முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்.. காசாவில் 7 வயது சிறுமி உட்பட 5 பேர் கொலை

போர் நிறுத்தம் தொடங்கியதிலிருந்து 1,500க்கும் மேற்பட்டோர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்
காசா
Published on: 
Summary

காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 7 வயது சிறுமி உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர்

காசாவின் பல்வேறு பகுதிகளில் நேற்று (அக்டோபர் 26, திங்கட்கிழமை) இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில், ஏழு வயது சிறுமி உட்பட ஐந்து பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.

கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய தாக்குதல்களால் சுமார் 60 பேர் காயமடைந்ததாக காசாவின் குடிமைப் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

முகாம் மீது தாக்குதல்

அல் மவாசியில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் தங்கியிருந்த முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் .

அல் மவாசி தாக்குதலில் இருந்து ஒரு குழந்தையின் உடல் உட்பட மூன்று உடல்களை மீட்புக் குழுவினர் மீட்டுள்ளதாக குடிமைப் பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் மஹ்மூத் பஸ்ஸல் தெரிவித்தார்.

திங்களன்று அப்பகுதியில் எந்த ராணுவ நடவடிக்கையும் நடந்ததாக தங்களுக்குத் தெரியவில்லை என இஸ்ரேலிய ராணுவம் மறுத்து.

உயிரிழந்தவர்கள்

ஆனால கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனை மூன்று மரணங்களை உறுதிப்படுத்தியதோடு "இஸ்ரேலிய ஏவுகணையிலிருந்து சிதறிய குண்டுகள் நேரடியாகத் தாக்கியதால் அவர்களின் உடல்கள் சிதைக்கப்பட்டன" என்று தெரிவித்துள்ளது.

மேலும், ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தை உட்பட காயமடைந்த பலருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் அது தெரிவித்தது.

உயிரிழந்தவர்கள் ஹொஸ்ஸாம் அல்ஸம்லி, தாமர் அபு ஸ்னைமா மற்றும் ஜுரி அல் சௌபி என மருத்துவமனை அடையாளம் கண்டுள்ளது.

அல் சௌபிக்கு ஏழு வயது என்று காசாவின் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மறுபுறம் கான் யூனிஸ் அருகே இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் தங்கியிருந்த கூடாரம் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார்.

காசா நகரின் ரிமால் பகுதியில் நடந்த மற்றொரு வான்வழித் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் மூவர் காயமடைந்ததாகவும் அல் ஷிபா மருத்துவமனை தெரிவித்துள்ளது.

மஞ்சள் கொடு

அக்டோபர் 2025ல் நடைமுறைக்கு வந்த, அமெரிக்காவின் மத்தியஸ்தத்திலான 'போர் நிறுத்தம்' அறிவிக்கப்பட்ட பின்னரும் காசாவில் வன்முறை தொடர்கிறது.

போர் நிறுத்தத்தின் கீழ், இஸ்ரேலியக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலிருந்து பிரிக்கும் மஞ்சள் கோடு அமைக்கப்பட்டது.

இதன்படி காசா பகுதியின் 60%க்கும் அதிகமானவை இஸ்ரேலியக் கட்டுப்பாட்டில் உள்ளது.

போர் நிறுத்தம் தொடங்கியதிலிருந்து 1,500க்கும் மேற்பட்டோர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர் என காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

போர்

2023 அக்டோபர் 7 அன்று, ஹமாஸ் தெற்கு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் 1,221 பேர் கொல்லப்பட்டனர். 200 பேர் கடத்திச் செல்லப்பட்டனர்.

இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் கடந்த 3 ஆண்டுகளாக நடத்திய ராணுவத் தாக்குதல் காசாவின் பெரும்பகுதியை அழித்துள்ளது.

காசாவின் சுகாதார அமைச்சகத்தின்படி, போர் தொடங்கியதிலிருந்து காசாவில் 74,500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com