தேர்தல் ஆணையத்தை நோக்கி 'இந்தியா கூட்டணி' பேரணி: டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு; ஆம் ஆத்மி புறக்கணிப்பு!

கடந்த செப்டம்பர் 30 அன்று நடைபெற்ற 19 எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில், தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து பேரணி நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
INDIA bloc rally
Published on: 
Summary

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் ராஜினாமாவை வலியுறுத்தியும், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த முறைகேடுகளுக்கு எதிராகவும் 'இந்தியா' கூட்டணிக் கட்சிகள் டெல்லியில் இன்று பிரம்மாண்ட பேரணி நடத்துகின்றன.

வாக்காளர் பட்டியலைச் சீரமைக்க தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் சிறப்புத் தீவிர திருத்த (SIR) நடவடிக்கைகளின் போது பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக 'இந்தியா' கூட்டணி எம்பிக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். வாக்காளர் சேர்க்கைக்கான 'படிவம் 6'-இல் தன்னிச்சையாக மாற்றங்கள் செய்யப்பட்டதாகவும், லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

கடந்த செப்டம்பர் 30 அன்று நடைபெற்ற 19 எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில், தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து பேரணி நடத்துவது என்றும், இந்த விவகாரத்தில் நாட்டின் குடியரசுத் தலைவரைச் சந்தித்து முறையிடுவது என்றும் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது எதிர்க்கட்சிகள் தீவிரக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.

தேர்தல் ஆணையம் மேற்கொண்ட இந்த சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு மற்ற இரு தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் கடந்த 10 மாதங்களில் குறைந்தது 14 முறை எதிர்ப்பை பதிவு செய்துள்ளதாக வெளியான செய்திகள் இந்த சர்ச்சையை மேலும் வலுப்படுத்தின.

மேலும், 'படிவம் 6'-இல் செய்யப்பட்ட மாற்றங்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் அனுமதி பெறப்படவில்லை என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தெரிவித்த கருத்து, எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு மேலும் வலு சேர்த்துள்ளது. இதன் காரணமாகத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

நாடாளுமன்றத்தில் இருந்து பேரணி

நாடாளுமன்ற வளாகத்தின் மகர் துவாரில் இருந்து காலை 10:30 மணியளவில் புறப்படும் இந்த பேரணி, நிர்வாச்சன் சதனில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணைய அலுவலகத்தை அடைந்து நிறைவடைகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், "நாங்கள் அமைதியான முறையில் எங்களது ஜனநாயக உரிமையை வலியுறுத்திப் பேரணி நடத்த உள்ளோம். போலீசார் எங்களைத் தடுக்கக் கூடாது" எனக் கேட்டுக்கொண்டுள்ளார். இப்போராட்டத்தில் இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் எம்பிக்களும் முக்கிய தலைவர்களும் பெருமளவில் பங்கேற்கின்றனர்.

டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு

பேரணியை முன்னிட்டு டெல்லி சன்சத் மார்க், படேல் சவுக், அசோகா சாலை மற்றும் தேர்தல் ஆணைய தலைமை அலுவலகப் பகுதிகளில் விரைவு அதிரடிப் படையினர் மற்றும் போலிஸார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். மத்திய டெல்லியில் போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. அதேவேளையில், இந்த பேரணியில் 'ஆம் ஆத்மி' கட்சி பங்கேற்கவில்லை என அறிவித்துள்ளது. வாக்காளர் பட்டியல் முறைகேடுகளுக்கு எதிராகத் தங்கள் கட்சி தனியாகத் தொடர் போராட்டங்களை நடத்தி வருவதாகவும், இது மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டு வருவதால் இந்த கூட்டணிக் கூட்டமைப்பின் பேரணியைத் தவிர்ப்பதாகவும் ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com