அ.தி.மு.க.வில் சேர தங்க தமிழ்செல்வனுக்கு ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் எதிர்ப்பு

அ.தி.மு.க.வில் தங்கதமிழ் செல்வனை சேர்ப்பதற்கு ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அ.தி.மு.க.வில் சேர தங்க தமிழ்செல்வனுக்கு ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் எதிர்ப்பு
Published on

அ.தி.மு.க.வில் தங்கதமிழ் செல்வனை சேர்ப்பதற்கு ஓ.பி.எஸ். மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத்குமார் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதால் கேரளாவில் முகாமிட்டுள்ள அவர் தனது முக்கிய ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பிளவுபட்ட அ.தி.மு.க.வில் தினகரன் அணியின் பக்கம் 18 எம்.எல்.ஏ.க்கள் சென்றனர். இதில் தினகரனுக்கு மிகவும் பக்க பலமாக விளங்கிய தங்க தமிழ்செல்வனுக்கு கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர், மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிட்ட தங்க தமிழ்செல்வன் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். அதன் பிறகு தங்கதமிழ் செல்வனுக்கும் டி.டி.வி. தினகரனுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல் மிகப்பெரிய அளவில் கடந்த சில நாட்களாக வெடிக்கத் தொடங்கியது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு சமூக ஊடகங்களில் வெளியான தங்கதமிழ் செல்வனின் ஆடியோ மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து டி.டி.வி. தினகரன் அவரை கட்சியில் இருந்து நீக்கப்போவதாக அறிவித்தார்.

இதனையடுத்து தங்க தமிழ்செல்வன் அ.தி.மு.க.வில் இணையபோவதாக தகவல் வந்தது. ஜெயலலிதா இருந்தபோதே தேனி மாவட்டத்தில் ஓ.பன்னீர்செல்வமும், தங்கதமிழ்செல்வனும் இரு துருவங்களாக செயல்பட்டு வந்தனர்.

இந்நிலையில் தினகரன் அணியில் இருந்த தங்கதமிழ்செல்வன் ஓ.பி.எஸ்.க்கு எதிராக கடுமையான பிரசாரங்களை செய்து வந்தார். எனவே அவரை மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்க்க ஓ.பி.எஸ். மற்றும் அவரது மகன் முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர். அதனால்தான் தங்கதமிழ்செல்வன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் மூலம் அ.தி.மு.க.வில் சேர தூது விட்டுள்ளார்.

இதற்கு எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சம்மதிக்க முன் வந்தாலும் ஓ.பி.எஸ். தரப்பில் கடும் எதிர்ப்பு நீடித்து வருகிறது. எனவே சில நாட்கள் கழித்து தனது நிலைப்பாட்டை தங்கதமிழ்செல்வன் தெரிவிப்பார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் அ.தி.மு.க.வை அழிப்பேன் என்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்தின் தனிப்பட்ட வி‌ஷயங்களை பிரசாரம் செய்து அவரை தோற்கடிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com