

எதிர்க்கட்சி மீது ரெய்டு நடத்துவதால் மக்கள் கோபத்தைத் தணிக்க முடியாது. பொய்யான குற்றச்சாட்டுகளும் சட்டத்தின் முன் நிலைக்காது என்பதை இந்த அரசு விரைவில் உணரும்! என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கியதில் ரூ.100 கோடிக்கு மேல் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் திருச்சி வீடு மற்றும் அவர் தொடர்புடைய 6 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீது ரெய்டு அஸ்திரத்தை ஏவியுள்ளது எதற்கும் லாயக்கற்ற த.வெ.க. அரசு என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது ரெய்டு: மற்றுமொரு திசைதிருப்பும், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை
* தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டினால் பாதிக்கப்படும் மக்களின் போராட்டங்கள்
* பட்டினப்பாக்கம் மீனவர்கள் போராட்டம்
* நேபாளத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் உரிய பதில் கிடைக்காமல் தலைமைச் செயலகம் முன் போராட்டம்
* ஆவின் பால் தட்டுப்பாட்டால் மக்கள் பரிதவிப்பு
* ராமநாதபுரம் இரட்டைக் கொலை
* சென்னையில் பிள்ளையார் சதுர்த்தி ஊர்வலத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர் அடித்துக் கொலை
* அயனாவரத்தில் பெண் காவலரிடம் த.வெ.க. நிர்வாகி சீண்டல்
என மாநிலத்தை உலுக்கி வரும் எதையும் கண்டுகொள்ளாமல் லண்டனில் ஷூட்டிங் நடத்திக்கொண்டிருக்கிறார் முதலமைச்சர்.
இந்தப் பிரச்சனைகளைச் சரிசெய்ய முடியாத விரக்தியில், மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீது ரெய்டு அஸ்திரத்தை ஏவியுள்ளது எதற்கும் லாயக்கற்ற த.வெ.க. அரசு.
இந்த அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையைச் சட்டரீதியாக நாங்கள் எதிர்கொள்வோம். எதிர்க்கட்சி மீது ரெய்டு நடத்துவதால் மக்கள் கோபத்தைத் தணிக்க முடியாது. பொய்யான குற்றச்சாட்டுகளும் சட்டத்தின் முன் நிலைக்காது என்பதை இந்த அரசு விரைவில் உணரும்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.