உலகம்

ஐ.ஏ.இ.ஏ. மாநாட்டில் ஈரான் அணுசக்தி தலைவர் பங்கேற்க தடை.. அமெரிக்கா ஈரான் இடையே மீண்டும் பதற்றம்

ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி முகமை (ஐ.ஏ.இ.ஏ.)யின் 70-வது பொதுக்கூட்டம் ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் நேற்று தொடங்கியது.

ஐ.ஏ.இ.ஏ

ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் உள்ள சர்வதேச அணுசக்தி முகமையின் ஐ.ஏ.இ.ஏ தலைமையகத்தில் 70வது பொது மாநாடனது வரும் 18ம் தேதி வரை நடைபெறுகிறது.

அணுசக்தி பாதுகாப்பு மற்றும் அணு அறிவியல் தொழிநுட்பம் குறித்து முக்கிய விவாதங்கள் இம்மாநட்டில் மேற்கொள்ளப்படும். இந்த மாநாட்டில் கலந்துகொள்ள ஐ.ஏ.இ.ஏ சார்ந்த 181 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மறுப்பு

மாநாட்டில் பங்கேற்க ஈரான் அணுசக்தி அமைப்பின் தலைவர் முகமது எஸ்லாமிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயணத் தடை புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நிராகரிப்பு

ஈரான் மீது மீண்டும் அமல்படுத்தப்பட்ட ஐ.நா. தடைகளின் கீழ் முகமது இஸ்லாமிக்கு பயணக் கட்டுப்பாடு உள்ளது. இதனால், ஐ.ஏ.இ.ஏ. மாநாட்டில் அவர் பங்கேற்பதற்கு சிறப்பு விலக்கு வழங்க வேண்டும் என்று ஆஸ்திரியா சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

ஆனால் அந்த விலக்கு கோரிக்கைக்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, ஐ.நா. தடைகள் குழு பயண விலக்கை நிராகரித்தது. இதன் காரணமாக எஸ்லாமி மாநாட்டில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஈரான் கடும் எதிர்ப்பு

இந்த பயண விலக்கு நடவடிக்கைக்கு ஈரான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மாநாட்டில் பங்கேற்கும் உரிமையை தடுப்பது அரசியல் நோக்கம் கொண்ட நடவடிக்கை என்று ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.

மேலும், எஸ்லாமிக்கு விசா வழங்கப்படாதது தொடர்பாக ஆஸ்திரிய தூதரக அதிகாரியிடம் ஈரான் தனது எதிர்ப்பையும் பதிவு செய்துள்ளது

அமெரிக்காவின் விளக்கம்

அணுசக்தி மாநாட்டில் கலந்துகொள்ளவிருந்த ஈரானின் அணுசக்தி தலைவர் எஸ்லாமிக்கு தடை விதித்தது குறித்து அமெரிக்கா சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதில்,மாநாட்டில் பங்கேற்பது ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான விவகாரத்தில் அரசியல் பிரசாரத்திற்கு பயன்படுத்தப்படலாம் என்றும், ஐ.ஏ.இ.ஏ. மேற்கொள்ளும் பணிகளை பாதிக்கக்கூடும் என்றும் அமெரிக்கா தனது எதிர்ப்புக்கான காரணமாக தெரிவித்துள்ளது.

பின்னணி

ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக மேற்கத்திய நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நீடித்து வருகிறது. ஈரானின் அணுசக்தி நடவடிக்கைகள் குறித்து சர்வதேச அணுசக்தி முகமைக்கு தேவையான தகவல்களும் அணுகலும் முழுமையாக கிடைக்கவில்லை என்று ஐ.ஏ.இ.ஏ. தொடர்ந்து கவலை தெரிவித்து வருகிறது.

குறிப்பாக, ஈரானின் அணுசக்தி நிலையங்களில் உள்ள அணு பொருட்களின் நிலையை முழுமையாக சரிபார்க்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக ஐ.ஏ.இ.ஏ. தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த வாரம் ஐ.ஏ.இ.ஏ. ஆளுநர் குழு, ஈரானின் அணுசக்தி விவகாரத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு எடுத்துச் செல்லும் நடவடிக்கையை மேற்கொண்டது. இது ஈரான்–மேற்கத்திய நாடுகள் இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

மீண்டும் சிக்கல்

ஐ.ஏ.இ.ஏ. மாநாட்டில் ஈரான் அணுசக்தி தலைவர் நேரடியாக பங்கேற்க முடியாதது, ஏற்கனவே பதற்றமான நிலையில் உள்ள ஈரான்–அமெரிக்க உறவில் மேலும் ஒரு சிக்கலை உருவாக்கியுள்ளது.

SCROLL FOR NEXT