சட்டசபைக்கு டி.டி.வி.தினகரன் வருவதால் எங்களுக்கு நெருக்கடி இல்லை: அமைச்சர் ஜெயக்குமார்

மூட்டைப்பூச்சிக்கெல்லாம் அ.தி.மு.க. பயப்படாது என்றும், சட்ட சபைக்கு டி.டி.வி.தினகரன் வருவதால் எங்களுக்கு நெருக்கடி இல்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சட்டசபைக்கு டி.டி.வி.தினகரன் வருவதால் எங்களுக்கு நெருக்கடி இல்லை: அமைச்சர் ஜெயக்குமார்
Published on

சென்னை :

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னை பட்டினப்பாக்கத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- ஆடிட்டர் குருமூர்த்தி அவர் தெரிவித்த கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று கூறியிருக்கிறாரே...

பதில்:- ஆடிட்டர் குருமூர்த்தியின் சொற்கள் கண்டிக்கப்படக்கூடியதாக இருக்கிறது. இதுதொடர்பாக நாங்கள் விளக்கம் கொடுத்தோம். ஒரு பண்பாளர் என்று சொன்னால் அதை ஏற்றுக்கொண்டு, அவர் கூறிய கருத்துக்களை திரும்ப பெற்றிருக்க வேண்டும். யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. தான் கூறிய வார்த்தையை ஆஸ்திரேலியாவுடன் ஒப்பிட்டு கூறுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

தமிழ்நாட்டில் பட்டி, தொட்டியெல்லாம் இருப்பவர்கள் ஆங்கிலம் கற்றவர்களா? ஒருவனை பார்த்து போடா புறம்போக்கு என்று சொன்னால் உடனே கோபம் வருமா? வராதா? ஆனால் புறம்போக்கு என்பதற்கு விவசாயத்துக்கு பயன்படாத, நிலவரி விதிக்கப்படாத நிலம் என்று பொருள். எனவே அந்த ரீதியில் தான் புறம்போக்கு என்று கூறியதாக சொன்னால் கோபப்படுவார்களா? மாட்டார்களா? வார்த்தை ஜாலங்கள் எல்லாம் எங்களுக்கும் தெரிந்த ஒன்று. சிறுபிள்ளைத்தனமான இந்த விளையாட்டுகளை நாங்களும் பார்த்திருக்கிறோம்.

கேள்வி:- உங்கள் கோரிக்கையை ஏற்று ஆடிட்டர் குருமூர்த்தி கருத்தை திரும்ப பெறவில்லை. இந்திரா காந்தி காலத்தில் இருந்தே எதிர்ப்புகளை சந்தித்து வந்திருப்பதாக கூறியிருக்கிறாரே..

பதில்:- சோதனைகளை எல்லாம் சாதனைகளாக படைத்த இயக்கம் அ.தி.மு.க. எனவே அவரை பெரிய அளவுக்கு பொருட்படுத்துவதாக இல்லை.

கேள்வி:- நீங்கள் தெரிவிக்கும் கருத்து, உங்களுடையதா? அல்லது அ.தி.மு.க. தலைமையின் கருத்தா?

பதில்:- அ.தி.மு.க.வின் ஒவ்வொரு தொண்டருடைய கருத்து. 1½ கோடி தொண்டர்களின் கருத்து. ஆண்மை, வீரம் உள்ளவர்களுடைய கருத்து.

கேள்வி:- ஆடிட்டர் குருமூர்த்தி மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுமா?

பதில்:- இதுபோன்ற போக்கு தொடருமானால், அதைத்தான் அவர் விரும்புகிறார் என்றால், பரிசாக வழங்குவதற்கு அரசு தயாராக இருக்கிறது.

தன்மானம், சுயமரியாதை, ஒருவரை இழிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கிலே தனிப்பட்ட முறையிலே கருத்துகள் சொல்லப்படுமானால், அது வழக்கு தொடுப்பதற்கு உரிய ஒன்றாக கருதப்படும். அந்தவகையில் ஆடிட்டர் குருமூர்த்தி சொன்னால், வழக்கு தவிர்க்க முடியாத ஒன்று.

கேள்வி:- டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. சட்டசபைக்கு வர இருக்கிறார். இதனை அ.தி.மு.க. எப்படி எதிர்கொள்ளும்?, உங்களுக்கு நெருக்கடியான சூழல் ஏற்படுமா?

பதில்:- அதெல்லாம் ஒரு நெருக்கடியும் கிடையாது. மூட்டைப்பூச்சி என்பது நசுக்கப்படக்கூடிய ஒன்று. மூட்டைப்பூச்சிக்கெல்லாம் அ.தி.மு.க. பயப்படாது. எத்தனையோ மூட்டைப்பூச்சிகளை எல்லாம் பார்த்த இயக்கம்.

கேள்வி:- அ.தி.மு.க., தி.மு.க. மீதான அதிருப்தி காரணமாக ஆர்.கே.நகர் தேர்தலில் டி.டி.வி.தினகரன் வெற்றி பெற்றிருப்பதாகவும், மு.க.ஸ்டாலின் தி.மு.க. செயல் தலைவராக இருக்கும் வரை வெற்றி பெற முடியாது என்றும் மு.க.அழகிரி கருத்து தெரிவித்திருக்கிறாரே...

பதில்:- தி.மு.க. செயல் தலைவராக இருந்து மு.க.ஸ்டாலின் சந்தித்த முதல் தேர்தல் நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டப்படி, 2 பேரும் கூட்டு சேர்ந்து சதி செய்ததின் காரணமாக எங்களுக்கு தற்காலிக தோல்வி ஏற்பட்டது. ரூ.20 டோக்கனால் தொகுதியில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. கடத்தல் காரர்களான பில்லாவும், ரங்காவும் இந்த நாட்டை ஆளக்கூடாது. மு.க.ஸ்டாலினும், டி.டி.வி.தினகரனும் கைகோர்த்து செயல்படுகிறார்கள்.

அவர்களுடைய அரசியல் செயல்பாடுகளை பார்த்தாலே அது தெரிகிறது. 2 பேரும் கோர்ட்டுக்கு செல்வது, கவர்னரை சந்திப்பது என்பதை பார்த்தாலே தெரிகிறது. 2 ஜி வழக்கில் இருந்து கனிமொழியும், ஆ.ராசாவும் விடுவிக்கப்பட்டபோது டி.டி.வி.தினகரன் வாழ்த்து சொன்னார். ஜெயலலிதாவை அவமதிக்கும் வகையில் டி.டி.வி.தினகரன் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். 

அவர் சுயநலவாதி, சந்தர்ப்பவாதி. சந்தர்ப்பவாதம், துரோக அரசியல் ஒருபோதும் எடுபடாது. 100 ஆண்டுகள் தமிழகத்தை ஆளப்போவது அ.தி.மு.க.வின் கட்சியும், ஆட்சியும் தான். தி.மு.க.வால் இனிமேல் தமிழகத்தில் வெற்றி பெற முடியாது என்று மு.க.ஸ்டாலினின் உடன் பிறந்த சகோதரரான மு.க.அழகிரியே நல்ல சான்றிதழ் கொடுத்திருக்கிறார்.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com