காசாவில் தினமும் 30 முதல் 40 பேரைக் கொல்ல வேண்டும் - இஸ்ரேல் அமைச்சர் பென் க்விர்

அவர்கள் வாழவேக் கூடாது. அவர்கள் மனிதர்களே அல்ல.
பென் க்விர்
பென் க்விர்
Published on

காசாவில் தினமும் 30 முதல் 40 பேரைக் கொல்ல வேண்டும் என இஸ்ரேல் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென் க்விர் இலக்கு நிர்ணயித்துள்ளார்.

தினமும் இரவில் 30 முதல் 40 பாலஸ்தீனர்களை கொல்ல வேண்டும் என்றும், அச்சுறுத்தலாக இல்லாத நபர்களையும் இலக்கு வைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2023 அக்டோபர் 7 அன்று நோவா இசை நிகழ்வில் ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட ரோம் பிராஸ்லாவ்ஸ்கி என்பவருடனான பாட்காஸ்ட் உரையாடலில் பென் க்விர் இக்கருத்தை தெரிவித்துள்ளார்.

தினமும் இரவு கொலை செய்ய வேண்டும்

அவர் பேசியதாவது, "எனக்கும் பிரதமருக்கும் கருத்து வேறுபாடு இருப்பது இரகசியமல்ல.

காசாவில் தினமும் இரவில் 30 முதல் 40 பேரைக் கொல்வதற்கு இலக்கு நிர்ணயித்து நாம் தாக்குதல்களை நடத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

அந்த நேரத்தில் நமக்கு உடனடி ஆபத்தாக இருப்பவர்களை மட்டும் இலக்கு வைக்கக் கூடாது. அங்கு வாழத் தகுதியற்ற பலர் இருக்கிறார்கள். அவர்கள் வாழவேக் கூடாது. அவர்கள் மனிதர்களே அல்ல.

அதைச் செய்ய நான் உலகத்தையே தலைகீழாக மாற்றுவேன். அது நடக்கும் வரை என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்று நான் வாக்குறுதி அளிக்கிறேன்.

காசா நமக்கே சொந்தம்

முழு காசாவையும் நான் நமக்கே சொந்தமானதாகப் பார்க்கிறேன். காசா முழுவதிலும் யூதக் குடியேற்றங்களை அமைக்க வேண்டும்.

முடிந்தவரை பாலஸ்தீனர்களை இங்கிருந்து வெளியேற்றி அவர்களின் நாடுகளுக்கு அனுப்ப வேண்டும்.

தீவிரவாதிகளுக்கு வெளியேற்றமெல்லாம் இல்லை, அவர்களை ஒவ்வொன்றாகக் கொன்றழிக்க வேண்டும்." என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும் பயணக்கைதியாக பிடித்துச்செல்லப்பட்டதற்கு பழிதீர்க்க, ரோம் பிராஸ்லாவ்ஸ்கியே நேரடியாக இஸ்ரேல் வசம் உள்ள பாலஸ்தீன கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்ற அனுமதி அளிப்பதாகவும் பென் க்விர் வாக்குறுதி அளித்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com