

உலக வரைபடத்தை சீரமைக்கும் ஐக்கிய நாடுகள் பொது சபையின் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளித்துள்ளது.
உலக வரைபடத்தை சீரமைக்கும் ஐக்கிய நாடுகள் பொது சபையின் தீர்மானம் பெரும்பான்மையுடன் நிறைவேறியுள்ளது.
ஆப்பிரிக்க யூனியனின் ஆதரவுடன் டோகோ நாடு கொண்டு வந்த இத்தீர்மானத்திற்கு 193 உறுப்பினர்களைக் கொண்ட பொதுசபையில் 164 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. இத்தீர்மானத்திற்கு இந்தியா தனது ஆதரவை அளித்துள்ளது.
அமெரிக்கா மட்டுமே இத்தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தது. செர்பியா, எஸ்டோனியா, ஜார்ஜியா, லிதுவேனியா, மால்டோவா, உக்ரைன் ஆகிய 6 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் விலகியிருந்தன.
16ஆம் நூற்றாண்டில் கடல் பயணங்களுக்கு வழிகாட்டியாக உருவாக்கப்பட்ட 'மெர்கேட்டர் வரைபடம்' துருவப் பகுதிகளுக்கு அருகில் உள்ள நாடுகளைப் தேவையின்றி மிகப்பெரியதாகவும், ஆப்பிரிக்கா மற்றும் தென்னமெரிக்கா போன்ற பிராந்தியங்களை சிறியதாகவும் காட்டுகிறது.
மெர்கேட்டர் வரைபடத்தில் கிரீன்லாந்தும் ஆப்பிரிக்காவும் ஒரே அளவில் காட்சியளிக்கின்றன. ஆனால் நிஜத்தில், ஆப்பிரிக்கா கிரீன்லாந்தை விட 14 மடங்கு பெரிய நிலப்பரப்பாகும்.
மெர்கேட்டர் வரைபட முறை, மேற்கத்திய நாடுகள் சார்ந்த ஒரே மாதிரியான சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டது என்று வரலாற்றாசிரியர்களும் புவியியலாளர்களும் பல ஆண்டுகளாகக் கூறி வருகின்றனர்.
சமூக ஆர்வலர்களும் இதையே வழிமொழிந்துள்ளதுடன், சிலர் இதற்கு Cartographic colonialism என்றும் பெயரிட்டுள்ளனர்.
வரைபடத்தில் இந்த சமநிலையற்ற தன்மையை சரிசெய்து, கண்டங்களை அவற்றின் உண்மையான அளவில் காட்டும் வகையில் 2018 இல் உருவாக்கப்பட்ட Equal Earth வரைபடப்த்தின் பயன்பாட்டை ஊக்குவிப்பதே இத்தீர்மானத்தின் முதன்மை நோக்கமாகும்.
மெர்கேட்டர் வரைபடங்களை இது முற்றிலுமாகத் தடை செய்யவில்லை என்றாலும், சரியான பரப்பளவைக் காட்டும் வரைபடங்களின் பயன்பாட்டை அதிகரிக்க வலியுறுத்துகிறது.
வரைபட உருவாக்கத்தில் துல்லியத்தைக் கொண்டுவரும் நோக்கத்தை வரவேற்பதாக வாக்கெடுப்பின்போது இந்தியா தெரிவித்தது.
உலகளவில் ஐ.நா. தீர்மானங்கள் அமல்படுத்த முடியாதவை என்றாலும், கல்வி, தொழில்நுட்பம் மற்றும் ஆளுகை ஆகியவற்றில் மெர்கேட்டர் வரைபடத்தை இனி அதிகம் பயன்படுத்தாமல் ஈக்வல் எர்த் வரைபடத்தை அதிகம் பயன்படுத்த முடியும்.