

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனியப் பகுதிகள் மற்றும் இஸ்ரேல் குறித்து விசாரணை நடத்த ஐநாவினால் நியமிக்கப்பட்ட சுதந்திரமான சர்வதேச விசாரணை ஆணையம் (Independent International Commission of Inquiry), இஸ்ரேல் காசாவில் தொடர்ந்து இனப்படுகொலை (Genocide) நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தனது புதிய அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்கா முன்னின்று நடத்திய போர்நிறுத்த ஒப்பந்தங்களுக்குப் பிறகும், காசாவில் இஸ்ரேலின் வான்வழி மற்றும் ஆட்டிலரி தாக்குதல்கள் தொடர்வதாக ஐநா ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
காசாவில் இனப்படுகொலையைத் தொடர்ந்து செய்துவரும் இஸ்ரேல், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனியப் பகுதியில் பாலஸ்தீனியப் பொதுமக்களை வேண்டுமென்றே குறிவைத்து, போர்க்குற்றங்களையும், இன அழிப்பு, துன்புறுத்தல், சித்திரவதை, பாலியல் வன்கொடுமை மற்றும் பிற பாலியல் வன்முறைகள் போன்ற மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களையும் செய்துள்ளதாக அந்த அறிக்கையானது தெரிவித்துள்ளது.
கிழக்கு ஜெருசலேம் உள்ளிட்ட ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனியப் பகுதி மற்றும் இஸ்ரேல் மீதான ஐ.நா.வின் சுதந்திரமான சர்வதேச விசாரணை ஆணையம் திங்களன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அரசால் நிகழ்த்தப்படும் கொலைகள், உடல் மற்றும் மனரீதியான பாதிப்புகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் ஐ.நா பொதுச் சபைக்குச் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், 2023 அக்டோபர் 7 முதல் மேற்குக் கரையின் நிலைமை கடுமையாக மோசமடைந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது
மேற்குக் கரையில் வான்வழித் தாக்குதல்களால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2008-க்கும் 2023 அக்டோபர் 6-க்கும் இடைப்பட்ட காலத்தில் மேற்குக் கரையில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் ஆறு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர், அதேசமயம் 2023 அக்டோபர் 7-க்கும் 2026 செப்டம்பர் 30-க்கும் இடைப்பட்ட காலத்தில் 254 பாலஸ்தீனியர்கள் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக மேற்கு கரையில் பாலஸ்தீனிய பொதுமக்களை வேண்டுமென்றே மக்களை கொல்வதும், காயப்படுத்துவம், ஆக்கிரப்பு பகுதிகளை அழிப்பதும் மேற்குக்கரையில் பாலஸ்தீனியர்களை ஒட்டுமொத்தமாக வெளியேற்றவும் அழிக்கவும் இஸ்ரேல் திட்டமிட்டுச் செயல்படுவதாக ஆணையத்தின் தலைவர் ஸ்ரீனிவாசன் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய ராணுவத்தினரும் சிறைக் காவலர்களும் பாலஸ்தீனியப் பொதுமக்கள் மீது சித்திரவதை, பாலியல் வன்கொடுமை மற்றும் ஒடுக்குமுறைகளை ஏவுவதாக அறிக்கை கூறுகிறது
காசா மற்றும் மேற்குக்கரையில் நடக்கும் கொடூரங்கள் வெளியில் தெரியாமல் இருக்க, இஸ்ரேல் திட்டமிட்டு பாலஸ்தீனிய ஊடகவியலாளர்களை "பயங்கரவாதிகள்" என முத்திரை குத்தி படுகொலை செய்வதாகவும், அவர்களின் குடும்பங்களைக் குறிவைப்பதாகவும் ஐநாவின் சிறப்பு அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பானீஸ் தனது 'Truth under the rubble' அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்
ஜனவரி 2025 முதல் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகள், 1967-க்குப் பிறகு மேற்குக் கரையில் பாலஸ்தீனியர்களின் மிகப்பெரிய இடம்பெயர்வுக்கு வழிவகுத்துள்ளன. ஆகஸ்ட் 2026 நிலவரப்படி, 34,176 பாலஸ்தீனியர்கள் இன்னும் இடம்பெயர்ந்த நிலையிலேயே உள்ளனர்.
மக்கள் நெருக்கம் மிகுந்த குடியிருப்புப் பகுதிகளில் வழிகாட்டப்படாத கனரக ஆயுதங்களையும், ட்ரோன்களையும் இஸ்ரேல் பயன்படுத்தி வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது
குறிப்பாக பாலஸ்தீனிய சொத்துக்களைப் பறிமுதல் செய்வதையும் அபகரிப்பதையும், இராணுவ நோக்கங்களுக்காக பாலஸ்தீனிய நிலங்களை ஒதுக்கி வைப்பதையும் இஸ்ரேல் நிறுத்தி விட வேண்டும் என்று .அவற்றை மாற்றியமைக்க வேண்டும் என்றும், பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து நிலங்களையும் அதன் பாலஸ்தீனிய உரிமையாளர்களுக்குத் திருப்பித் தர வேண்டும் என்றும் ஐநாவின் அறிக்கை கோரியுள்ளது .