

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றார்.
அந்த சமயத்தில் அ.தி.மு.க.வின் தலைமைப் பொறுப்பை சசிகலா ஏற்றதுடன் முதல்-அமைச்சராக பதவி ஏற்கவும் முயற்சி மேற்கொண்டார். இதற்காக ஓ.பன்னீர்செல்வத்துக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டதால் முதல்-அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
அதைத்தொடர்ந்து ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் தியானம் செய்து பரபரப்பை உருவாக்கினார். அவருக்கு அ.தி.மு.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் சிலர் ஆதரவு தெரிவித்தனர்.
இந்த சூழ்நிலையில் சசிகலா ஜெயிலுக்கு சென்றதால் புதிய முதல்-அமைச்சராக 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ந்தேதி எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றார். மறுநாள் சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தார்.
இந்த தீர்மானத்துக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் ஆர்.நடராஜ் (மயிலாப்பூர்), மா.பா.பாண்டியராஜன் (ஆவடி), சண்முகநாதன் (ஸ்ரீவைகுண்டம்), செம்மலை (மேட்டூர்), மனோரஞ்சிதம் (ஊத்தங்கரை), மாணிக்கம் (சோழவந்தான்), சரவணன் (மதுரை தெற்கு), ஆறுகுட்டி (கவுண்டம்பாளையம்), மனோகரன் (வாசுதேவநல்லூர்), சின்னராஜ் (மேட்டுப்பாளையம்) ஆகியோர் வாக்களித்தனர்.
ஆனாலும் 122 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி அரசு வெற்றி பெற்றது.
சட்டசபையில் அரசுக்கு எதிராக வாக்களித்த 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து 2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க. வழக்கு தொடர்ந்தது. நீண்ட நாள் நிலுவையில் இருந்த இந்த வழக்கில் கடந்த மாதம் 14-ந்தேதி தீர்ப்பு கூறப்பட்டது.
அதில் 11 எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் சபாநாயகருக்கு காலக்கெடு விதிக்க முடியாது என்றும் இந்த விவகாரத்தில் அவரே முடிவெடுப்பார் என்று கூறி வழக்கை சுப்ரீம் கோர்ட்டு முடித்து வைத்தது.
இந்த தீர்ப்பின் நகல் தமிழக சட்டசபை செயலகத்துக்கு வந்துள்ளது. இதன் அடிப்படையில் 11 எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.