

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆளுங்கட்சி MLA ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவருக்கே பாதுகாப்பு இல்லை என்றால், மக்களின் பாதுகாப்பு குறித்து முதலமைச்சர் என்ன பதில் தரப்போகிறார் என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு தவெக கள்ளக்குறிச்சி MLA அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், மதுபோதையில் ஆட்சியரின் வீட்டிற்கே சென்று தொல்லை அளித்ததாகவும் வருகின்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
ஒரு மாவட்டத்தின் மக்கள், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் ஆட்சியர். அந்த ஆட்சியர் அவர்களுக்கே பாதுகாப்பு இல்லை; அதுவும் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினரிடம் இருந்தே! கேவலம் !!
ஒரு மாவட்டத்தின் ஆட்சியர் , அம்மாவட்டத்தின் நிர்வாக நீதிபதியும் (District executive Magistrate) ஆவார் , அவருக்கே நீதி இல்லை என்றால், இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் ? முதலமைச்சரே...
பதில் என்று எதாவது உங்களிடம் இருந்து முதலில் வருமா?
“உள்ளாடையுடன் நிற்கவைப்பேன்” என்று மிரட்டும் அமைச்சர், மனு கொடுக்க வந்தவரைத் தாக்கி “ஆபாச அர்ச்சனை” செய்து அதை மறைக்க முயலும் துணை சபாநாயகர், எல்லாவற்றிற்கும் மேலாக “ஆட்சியருக்கே ஆபாச மெசேஜ்” அனுப்பிய MLA என்று தவெக கட்சியைச் சேர்ந்தோர் சட்டம் ஒழுங்கைக் காக்கும் லட்சணம் பல்லிளித்துக் கொண்டிருக்கிறது.
தங்கள் கட்சியினர் தவறு செய்தால் வாய்மூடி மவுனியாக இருக்கும் அரசு, மற்ற கட்சியினர் செய்திருந்தால் இன்று அனைத்து மைக்குகள் முன்னரும் so called spokespersons எவ்வளவு பேசியிருப்பர்??
நூலிழையில் தொங்கிக் கொண்டிருக்கும் தனது ஆட்சியைக் காப்பற்றிக் கொள்ள, MLA மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் பயப்படுகிறாரா?
வாக்களித்த மக்களின் பாதுகாப்பை விட, முதலமைச்சர் நாற்காலி தான் விஜய்க்கு முக்கியமென்று கருதுகிறாரா?
பாலியல் வழக்கு ஒன்றில் தொடர்பு இருந்ததாக ஸ்ரீவைகுண்டம் தவெக MLA விஜய் சரவணன் மீது வழக்கே பதியாமல், அவருக்கு சட்டமன்றத்திலேயே “Good Conduct Certificate” அளித்து வழக்கை இழுத்து மூடியது அதே Formula-வை அருள் விக்னேஷுக்கும் பயன்படுத்தப் போகிறதா இந்த அரசு?
ஒரு ஆட்சியாளராக மாவட்ட ஆட்சியருக்கு நடந்த இந்த கொடுமைக்கு எதிராக வழக்கு பதிந்து தன் கட்சி MLA-வை கைது செய்ய வேண்டும் நேர்மையான, அரசியல் குறுக்கீடற்ற விசாரணை நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
செய்வீர்களா முதலமைச்சரே? என்று வினவியுள்ளார்.