காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் கடந்த ஆண்டு அக்டோபரில் அமலுக்கு வந்த போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகும் தொடர்கிறது. இது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன சர்வதேச விசாரணை ஆணையம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தரப்பட்டுள்ள தகவல்கள் பேரதிர்ச்சியளிக்கிறது.
எனவே இஸ்ரேல் மீதான உடனடி சர்வதேச நடவடிக்கை தேவை என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் தனது சமூகவலை தள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது
அக்டோபர் 26, 2026 அன்று வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, ஒரிஸா உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதியரசர் ஸ்ரீனிவாசன் முரளிதர் தலைமையிலான ஐ.நா. சுயாதீன சர்வதேச விசாரணை ஆணையத்தால் தயாரிக்கப்பட்டதாகும்.
2023 அக்டோபர் 7 முதல் 2026 செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் பாலஸ்தீனப் பொதுமக்களுக்கு எதிராக இஸ்ரேலிய அரசு மற்றும் அதன் பாதுகாப்புப் படைகள் இழைத்துள்ள குற்றங்களை இந்த அறிக்கை விரிவாக ஆவணப்படுத்தியுள்ளது.
காஸாவில் பாலஸ்தீன மக்களை முழுமையாகவோ அல்லது ஒரு பகுதியாகவோ அழிக்கும் நோக்கத்துடன் இஸ்ரேலிய அதிகாரிகளும் ராணுவப் படைகளும் போர் நிறுத்தத்திற்குப் பிறகும் இனப்படுகொலைச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக ஆணையம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
போர் நிறுத்தத்தின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்ட ‘மஞ்சள் கோடு’ (Yellow Line) படிப்படியாக காஸாவின் நிலப்பரப்புக்குள் விரிவடைந்து, நடைமுறையில் புதிய எல்லையாக மாற்றப்பட்டு வருவதாகவும் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது. அந்தக் கோட்டை நெருங்கும் அல்லது கடக்கும் பாலஸ்தீன மக்கள் கொல்லப்படுவதும் காயமடைவதும் தொடர்கிறது.
காஸாவில் மட்டுமின்றி, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலும் நிலைமை மிக மோசமடைந்துள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது. அங்கு இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கைகளும் சட்டவிரோதக் குடியேறிகளின் தொடர் வன்முறைகளும் இணைந்து பாலஸ்தீனப் பொதுமக்களுக்கு எதிரான பரவலான, திட்டமிட்ட தாக்குதலாக மாறியுள்ளன.
2008 முதல் 2023 அக்டோபர் 6 வரையிலான காலகட்டத்தில் மேற்குக் கரையில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் 6 பாலஸ்தீனர்கள் மட்டுமே கொல்லப்பட்டிருந்த நிலையில், 2023 அக்டோபர் 7 முதல் 2026 செப்டம்பர் 30 வரையிலான காலகட்டத்தில் 254 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
மேற்குக் கரையில் அழித்தொழித்தல், துன்புறுத்தல், சித்திரவதை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளதாகவும், பாலஸ்தீனக் குழந்தைகள் திட்டமிட்டுக் கொல்லப்பட்டு உடல் மற்றும் மனரீதியான பாதிப்புகளுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் ஆணையம் முடிவு செய்துள்ளது.
2025 ஜனவரி முதல் மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கைகளால் 1967ஆம் ஆண்டுக்குப் பிறகு இல்லாத அளவுக்கு மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். 2026 ஆகஸ்ட் நிலவரப்படி 34,176 பேர் தங்கள் வாழ்விடங்களை இழந்து இடம்பெயர்ந்துள்ளனர்.
இந்தப் பின்னணியில், ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை சர்வதேச சமூகத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு அடிப்படையாக அமைய வேண்டும்.
எனவே, இந்தியா உள்ளிட்ட ஐ.நா. உறுப்பு நாடுகள் இனப்படுகொலையைத் தடுப்பதற்கான சர்வதேச சட்டக் கடமைகளை உடனடியாக நிறைவேற்ற முன் வர வேண்டும்.
இஸ்ரேலின் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்குப் பொறுப்பான அரசியல் மற்றும் ராணுவத் தலைவர்களை சர்வதேச சட்ட நடைமுறைகளின்படி நீதியின் முன் நிறுத்த வேண்டும்.
காஸாவுக்குள் உணவு, மருந்து, மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட மனிதாபிமான உதவிகள் தடையின்றி சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.
மேற்குக் கரையில் சட்டவிரோதக் குடியேற்றங்கள், நில அபகரிப்பு, ராணுவத் தாக்குதல்கள் மற்றும் பாலஸ்தீன மக்களின் கட்டாய இடப்பெயர்வை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.
சர்வதேச நீதிமன்றத்தின் 2024 ஜூலை ஆலோசனைக் கருத்தின்படி, ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளில் இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
போர் நிறுத்தம் என்பது வெறும் காகித ஒப்பந்தமாக இருக்கக் கூடாது. பாலஸ்தீன மக்களின் உயிர், உடைமை, வாழ்வுரிமை மற்றும் சுயநிர்ணய உரிமை ஆகியவை உறுதி செய்யப்பட வேண்டும். காஸா மீதான தாக்குதல்களை நிறுத்துவதுடன், மேற்குக் கரையிலும் தொடரும் ஆக்கிரமிப்பு வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.
என்று தெரிவித்துள்ளார்.