

சென்னை:
சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் கொரோனா விவகாரம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
பிரதமர் மோடி நேற்றிரவு கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பது குறித்து மக்களுக்கு அறிவுரை வழங்கி இருக்கிறார்.
நாளுக்கு நாள் கொரோனா தீவிரம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. அதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பிரதமரும் அரிய பல கருத்துகளை அறிவித்து இருக்கிறார். கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு மாநிலங்களில் சட்டசபை கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நாமும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் அதை பரிசீலிக்க வேண்டும். வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தனிமையில் இருப்பது வலியுறுத்தப்படுகிறது.
கூட்டங்கள் நடத்த வேண்டாம். கூட்டத்திற்கு செல்ல வேண்டாம் என்று அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மக்களிடம் இதை சொல்லும் நாமே சட்டமன்றத்தில் கூடுவது சரியா? என்பதை சிந்திக்க வேண்டும்.
சபாநாயகர் தனபால்: இதுபற்றி பல்வேறு கோரிக்கைகள் எனக்கு வந்துள்ளன. இது பற்றி ஆலோசிக்க மதியம் 1 மணிக்கு அலுவலக ஆய்வு குழு கூடும்.
மு.க.ஸ்டாலின்: அமைச்சர் ஒருவர் தனது வீட்டு வாயிலில் தன்னை பார்க்க யாரும் வரவேண்டாம். சென்னைக்கு வந்தும் சந்திக்க வேண்டாம் என்று எழுதி வைத்து இருக்கிறார். இது யாரையும் குறை சொல்வதற்காக சொல்லவில்லை. இது விழிப்புணர்வு நடவடிக்கைதான். எனவே சட்டமன்ற கூட்டத்தை ஒத்தி வைத்து மக்களுக்கு பீதி ஏற்படாமல் தடுக்க வேண்டியது நமது பொறுப்பு. இதுபோன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் காலகட்டங்களில் சட்டமன்ற உறுப்பினர்கள் அந்தந்த தொகுதியில் இருந்தால் நோய் தடுப்பு நடவடிக்கைகளை சட்டமன்ற உறுப்பினர்களே முன்நின்று நடத்த வாய்ப்பு ஏற்படும்.
தற்போது பெரிய கடைகள், மால்கள், சினிமா தியேட்டர்கள் போன்றவற்றை மூடி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் சிறிய வியாபாரிகள் பாதிக்கப்படாமல் இருக்க சாலையோர வியாபாரிகளுக்கு விதிகளை தளர்த்த வேண்டும். சென்னையில்பாண்டி பஜார், உஸ்மான்சாலை ரங்கநாதன் சாலைகளில் சிறு வியாபாரிகள் வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படாததால் பாதிக்கப்படுவதாக தெரிவித்து உள்ளனர். இதுபோல் தினக்கூலிகள், அமைப்பு சாரா தொழிலாளிகளும் பாதிப்பு அடைந்து உள்ளனர். எனவே கேரள மாநிலம் போல ரேஷன் பொருட்களை வீடுகளுக்கு நேரடியாக சென்று வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமர் கூறியது போல சிறு வியாபாரிகள் பாதிக்கப்படாமல் நிம்மதியாக இருக்க வேண்டும். பிற மாநிலங்கள் போல் அல்லாமல் அதிகமான கொரோனா பாதிப்பு தமிழகத்தில் இல்லாமல் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அவர்களுக்கு முகக்கவசம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை அரசு அக்கறையுடன் செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
கே.ஆர்.ராமசாமி (காங்கிரஸ்): 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு வர அதிக வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளார்கள். இந்த சபையில் 60 வயதை தாண்டியவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். அமெரிக்காவிலேயே இரண்டு எம்.பி.க்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. எனவே சட்டசபை கூட்டத்தொடரை ஒத்திவைக்க கோருகிறோம்.
அபுபக்கர் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்): கொரோனா விழிப்புணர்வு குறித்து பிரதமர் மோடி நேற்று உரையாடினார். தற்போது வழிப்பாட்டு தளங்களை எல்லாம் மூட வலியுறுத்தி இருக்கிறார்கள். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சட்டசபை கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும்.
தமிமுன் அன்சாரி: (மனிதநேய ஜனநாயக கட்சி)அனைத்து மக்கள் நலன் கருதி தடுப்பு நடவடிக்கை எடுப்பது போன்று சட்டசபையையும் ஒத்திவைக்க வேண்டும்.