டெல் அவிவ் நோக்கி வந்திருந்தால் சுட்டு வீழ்த்தியிருப்போம்: பிளைதுபாய் விமான தாக்குதல் குறித்து இஸ்ரேல் அதிரடி

இஸ்ரேல் விமானப்படை காக்பிட்டைத் தொடர்பு கொள்ள முயன்றது, ஆனால் அங்கிருந்து எந்தப் பதிலும் வரவில்லை.
Flydubai
Published on: 
Summary

துபாயில் இருந்து இஸ்ரேல் நோக்கிச் சென்ற பிளைதுபாய் விமானத்தில் இணை விமானி நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, அந்த விமானம் டெல் அவிவ் நகரை நோக்கித் தொடர்ந்து வந்திருந்தால் அதைச் சுட்டு வீழ்த்த இஸ்ரேல் விமானப்படை தயாராக இருந்ததாக தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 30 அன்று, துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரிலுள்ள பென் குரியன் விமான நிலையத்திற்கு 180க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பிளைதுபாய் நிறுவனத்தின் எஃப்.இஸட் 1073 ரக விமானம் சென்று கொண்டிருந்தது. விமானம் சவூதி அரேபிய வான்வெளியில் பறந்து கொண்டிருந்தபோது, அதன் இணை விமானியான ஓமன் நாட்டைச் சேர்ந்த ஹமாம் அல்-ஹம்மாமி, விமானத்தின் தலைமை விமானியான இந்தியாவைச் சேர்ந்த ஸ்மித் மச்சார் என்பவரை காக்பிட்டில் இருந்த அவசரகால கோடரியால் கொடூரமாகத் தாக்கினார். பின்னர் விமானத்தைக் கடத்தி, தெல் அவிவ் நகரில் உள்ள உயரமான கட்டிடத்திலோ அல்லது விமான நிலையத்திலோ மோதி அழிக்க முயற்சித்துள்ளார்.

16,000 அடிகள் சரிந்த விமானம்

தாக்குதலின் போது இணை விமானி கட்டுப்பாட்டு நெம்புகோலை இயக்கியதால், விமானம் சில வினாடிகளிலேயே 16,000 அடிக்கும் கீழே அதிவேகமாகச் சரிந்தது. இதனால் விமானத்திற்குள் பெரும் பதற்றம் உருவானது. படுகாயமடைந்த நிலையிலும் தலைமை விமானி ஸ்மித் மச்சார், காக்பிட் கதவைத் திறந்து பயணிகள் உள்ளே வர வழிவகை செய்தார். உடனடியாகச் செயல்பட்ட இஸ்ரேலிய பயணிகள் சிலர் காக்பிட்க்குள் புகுந்து தாக்குதல் நடத்திய இணை விமானியை மடக்கிப் பிடித்து கட்டினர். அதன்பின், விமானத்தில் பயணிகளாகப் பயணித்த ஓய்வுநேர விமானிகளின் உதவியோடு விமானம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

போர் விமானங்களை விரைவுபடுத்திய இஸ்ரேல்

விமானத்தில் இருந்து கடத்தல் மற்றும் அவசர நிலைக்கான சமிக்ஞைகள் அனுப்பப்பட்டதை தொடர்ந்து, இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் உடனடியாக எச்சரிக்கை அடைந்தனர். இஸ்ரேல் விமானப்படை காக்பிட்டைத் தொடர்பு கொள்ள முயன்றது, ஆனால் அங்கிருந்து எந்தப் பதிலும் வரவில்லை.

சாத்தியமான பயங்கரவாதத் தாக்குதலை எதிர்கொள்ள உடனடியாக அவசரகாலக் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு, இஸ்ரேலிய வான்வெளி தற்காலிகமாக மூடப்பட்டது. போர்க்கால அவசரகால வழிமுறைகள்செயல்படுத்தப்பட்டு, இஸ்ரேலிய போர் விமானங்கள் உடனடியாக விண்ணில் அனுப்பப்பட்டன. ஒருவேளை அந்த விமானம் டெல் அவிவ் நகரை நோக்கித் தொடர்ந்து வந்திருந்தால், அதைச் சுட்டு வீழ்த்தவும் இஸ்ரேலிய வான்படை தயாராக இருந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சவூதி அரேபியாவில் அவசரத் தரையிறக்கம்

விமானம் பயணிகள் மற்றும் மாற்று விமானிகளின் கட்டுப்பாட்டிற்குள் வந்ததையடுத்து, அது உடனடியாக சவூதி அரேபியாவில் உள்ள தபூக் விமான நிலையத்திற்குத் திருப்பப்பட்டு பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. அங்கு தயார் நிலையில் இருந்த சவூதி பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்திய இணை விமானியைக் கைது செய்தனர். படுகாயமடைந்த தலைமை விமானி ஸ்மித் மச்சாருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து சவூதி, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இஸ்ரேலிய உளவு அமைப்புகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com