மோடி அரசின் நிர்வாகச் சீர்கேடுகளும் திட்டமிடலற்ற செயல்பாடுகளுமே விலைவாசி உயர்வுக்குக் காரணம்- மாணிக்கம் தாகூர்

மாநில அரசுகளை அழைத்து ஓர் ஆலோசனைக் கூட்டத்தைக் கூட நடத்தாத மத்திய பாஜக - ஆர்எஸ்எஸ் அரசு, தனது நிர்வாகத் தோல்விகளை மறைக்கப் பல்வேறு பொய்ப் பிரச்சாரங்களை அவிழ்த்து விடுகிறது.
மாணிக்கம் தாகூர்
Published on: 
Summary

மோடி - அமித் ஷா அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லாமை காரணமாக விலைவாசி உயர்வு ஏற்பட்டு, சாமானிய மக்கள் கடும் துயரத்தில் உள்ளனர். தமிழ்நாடு காங்கிரஸ், மத்திய அரசின் நிர்வாகச் சீர்கேடுகளை கண்டித்து, விலைவாசி கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நாடு முழுவதும், விண்ணைத் தொடும் அளவுக்கு நாளுக்கு நாள் உயர்ந்து வரும் அரிசி, வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசியால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்தத் தீவிர விலைவாசி உயர்வால் மோடி - அமித் ஷா அரசுக்கு எதிராக மக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

சர்வதேசப் போர்ச் சூழல் காரணமாக எரிசக்தி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், அதிக கடன் சுமையுள்ள கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் வளரும் நாடுகள் தங்கள் செலவினங்களைக் கட்டுப்படுத்தாவிட்டால் கடன் மறுசீரமைப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) வெளிப்படையாக எச்சரித்துள்ளது. மேலும், பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள தீவிர ‘சூப்பர் எல் நினோ’ தாக்கத்தால் உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டு, சர்வதேச அளவில் அரிசி மற்றும் உணவுப் பொருட்களின் பற்றாக்குறையும் விலை உயர்வும் ஏற்படும் என்றும், இது பலவீனமான பொருளாதாரங்களை மோசமாகத் தாக்கும் என்றும் IMF மற்றும் வானிலை ஆய்வு மையங்கள் எச்சரித்திருந்தும் மத்திய அரசு எந்தவொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

இந்தியாவின் மொத்த விலை பணவீக்கக் குறியீடு (WPI) 11 மாதங்களில் இல்லாத அளவிற்கு 2.13 சதவீதமாகக் கடுமையாக உயர்ந்துள்ளதும், சர்வதேசக் கச்சா எண்ணெய் விலை உயர்வு பணவீக்கத்தை மேலும் உச்சத்திற்குக் கொண்டு செல்லும் என்பதும் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் மூலம் வெட்டவெளிச்சமாகியுள்ளது. ஆனால், தேசிய அளவில் உணவுப் பஞ்சமும் கடுமையான விலைவாசி உயர்வும் ஏற்படும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் பொதுவெளியில் பொறுப்பற்ற முறையில் பேட்டி அளித்துவிட்டு ஒதுங்கிக் கொள்கிறார்களே தவிர, தானிய சேமிப்பு, எரிசக்தி மற்றும் எரிவாயு மாற்றுத் திட்டங்கள், அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான ஏற்றுமதி கட்டுப்பாடுகள் போன்ற எந்தவொரு உருப்படியான நடவடிக்கையையும் மோடி - அமித் ஷா அரசு எடுக்கத் தவறிவிட்டது.

முதன்மைக் காரணங்கள்

மாநில அரசுகளை அழைத்து ஓர் ஆலோசனைக் கூட்டத்தைக் கூட நடத்தாத மத்திய பாஜக - ஆர்எஸ்எஸ் அரசு, தனது நிர்வாகத் தோல்விகளை மறைக்கப் பல்வேறு பொய்ப் பிரச்சாரங்களை அவிழ்த்து விடுகிறது. மேற்காசியப் போர், உக்ரைன் போர் மற்றும் உரத்தட்டுப்பாட்டை மட்டுமே காரணமாகக் காட்டிச் சமூக வலைத்தளங்களில் போலியான பிம்ப அரசியலை முன்னெடுத்துப் பழியைப் பிறர் மீது போட்டுத் தப்பிக்கப் பார்க்கின்றனர். ஆனால், மோடி - அமித் ஷா அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளும், சர்வதேச வணிகத்தை முறையாகப் பாதுகாக்காததும், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைகளைத் தொடர்ந்து உயர்த்தி வருவதுமே இந்த வரலாறு காணாத விலைவாசி உயர்வுக்கு முதன்மைக் காரணங்களாகும்.

சாமானிய மக்களை வாட்டி வதைக்கும் இந்த விலைவாசி ஏற்றத்திற்கும் தட்டுப்பாட்டிற்கும் மத்திய மோடி - அமித் ஷா தலைமையிலான பாஜக - ஆர்எஸ்எஸ் அரசின் நிர்வாகச் சீர்கேடுகளும், தொலைநோக்கற்ற செயல்பாடுகளுமே நேரடிக் காரணம் என்பதற்குத் தமிழ்நாடு காங்கிரஸ் தனது வன்மையான கண்டனங்களைப் பதிவு செய்கிறது. இனியும் காலந்தாழ்த்தாமல், மாநில முதலமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டி, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்கு மானிய விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்குவதோடு, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை உடனடியாகக் குறைக்க வேண்டும். மேலும், மின் தட்டுப்பாட்டால் மாநில அரசுகள் நிதி நெருக்கடியில் சிக்குவதைத் தடுக்க மத்திய தொகுப்பிலிருந்து கூடுதல் மின்சாரத்தை வழங்க வேண்டும். எளிய மக்களின் அன்றாடப் பொருளாதாரப் பாதுகாப்பிற்கு எப்போதும் முதலுரிமை அளித்துத் தமிழ்நாடு காங்கிரஸ் மக்கள் பக்கம் உறுதியாகத் துணைநிற்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com