

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்து, தற்போதைய முதலமைச்சர் விஜய் செய்த செய்கைக்கு விசிக தலைவர் திருமாளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் அமைச்சர் நிர்மல் குமார் தனது கருத்தை திரும்பப் பெறுவதாக அறிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்.,
“காவல்துறை மானியத்தில் முதலமைச்சர் விஜய் ஆற்றிய பதிலுரையின்போது, திமுக தலைவரும் மேனாள் முதலமைச்சருமான ஸ்டாலின் அவர்களைக் கேலி செய்யும் வகையில் அவரது உடல்மொழி அமைந்திருந்ததாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், விஜய் தரப்பில் ‘அது உள்நோக்கம் கொண்டதல்ல’ என்று விளக்கம் சொல்லப்பட்டிருக்கிறது.
எனினும், இதுபோன்ற ‘உடல்மொழிகள்’ கண்ணியமான அணுகுமுறை இல்லை என்பதையும், மனித மாண்புகளுக்கு எதிரானது என்பதையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சுட்டிக்காட்டுகிறோம்.
எந்தவொரு சூழலிலும் ஒருவரின் ‘தன்மதிப்பைக்’ குறைத்து மதிப்பிடுவதோ, காயப்படுத்துவதோ நாகரிகம் ஆகாது. தனிநபர் ஒருவரின் மீதான அரசியல் விமர்சனங்கள் என்பது வேறு; தனிப்பட்ட முறையில் ஒருவரின் தன்மதிப்பைக் காயப்படுத்தும் விமர்சனங்கள் என்பது வேறு.
கல்வி, பொருளாதாரம், அதிகாரம் போன்ற வலிமையில்லாத எளிய மனிதரையும் கூட காயப்படுத்தும் அணுகுமுறை ஒருபோதும் ஏற்புடையதில்லை. அகவையில் மூத்தோரை மதிப்பது மனித மாண்புகளில் மிகவும் உயர்ந்ததாகும்.
எனவே, மாண்பு நிறைந்த ஒரு மகத்தான பொறுப்பிலுள்ள முதலமைச்சர் இனிவரும் காலத்தில் தனது உடல்மொழியில் மிகுந்த கவனத்துடன் இருத்தல் நலம் பயப்படும்.
முதலமைச்சரின் பதிலுரையையொட்டி அடுத்தநாள் திமுக தரப்பில் முதலமைச்சரின் உரையில் சில பகுதிகளை அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அந்த விவாதத்தின் போது இடைமறித்து சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் கூறிய கருத்து வரலாற்றுப் பிழையாகும்.
மிசா காலத்து அரசப்பயங்கரவாதம் எத்தகையது என்பது நாடறிந்த ஒன்றாகும். அந்தக் கொடிய ஒடுக்குமுறைக்குள்ளான திமுக தலைவர் குறித்து முற்றிலும் தவறான கருத்தினைப் பதிவு செய்தது கண்டனத்துக்குரியதாகும்.
அமைச்சர் அதனை திரும்பப் பெறுவதாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.