

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் வங்கக்கடலில் புயல் உருவாகிறது. இந்த புயலுக்கு அர்னாப் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கிழக்கு-மத்திய மற்றும் அதனையொட்டிய தென் கிழக்கு வங்கக்கடலில் நேற்று ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அது அடுத்தடுத்து வலுவடைந்து புயலாக உருவாகக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
இந்த நிலையில் இன்று காலை 5.30 மணி அளவில் அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, கிழக்கு-மத்திய வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளது.
அது இன்று மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய கூடும். அதன் பிறகு அது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (25-ந்தேதி) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுவடைகிறது. 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலையில் மேற்கு-மத்திய வங்க கடலில் புயலாக வலுவடைய அதிக வாய்ப்பு உள்ளது.
அதன் பிறகு இது மேலும் வலுவடைந்து அடுத்த 2 நாட்கள் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 28-ந்தேதி காலையில் வடக்கு ஆந்திரா மற்றும் இதனை ஒட்டிய தெற்கு ஒடிசா கடற்கரை பகுதிகளை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அர்னாப் புயல் ஆந்திரா நோக்கி செல்வதால் தமிழகத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை என்று கருதப்படுகிறது.
இதன் காரணமாக இன்று (சனிக்கிழமை) முதல் 26-ந்தேதி (திங்கட்கிழமை) வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்திற்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கோவையில் இன்று மிக கனமழை பெய்யும்.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரியில் இன்று கனமழை பெய்யும்.
தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் நாளை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.