தகைய சிறப்புகள் நிறைந்த மார்கழி மாதத்தில், அதிகாலையில் வீட்டின் அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று இறைவனை வழிபடுவதுடன், ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கலாம்.

    • மார்கழி மாதம் மூல நட்சத்திரமும், அமாவாசையும் இணையும் நாளில் அஞ்சனை மைந்தனாக அனுமன் அவதரித்தார்.
    • ஆஞ்சநேயரின் வாலில் நவக்கிரகங்கள் ஐக்கியமாகி இருப்பதாக ஐதீகம்.

    ராம நாமம் ஒலிக்கும் இடமெல்லாம் அனுமன் நிச்சயம் இருப்பார் என்பது ஐதீகம். ராமாயணத்தில் ராமருக்கு அடுத்தபடியாக, பக்தர்களால் கொண்டாடப்படும் கடவுள், அனுமன். இவர் அஞ்சனை மைந்தன், வாயு புத்திரன், ராம பக்தன், ராம தூதன், சிரஞ்சீவி, மாருதி, ஆஞ்சநேயர் எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகிறார். இவர் சிவபெருமானின் ருத்ர அம்சமாக கருதப்படுகிறார். ராம நாமத்தை சொல்பவர்களுக்கு உடனடியாக வந்து அருள்புரியும் அனுமனை வழிபட்டால் வாழ்வில் மகிழ்ச்சியும், புண்ணியமும் வந்துசேரும்.

    மார்கழி மாதம் அமாவாசையுடன் வரும் மூலம் நட்சத்திரத்தில் அனுமன் அவதரித்ததாக கூறப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு அனுமன் ஜெயந்தி மார்கழி மாதம் 4-ந் தேதி (19-12-2025) வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பக்தர்கள் பலரும் விரதம் இருந்து ஆஞ்சநேயரை வழிபடுவார்கள். சில வட மாநிலங்களில் சித்திரை மாதத்தில் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுவதும் உண்டு.

    ராமாயணத்தில் ராவணனை அழிப்பதற்காக மகாவிஷ்ணு, ராமராக அவதரித்தார். அவருக்கு உதவுவதற்காக தேவர்கள் பலரும் பல சக்திகளை கொடுத்து உதவினர். அதே சமயம், கிஷ்கிந்தை வனப் பகுதியில் கேசரி என்ற வானர அரசனும், அவரது மனைவியான அஞ்சனை தேவியும் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாததால், குழந்தை வரம் வேண்டி சிவபெருமானை நோக்கி தவம் இருந்தனர். அவ்வேளையில் ராமருக்கு உதவுவதற்காக சிவபெருமான், தன்னுடைய சக்தியை வாயு பகவானிடம் கொடுத்து ஒரு பெண்ணிடம் சேர்க்கும்படி கூறினார். வாயு பகவான் ஈசனின் சக்தியை அஞ்சனை தேவியிடன் சேர்த்தார். இதன்மூலம் மார்கழி மாதம் மூல நட்சத்திரமும், அமாவாசையும் இணையும் நாளில் அஞ்சனை மைந்தனாக அனுமன் அவதரித்தார்.

    அனுமன் ஜெயந்தி அன்று, அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு அனுமன் படத்துக்கு சிவப்பு நிற மலர்கள் சூட்டுங்கள். ஆஞ்சநேயருக்கு விருப்பமான உணவுகளை படைத்து, நெய் விளக்கேற்றி வழிபடுங்கள். அனுமனுக்குரிய பாடல்கள், ராமாயணத்தின் சுந்தர காண்டம் போன்றவற்றை படித்து வழிபடலாம். அதோடு வாழைப்பழம், வெற்றிலை, வெண்ணெய், செந்தூரம் போன்றவற்றை படைக்கலாம்.

    வனவாசம் சென்ற ராமன் மனைவியை ராவணன் கவர்ந்து சென்றான். இதையடுத்து சீதையை மீட்கும் முயற்சியில் இருந்த ராமனுக்கு சிறந்த சேவகனாக இருந்தவர் அனுமன். ராமனுக்காக சீதையிடம் தூது சென்று, அவர் கொடுத்த கணையாளியை கொடுத்து சீதையின் மரணத்தை தடுத்தார். மேலும், சீதா தேவி கொடுத்து அனுப்பிய சூடாமணியை ராமரிடம் கொடுத்து, இருவரும் சேருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர், அனுமன். இதனால் அனுமனை வழிபட்டால் பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர், கணவன் - மனைவி ஒற்றுமை பலப்படும், ஆனந்த வாழ்வு அமையும் என்பது நம்பிக்கை.

    ஆஞ்சநேயரின் வாலில் நவக்கிரகங்கள் ஐக்கியமாகி இருப்பதாக ஐதீகம். எனவே, அவரது வாலில் பொட்டு வைத்து வழிபடலாம். இவ்வாறு வழிபடுபவர்களுக்கு நவக்கிரகங்களின் தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.

    சிவபெருமான், ராமருக்கு உதவி செய்வதற்காக ஆஞ்சநேயராக அவதரித்தார். இதனால் ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும், பெருமாளையும் வழிபட்ட பலன் கிடைக்கும். ஆஞ்சநேயர் ஜெயந்தி அன்று, ஆஞ்சநேயரை மனதார வழிபட்டால் நினைத்த காரியம் நடக்கும். குடும்பத்தில் துன்பங்கள் விலகும், சகல மங்கலங்களும் வந்துசேரும்.

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். வருமானம் வந்த மறுநிமிடமே செலவாகலாம். பணியாளர்களின் ஒத்துழைப்புக் கொஞ்சம் குறையலாம்.

    ரிஷபம்

    வீடுமாற்றங்கள் பற்றிச் சிந்திக்கும் நாள். வாழ்க்கைத் தரம் உயர வழிவகை செய்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்வர்.

    மிதுனம்

    பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். உறவினர்களால் நன்மை உண்டு. தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.

    கடகம்

    வரவைக் காட்டிலும் செலவு கூடும். அன்றாடப் பணிகளில் இன்று மாற்றங்கள் ஏற்படலாம். உத்தியோகப் பிரச்சனை நீடிக்கும்.

    சிம்மம்

    ஆச்சரியப்படத்தக்க சம்பவங்கள் அதிகாலையிலேயே வந்து சேரும் நாள். தொலைதூரப் பயணங்கள் செல்லப் போட்ட திட்டங்கள் நிறைவேறும்.

    கன்னி

    தொட்ட காரியம் துளிர்விடும் நாள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் தோள்கொடுத்து உதவுவர். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் கூடும். உத்தியோக முயற்சி கைகூடும்.

    துலாம்

    உற்சாகத்துடன் பணிபுரியும் நாள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தனவரவு திருப்தி தரும். நேற்றைய பிரச்சனையொன்று இன்று நல்ல முடிவிற்கு வரும்.

    விருச்சிகம்

    அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் உங்கள் செயல்பாடு மற்றவர்களை ஈர்க்கும்.

    தனுசு

    எதிர்பார்த்த லாபம் எளிதில் கிடைக்கும் நாள். குடும்பத்தினர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. சொத்துப்பிரச்சனை சுமூகமாக முடியும்.

    மகரம்

    தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களைத் திட்டமிட்டபடி செய்து முடிப்பீர்கள்.

    கும்பம்

    வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். பிள்ளைகளின் பழக்க வழக்கங்களை நெறிப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் ஏற்பட்ட வீண்பழிகள் மாறும்.

    மீனம்

    பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். ஒருவழியில் வந்த வரவு மற்றொரு வழியில் செலவாகலாம். வியாபாரப் போட்டிகள் அதிகரிக்கும்.

    ×