

தமிழில் சிறந்த பட்டிமன்றங்கள், தமிழ்த்துறையில் பேராசிரியர் என தமிழுக்காக தன்னை ஈடுப்படுத்திக்கொண்ட சாலமன் பாப்பையா வயது மூப்பு காரணமாக இன்று சொந்த ஊரான மதுரையில் காலமானார்.
மறைந்த சாலமன் பாப்பையாவிற்கு விசிக தலைவர் தொல் திருமாவளவன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இரங்கல் செய்தி குறிப்பில் அவர் தெரிவித்துள்ளதாவது
பட்டிமன்றப் பேச்சாளரும் தமிழறிஞருமான பேரா.சாலமன் பாப்பையா அவர்களின் மறைவு பெரும் துயரமளிக்கிறது. தொண்ணூறு வயது வரை நிறைவாழ்வு வாழ்ந்தவர் என்றாலும் அவர் இன்று நம்மிடையே இல்லை என்பது கவலையளிக்கிறது. காலமான அய்யாவுக்குவிடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
பேரா.சாலமன் பாப்பையா அவர்கள் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றிய காலத்தில் சங்க இலக்கியங்களில் அவருக்கு ஏற்பட்ட மிகுந்த ஈடுபாடு காரணமாக அந்நூல்களை எளிய நடையிலும், நகைச்சுவையோடும் மாணவர்களுக்கு பயிற்றுவித்துள்ளார்.
திருக்குறள்,புறநானூறு,அகநானூறு மற்றும் மதுரைக்காஞ்சி ஆகிய சங்க இலக்கிய நூல்களுக்கு எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய உரைநடைகள் எழுதி உள்ளார்.
ஒரு காலத்தில் பட்டிமன்றம் என்றாலே இராமாயணம், மகாபாரதம் போன்ற தலைப்புகளில் மட்டுமே தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் நடைபெற்று வந்தன.
அதனை உடைத்தெறிந்து ஆண் - பெண், குடும்பம், கல்வி, பொருளாதாரம் போன்ற சமூகம் சார்ந்த ஆக்கப்பூர்வமான தலைப்புகளில் பாமர மக்களும் புரிந்துகொள்ளும் வட்டார வழக்கு மொழியில் நகைச்சுவையோடு பட்டிமன்றங்களை வழி நடத்தி வந்துள்ளார். ஏறக்குறைய பன்னிரண்டாயிரம் பட்டிமன்றங்களில் அவர் பங்கேற்றுள்ளார் என்பது அளப்பரிய சாதனையாகும்.
பட்டிமன்றத்தை தொடங்கும் போது அன்பு பெரியோர்களே!, அருமைத் தாய்மார்களே!, இனிய குழந்தைகளே; என்று விளிக்கும் வழக்கத்தை அவருக்கென தனித்த அடையாளமாக வைத்துக் கொண்டார்.
பல்வேறு நாடுகளுக்கு தமிழ்ச் சங்கங்களால் அழைக்கப்பட்டு உரையாற்றும் வாய்ப்புகளை பெற்றவர். அவரது தமிழ்த் தொண்டினைப் பாராட்டி பல்வேறு இயக்கங்கள், இலக்கிய அமைப்புகள் அவருக்கு ஏராளமான விருதுகளை வழங்கியுள்ளன. அத்துடன்,தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதும், ஒன்றிய அரசின் பத்மஸ்ரீ விருதும் பெற்றுள்ளார்.
எளிய மக்களின் தமிழ்ச் சொல்லாடல்களை பட்டிமன்றத்தின் வாயிலாக தமிழுலகிற்கு கொண்டு சேர்த்த பெருமை கொண்டவர். அத்தகைய தமிழ்ப் பெருந்தகை பேரா.சாலமன் பாப்பையா மறைவென்பது தமிழ் கூறும் நல்லுலகிற்கு நேர்ந்த பேரிழப்பாகும்.
ஆகவே,அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தார் மற்றும் தமிழ்ச் சொந்தங்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், சீமான் தனது இரங்கல் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது
முதுபெரும் தமிழறிஞரும், புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவருமான, மதிப்பிற்குரிய ஐயா, பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
தமிழ்நாடு முழுவதும் மட்டுமல்லாது தமிழர்கள் வாழ்கின்ற உலக நாடுகள் பலவற்றிலும், அறிவுக்கு விருந்துபடைக்கும், இலக்கிய சுவைமிகுந்த, பட்டிமன்றங்களை நடத்தி, தமிழும், பேச்சுக்கலையும் வளர்த்த அவருடைய அரும்பணிகள் போற்றுதற்குரியது.
எளிய மக்களும் அறிந்துகொள்ளும் வண்ணம், தமிழ்மறையாம் திருக்குறளுக்கு எளிய தமிழில் உரை எழுதிய ஐயாவின் தமிழ்த்தொண்டு தமிழின வரலாற்றில் என்றும் நிலைபெற்றிருக்கும். ஐயா சாலமன் பாப்பையா அவர்களின் மறைவு தமிழ் அறிவுலகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.
ஐயா அவர்களை இழந்துவாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், தமிழ்ப்பற்றாளர்களுக்கும், பட்டிமன்ற ரசிகர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.
பெருமதிப்பிற்குரிய ஐயா பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்! என்று தெரிவித்திருக்கிறார்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.