Make In India விளம்பரம் என்பது மோடி அரசு இந்திய மக்களுக்கு செய்த வரலாற்றுப் பெருந்துரோகம்! - மாணிக்கம் தாகூர்

மோடி அரசின் வெற்று வாக்குறுதிகளை நம்பி புதிய ஆலைகளைத் திறக்கவோ முதலீடு செய்யவோ தனியார் நிறுவனங்கள் முற்றிலும் அச்சமடைந்து பின்வாங்குகின்றன!
மாணிக்கம் தாகூர்
மாணிக்கம் தாகூர்
Published on: 
Summary

மொத்த வேலைவாய்ப்பில் உற்பத்தித் துறையின் பங்கு 12.5%-லிருந்து 12.1% ஆகக் குறைந்து, ஒரு தசாப்தத்திற்கு முந்தைய நிலைக்கே நாடு பின்னோக்கித் தள்ளப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கூறி உள்ளார்.

காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:

12 ஆண்டுகால Make In India விளம்பரம் என்பது மோடி அரசு இந்திய மக்களுக்குச் செய்த வரலாற்றுப் பெருந்துரோகம்!

கோடிகளைக் கொட்டித் தீர்த்த வெற்று விளம்பரங்களால் கட்டமைக்கப்பட்ட போலி மாயையை, ஒன்றிய பாஜக அரசின் அதிகாரப்பூர்வப் புள்ளிவிவரங்களே அக்குவேறு ஆணிவேறாகத் தோலுரித்துக் காட்டுகின்றன!

நாட்டின் உற்பத்தித் துறையை அதலபாதாளத்திற்குத் தள்ளிவிட்டு, இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவுகளைச் சுக்குநூறாக்கிய இந்த 12 ஆண்டுகால மோசடி ஆட்சிக்கு இதோ ஆதாரப்பூர்வமான குற்றப்பத்திரிகை:

1. மந்தமான உற்பத்தி வளர்ச்சி: பழைய மற்றும் புதிய தொடர் இரண்டிலுமே, நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சியை விட உற்பத்தித் துறை வளர்ச்சி தொடர்ந்து பின்னுக்குத் தள்ளப்பட்டு மந்தமாகவே நீடிக்கிறது. 2025-26ல் ஒட்டுமொத்த வளர்ச்சியை விட உற்பத்தித் துறை GVA -0.3% அளவுக்குப் பாதாளத்திற்குச் சரிந்துள்ளது! IIP தொழில்துறை உற்பத்தியிலும் புதிய தொடரின்படி உற்பத்தித் துறை வளர்ச்சி -1.3% பின்தங்கி நிற்கிறது. 'Make in India'-வால் எந்தவொரு கூடுதல் எழுச்சியும் ஏற்படவில்லை!

2. வீழ்ச்சியடைந்த உற்பத்திப் பங்கு (GVA Share): 2014-ல் இத்திட்டம் தொடங்கப்பட்டபோது நாட்டின் மொத்த GVA-வில் உற்பத்தித் துறையின் பங்கு 17.3% ஆக இருந்தது; ஆனால் 12 ஆண்டுகள் கழித்து 2025-26ல் அது 17.1% ஆகக் குறைந்து படுதோல்வி அடைந்துள்ளது (பழைய தொடர்). புதிய தொடரிலும் 12 ஆண்டுகளில் வெறும் 1% மட்டுமே பெயரளவு உயர்ந்து 15.6%-ல் தேங்கி நிற்கிறது. உற்பத்தியின் பங்கை 25% ஆக உயர்த்துவோம் என்று கூச்சலிட்ட மோடி அரசின் வெற்று முழக்கம் எங்கே போனது?

3. ஏற்றுமதியில் எந்த மாற்றமும் இல்லை: கச்சா எண்ணெய் அல்லாத பொருட்களின் ஏற்றுமதி வளர்ச்சி என்பது மேக் இன் இந்தியா திட்டத்திற்கு முன்பிருந்த அதே வழக்கமான வேகத்தில்தான் சென்று கொண்டிருக்கிறது. மிக முக்கியமாக, உலகளாவிய சரக்கு ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 2012 முதல் சுமார் 1.7%-ல் எந்த முன்னேற்றமும் இன்றி அப்படியே முடங்கிப்போய் நிற்கிறது. சர்வதேச சந்தையில் இந்தியாவை முன்னிறுத்த மோடி அரசு முற்றிலும் தவறிவிட்டது!

4. சரிந்து விழும் தனியார் முதலீடுகள்: நாட்டின் ஜிடிபி-யில் தனியார் துறையின் மூலதன உருவாக்கம் அல்லது புதிய சொத்து உருவாக்கம் பழைய மற்றும் புதிய தொடர் இரண்டிலுமே தொடர் சரிவைச் சந்தித்து வருகிறது. மோடி அரசின் வெற்று வாக்குறுதிகளை நம்பி புதிய ஆலைகளைத் திறக்கவோ முதலீடு செய்யவோ தனியார் நிறுவனங்கள் முற்றிலும் அச்சமடைந்து பின்வாங்குகின்றன!

5. FDI வீழ்ச்சியும் மோடி அரசின் ஏமாற்றும் போக்கும்: அந்நிய நேரடி முதலீட்டிலும் (FDI) எந்தப் பெரிய முன்னேற்றமும் ஏற்படவில்லை. கடந்த 12 ஆண்டுகளில் 7 ஆண்டுகள் ஒட்டுமொத்த FDI வளர்ச்சியை விட உற்பத்தித் துறைக்கான FDI வளர்ச்சி மிகவும் குறைவாகவே உள்ளது. 2014-15ல் ஒட்டுமொத்த FDI 27.3% ஆக இருந்தபோதே உற்பத்தி FDI வெறும் 4.9% என்ற அளவில்தான் இருந்தது; 2022-23ல் உற்பத்தி FDI -31.2% வரை அதலபாதாளத்திற்கு வீழ்ந்தது!

6. முடங்கிக் கிடக்கும் தொழிற்சாலை கொள்ளளவு: இந்தியத் தொழிற்சாலைகளின் கொள்ளளவுப் பயன்பாடு, புதிய தனியார் முதலீடுகளைத் தூண்டக்கூடிய 80% அளவைக் கடந்த 12 ஆண்டுகளாகத் தொடவே முடியவில்லை. 2020-ல் 47.3% வரை படுமோசமாகச் சரிந்து, 12 ஆண்டுகள் கடந்தும் 77.4%-ல் மட்டுமே தேங்கி நிற்கிறது. இருக்கும் ஆலைகளே முழுமையாக இயங்காதபோது புதிய தொழிற்சாலைகள் எங்கே வரும்?

7. அன்றாடச் செலவுகளுக்கே வங்கிக் கடன்கள்: தொழில்துறைக்கான வங்கிக் கடன் ரூ.45.8 லட்சம் கோடியாக உயர்ந்திருந்தாலும், களத்தில் புதிய மூலதன முதலீடுகளோ பிரம்மாண்ட ஆலைகளோ வரவில்லை. உற்பத்தித் தேக்கத்தால் நிறுவனங்கள் புதிய தொழில் தொடங்காமல், வெறும் அன்றாட செலவுகளுக்கும் நடைமுறை மூலதனத்திற்கும் கடன் வாங்கி சமாளிக்கும் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன!

8. PLI திட்டத்தின் பெயரளவு பலன்கள்: ரூ.2.4 லட்சம் கோடி முதலீடு என்று வீண் விளம்பரம் செய்துகொண்டாலும், அந்த முதலீடுகளும் வேலைவாய்ப்புகளும் குறிப்பிட்ட சில துறைகளில் மட்டுமே குவிக்கப்பட்டு முடங்கிப்போயுள்ளன. அடித்தட்டு மக்களுக்கான ஜவுளித் துறை (Textiles), தகவல் தொழில்நுட்ப வன்பொருள் (IT Hardware), மருத்துவ உபகரணங்கள் போன்ற மிக முக்கியமான வாழ்வாதாரத் துறைகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு வஞ்சிக்கப்பட்டுள்ளன!

9. வேலைவாய்ப்பில் மாபெரும் பின்னடைவு: உற்பத்தித் துறையில் பணியாற்றியவர்களின் எண்ணிக்கை 2016-17ல் 5.1 கோடியாக இருந்தது, 10 ஆண்டுகள் கழித்து 2025-26ல் வெறும் 5.3 கோடியாக மட்டுமே பெயரளவு உயர்ந்துள்ளது! மொத்த வேலைவாய்ப்பில் உற்பத்தித் துறையின் பங்கு 12.5%-லிருந்து 12.1% ஆகக் குறைந்து, ஒரு தசாப்தத்திற்கு முந்தைய நிலைக்கே நாடு பின்னோக்கித் தள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com