

சென்னை அண்ணா அறிவாலய கலைஞர் அரங்கில் நடைபெறவிருந்த தி.மு.க. முப்பெரும் விழா, தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டதால் முதலில் ஒத்திவைக்கப்பட்டது. மருத்துவர்களின் ஆலோசனையின்படி அவர் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். தற்போது பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பின்படி, விழா 19.09.2026 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.
தி.மு.க. சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பிறந்தநாள்கள், தி.மு.க. தொடங்கப்பட்ட நாள் ஆகிய மூன்றையும் இணைத்து முப்பெரும் விழா நடத்தப்படுகிறது.
அந்த வகையில், 2026-ம் ஆண்டுக்கான தி.மு.க. முப்பெரும் விழா நேற்று முன்தினம் சென்னை அண்ணா அறிவாலயத்திடல் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக தி.மு.க. முப்பெரும் விழா ஒத்திவைக்கப்படுவதாகவும் முப்பெரும் விழாவுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்து இருந்தார்.
இதனை தொடர்ந்து, தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட காய்ச்சலைத் தொடர்ந்து, மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறேன். இதன் காரணமாக, ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கழகப் பொதுச்செயலாளர் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில் ஒத்திவைக்கப்பட்ட முப்பெரும் விழாவிற்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், தி.மு.க. முப்பெரும் விழா வருகிற சனிக்கிழமை அன்று மாலை நடைபெறும் என தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில்,
கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 15.09.2026 அன்று நடைபெறவிருந்த தி.மு.க. முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டு, தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவித்ததையொட்டி, தற்போது தி.மு.க. முப்பெரும் விழா வருகிற 19.09.2026 (சனிக்கிழமை) அன்று மாலை 5.00 மணியளவில், அண்ணா அறிவாலயம், "கலைஞர் அரங்கில்" நடைபெறும் என தெரிவித்து உள்ளார்.