மக்களுக்கு நல்ல திட்டங்களுக்காக அ.தி.மு.க.வினர் இணைந்து செயல்பட வேண்டும்: தமிழிசை

அ.தி.மு.க.வினர் இணைந்து பணியாற்றினால் தான் மக்களுக்கு தேவையான நல்ல திட்டங்களை கொண்டு வர முடியும் என்று தமிழிசை சவுந்திரராஜன் கூறினார்.
மக்களுக்கு நல்ல திட்டங்களுக்காக அ.தி.மு.க.வினர் இணைந்து செயல்பட வேண்டும்: தமிழிசை
Published on

செவ்வாப்பேட்டை:

செம்பரம்பாக்கத்தில் உள்ள அரசு மேல் நிலைப் பள்ளியில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் இலவச மருத்துவ முகாம் நடை பெற்றது. மாநில மருத்துவ அணி செயலாளர் லட்சுமி பாலாஜி தலைமை தாங்கினார். இதில் தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கலந்து கொண்டு சிகிச்சையும், அறிவுரையும் வழங்கினார்.அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

விவசாய குடும்பத்தை சேர்ந்த வெங்கையாநாயுடு, துணை குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பது ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

பா.ஜனதாவில் கட்சிக்காக யார் உழைத்தாலும் அங்கீகாரம் அளிக்கப்படும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

வெங்கையாநாயுடுவுக்கு பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து சொல்லி இருப்பதற்கு நன்றி. அவர் குடியரசு தலைவர் தேர்தல் துணை குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களிக்காமல் மக்கள் கொடுத்த அங்கீகாரத்தை புறக்கணித்து உள்ளார்.

தமிழகத்துக்கு நீட் தேர்வு தேவை என்பதில் தமிழக பா.ஜனதாவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. தமிழக அரசில் பின்புலமாக மத்திய அரசு செயல்படுவதாக எதிர்க் கட்சிகள் கூறுகின்றன. இது எதிர்க்கட்சிகளின் அரசியல் செய்ய முடியாத நிலையை காட்டுகிறது.

மத்திய அரசு எப்போதும் மாநில அரசுகளுடன் இணக்கமான சூழலை கையாளவே நினைக்கிறது. அப்படியானால் தான் நல்ல திடடங்கள் மக்களுக்கு சென்றடையும்.

அ.தி.மு.க.வில் ஒரு நிர்வாகி, புதிய நிர்வாகிகளை அறிவிக்கிறார். அடுத்த நிமிடமே அதனை ஏற்க நிர்வாகிகள் மறுக்கிறார்கள். இது உள்கட்சி பிரிவினையை காட்டுகிறது.

அ.தி.மு.க.வினர் இணைந்து பணியாற்றினால் தான் மக்களுக்கு தேவையான நல்ல திட்டங்களை கொண்டு வர முடியும். நல்லாட்சி கொடுக்க முடியும். இந்த பிரச்சினையில் பா.ஜனதா தலையிட விரும்பவில்லை.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தார். அதன்படி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசும் மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் கொண்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com