

பிரதமர் மோடி இன்று பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு சென்றார். அவரை கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் நேரில் சென்று வரவேற்றார்.
பிரதமர் மோடி, சுவாமி விவேகானந்தர் யோகா அனுசந்தனா சமஸ்தானத்தின் குடியிருப்பு தலைமையகமான பிரசாந்தி குடிரம் வளாகத்தின் பொன்விழா கொண்டாட்டங்களில் பங்கேற்றார். அப்போது பொன்விழா நிர்வாக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். மேலும் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் சுவாமி விவேகானந்தா யோகா அனுசந்தனா சமஸ்தானத்தின் வளாகத்தையும் காணொளி மூலம் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது:-
ஒரு சிறிய யோகா மையமாகத் தொடங்கி இன்று இவ்வளவு பிரமாண்டமான இயக்கமாக பிரசாந்தி குடிரம் அமைப்பு வளர்ந்திருப்பது, அனைவருக்குமே ஒரு சிறந்த ஊக்கமளிப்பதாகும். இங்கு யோகக் கலையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு இயக்கம் தொடங்கப்பட்டது மட்டுமின்றி, நவீன அறிவியலின் தரநிலைகளுக்கு ஏற்ப கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட புதிய ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. மன அழுத்தம் மற்றும் வாழ்க்கை முறை சார்ந்த நோய்கள் தொடர்பான சவால்களை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள், ஒட்டுமொத்த உலகிற்கும் பயனுள்ளதாக அமைந்து உள்ளன.
பெங்களூருவில் யோகாவின் அற்புதமான ஆற்றலை அனுபவிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கர்நாடகா, யோகாவுடன் தொடர்புடைய பல ஆசிரியர்களும் அறிஞர்களும் பிறந்த பூமி ஆகும். புகழ்பெற்ற கன்னட நடிகர் டாக்டர் ராஜ்குமார் ஒரு யோகா பயிற்சியாளர் ஆவார்.
இந்தியாவின் முன்னெடுப்பால் இன்று உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இதன் மூலம் உலகம் முழுவதும் யோகா பிரபலம் அடைந்துள்ளது. நான் எந்த நாட்டிற்குச் சென்றாலும், மக்கள் என்னுடன் மதிய மற்றும் இரவு உணவின்போது யோகா குறித்து உரையாடுகிறார்கள்.
உலகின் பல முக்கியத் தலைவர்களின் குடும்பங்களில் யோகாவுடன் தொடர்புடைய ஒருவர் இருக்கிறார்கள். யோகா என்பது இந்தியாவைப் புரிந்து கொள்வதற்கான ஒரு நுழைவாயிலாக மாறியுள்ளது. யோகா ஒரு முக்கியமான விளையாட்டாக மாறியுள்ளது. பல்வேறு நாடுகள் யோகா போட்டிகளை நடத்துகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.