"SIR இரத்தமற்ற அரசியல் இனப்படுகொலை.." CJP போராட்டத்தில் பங்கேற்கும் நிர்மலா சீதாராமனின் கணவர்

இந்தியாவில் இப்போது நடப்பது, குடியுரிமை மீது நிகழ்த்தப்படுவது இரத்தம் சிந்தாத அரசியல் இனப்படுகொலையாகும்.
நிர்மலா சீதாராமன், பரகலா பிரபாகர்
Published on: 
Summary

நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் ஞானேஷ் குமார், எஸ்ஐஆருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும், பிரபல பொருளாதார நிபுணருமான பரகலா பிரபாகர், வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் தீவிர திருத்தத்திற்கு (SIR) எதிராகவும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரியும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) நடத்தும் போராட்டத்தில் கலந்துகொள்ள உள்ளார்.

ஒவ்வொரு தெருவிலும் ஒரு ஜந்தர் மந்தர்

சிஜேபி வரும் அக்டோபர் 23 அன்று டெல்லியில் மாபெரும் மக்கள் பேரணி நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இதில் திரளானோர் பங்கேற்று தங்கள் வாக்குரிமையை பாதுகாக்குமாறு அழைப்பு விடுத்துள்ளது.

இந்தப் போராட்டத்தின் முக்கிய முழக்கம், "ஒவ்வொரு கையிலும் மூவர்ணக் கொடி, ஒவ்வொரு தெருவிலும் ஒரு ஜந்தர் மந்தர்" என்பதாகும்.

மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், தலித்-பழங்குடியினர் அமைப்புகள், சிறுபான்மையினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கை குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு பிரபலமான அமைப்புகளுடன் இணைந்து இந்த பேரணி நடத்தப்படவுள்ளது.

இந்த பேரணியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (சிஜேபி) நிறுவனர் அபிஜீத் தீப்கே, நடிகரும் சமூக ஆர்வலருமான பிரகாஷ் ராஜ், மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மற்றும் ஏஐஎஸ்ஏ தலைவர் நேஹா போரா ஆகியோருடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவன் பரகலா பிரபாகர் மேடையைப் பகிர்ந்துகொள்ள உள்ளார்.

முக்கிய கோரிக்கைகள்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அவரது பதவியிலிருந்து நீக்கப்பட்டு, அவர் மீது வழக்குத் தொடரப்பட வேண்டும், எஸஐஆர் நடைமுறைகளை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும், வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட உண்மையான வாக்காளர்களின் பெயர்களை உடனடியாக மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை போராட்ட குழு முன்வைக்கிறது.

அரசியல் இனப்படுகொலை

இதுதொடர்பாக பரகலா பிரபாகர், "இந்தியாவில் இப்போது நடப்பது, குடியுரிமை மீது நிகழ்த்தப்படுவது ரத்தம் சிந்தாத அரசியல் இனப்படுகொலையாகும்.

முன்பு ஜெர்மனியிலும் ருவாண்டாவிலும் இனம், மதம், மொழி மற்றும் நிறத்தின் அடிப்படையில் மக்கள் துன்புறுத்தப்பட்டனர் என்றால், இந்தியாவில் மக்களின் வாக்களிக்கும் உரிமையைப் பறிக்கும் நோக்கில், வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர்கள் வேண்டுமென்றே நீக்கப்படுகின்றன.

இது, வாக்குரிமை உள்ளவர்கள் மற்றும் இல்லாதவர்கள் என இரண்டு தரப்பு மக்களை உருவாக்குகிறது. அதன் மூலம், நாட்டின் ஒரு பெரும் பகுதியினர் தங்கள் குடியுரிமை உரிமைகளிலிருந்து விலக்கப்படுகின்றனர்.

பெயர்கள் நீக்கப்பட்டவர்கள் குடிமக்களாக நீடிப்பார்கள், ஆனால் அவர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்படுவதால், குடியுரிமையின் சாராம்சமே இழக்கப்படுகிறது.

இந்தியக் கலாச்சாரம் மற்றும் சமூகத்தில் ஏற்படும் இத்தகைய மாற்றங்கள், நாட்டின் பொருளாதாரத்தையும் எதிர்மறையாகப் பாதிக்கும்" என கூறியுள்ளார்.

விவாதப் பொருள்

மத்திய நிதி அமைச்சரின் கணவரே மத்திய அரசின் தேர்தல் கொள்கைகளுக்கு எதிராக நேரடியாக வீதியில் இறங்கியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது.

பொருளாதார நிபுணருமான பரகலா பிரபாகர் தொடர்ந்து மத்திய அரசின் கொள்கைகளை விமர்சித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com