சாத்தன்குளம் சம்பவம் : சிறுவனுக்கு உரிய சிகிச்சை கிடைப்பதை அரசு உறுதி செய்யவேண்டும் - கனிமொழி

இது 8-வது கொலை, என்ன சொன்னாலும் மக்களின் உயிரைப் பற்றி கவலையில்லை எனச் செயல்படும் ஒருவரிடம் தமிழ்நாடு சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கிறது.
kanimozhi
Published on: 

சாத்தான்குளத்தில் படுகொலை செய்யப்பட்ட மேரி விஜிலா அவர்களின் கணவர் முத்துக் கிருஷ்ணன் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரும் இன்று மரணமடைந்திருக்கிறார்.

சாத்தான்குளம் அருகே முதலூரைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் (50), அவரது மனைவி மேரி ரெஜிலா (39) ஆகியோரின் 15 வயது மகள் ஒருவரை, ஞானப்பிரகாஷ் என்ற புரோட்டா மாஸ்டர் காதலித்து வந்துள்ளார். இந்த காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து மகளைக் கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஞானப்பிரகாஷ், நள்ளிரவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த நேரத்தில் முத்துகிருஷ்ணனின் வீட்டிற்குள் புகுந்து சரமாரியாகத் தாக்குதல் நடத்தினார்.

இந்தத் தாக்குதலில் தாய் மேரி ரெஜிலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தடுத்த கணவர் முத்துகிருஷ்ணன் மற்றும் 10 வயது மகன் பிளசெட் ராஜா ஆகிய இருவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்து படுகாயமடைந்தனர். தொடர்ந்து வீட்டில் இருந்த இரு மகள்களையும் ஞானப்பிரகாஷ் கடத்திச் சென்றார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த தட்டார்மடம் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, கடத்தப்பட்ட இரு சிறுமிகளையும் ஆனந்தபுரம் பகுதியில் பூட்டப்பட்டிருந்த அறையில் இருந்து பத்திரமாக மீட்டனர். தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி ஞானப்பிரகாஷையும் போலீசார் கைது செய்தனர்

சிகிச்சை பெற்று வந்த தந்தை உயிரிழப்பு

தாக்குதலில் பலத்த காயமடைந்து நெல்லை அரசு மருத்துவமனையில் கடந்த சில நாட்களாகத் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த தந்தை முத்துகிருஷ்ணன் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதன் மூலம் இந்த வழக்கு இரட்டை கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது

இது 8-வது கொலை; என்ன சொன்னாலும் மக்களின் உயிரைப் பற்றி கவலையில்லை எனச் செயல்படும் ஒருவரிடம் தமிழ்நாடு சிக்கிச் சீரழிந்து கொண்டிருப்பதாக கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது

சாத்தான்குளத்தில் படுகொலை செய்யப்பட்ட மேரி விஜிலா அவர்களின் கணவர் முத்துக் கிருஷ்ணன் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரும் இன்று மரணமடைந்திருக்கிறார்.

பாதுகாப்பைத்தான் ஒழுங்காக வழங்க முடியவில்லை என்றால் மருத்துவ சிகிச்சையைக் கூட இந்த அரசால் முறையாக வழங்க முடியாதா? தூத்துக்குடியில் ஒரு வாரத்தில் இது 8-வது கொலை; என்ன சொன்னாலும் மக்களின் உயிரைப் பற்றி கவலையில்லை எனச் செயல்படும் ஒருவரிடம் தமிழ்நாடு சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கிறது.

சிகிச்சையில் இருக்கும் சிறுவனுக்காவது உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதை அரசு உறுதி செய்யவேண்டும்

என்று தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com