பிரதமர் இல்லம் அருகிலுள்ள பள்ளிவாசலின் வெளியேற்ற உத்தரவு அநீதியின் உச்சம் - ஜவாஹிருல்லா கண்டனம்

அரசுக்குச் சொந்தமான நிலத்தில் அத்துமீறிக் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி, ஆறு நாட்களுக்குள் காலி செய்ய வேண்டும் என நிலம் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் (L&DO) வெளியேற்ற தாக்கீடு வழங்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
Jawahirullah
Published on: 

டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு அருகிலுள்ள ரேஸ் கோர்ஸ் பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பள்ளிவாசலுக்கு, அரசுக்குச் சொந்தமான நிலத்தில் அத்துமீறிக் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி, ஆறு நாட்களுக்குள் காலி செய்ய வேண்டும் என நிலம் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் (L&DO) வெளியேற்ற வேண்டும் என்று காலக்கெடு விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் இது உத்தரவு அதிர்ச்சியளிக்கிறது என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினருமான எம். எச். ஜவாஹிருல்லா அநீதியின் உச்சம் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது

வெளியேற்ற நடவடிக்கை கண்டனத்திற்குரியது

வழிபாட்டுத் தலத்தின் உரிமை, வரலாற்றுப் பாரம்பரியம், சிறுபான்மை மக்களின் மத உரிமைகள் ஆகியவற்றைப் புறந்தள்ளிவிட்டு மேற்கொள்ளப்படும் இத்தகைய நடவடிக்கைகள் கடுமையான கண்டனத்திற்குரியவை.

டெல்லி மாநகராட்சியின் பாரம்பரியக் கட்டடங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தப் பள்ளிவாசல், வெறும் வழிபாட்டுத் தலம் மட்டுமல்ல; தலைநகரின் வரலாற்று மற்றும் பண்பாட்டுப் பாரம்பரியத்தின் ஓர் அங்கமாகும். 1977ஆம் ஆண்டு டெல்லி அரசிதழில் இடம்பெற்ற பாரம்பரியச் சின்னங்கள் பட்டியலிலும், மத்திய சிறுபான்மையினர் நலத்துறை பராமரிக்கும் பட்டியலிலும் இந்த இடம் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு அதிகாரப்பூர்வப் பாரம்பரியப் பட்டியல்களில் இடம்பெற்றுள்ள பள்ளிவாசலை ஆறு நாட்களுக்குள் காலி செய்ய வேண்டும் என அவசர தாக்கீடு வழங்குவது எவ்விதத்திலும் நியாயமான அணுகுமுறையாக இருக்க முடியாது.

இந்தப் பள்ளிவாசல் வக்ஃப் சொத்து என அதன் நிர்வாகத்தினர் கூறுகின்றனர். இப்பள்ளிவாசலுடன் முஸ்லிம் அடக்கத்தலமும் உள்ளது.பள்ளிவாசலுக்கான மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக அதன் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். வழிபாட்டுத் தலத்தில் இத்தகைய அடிப்படை வசதிகளைத் துண்டிப்பது, அங்கு தொழுகை நடத்த வரும் மக்களுக்குப் பெரும் இடையூறை ஏற்படுத்துகிறது

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 25 மற்றும் 26ஆம் பிரிவுகள் உறுதிசெய்யும் மதச் சுதந்திரத்தையும் மத நிறுவனங்களின் உரிமைகளையும் மதித்து அரசு செயல்பட வேண்டும். மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்புகளைத் துண்டித்து வழிபாட்டாளர்களுக்குத் துன்பத்தை ஏற்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது

மத வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான விவகாரங்களில் சட்டம் அனைவருக்கும் சமமாகச் செயல்படுத்தப்பட வேண்டும். மத அடையாளத்தைப் பொருட்படுத்தாமல், வரலாற்றுப் பாரம்பரியத்தையும் அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளையும் பாதுகாப்பதே அரசின் பொறுப்பாகும்

சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாப்பதும், வரலாற்றுச் சின்னங்களைப் பேணுவதும், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதும் ஜனநாயக அரசின் அடிப்படைக் கடமைகளாகும். இந்தப் பள்ளிவாசலை ஆக்கிரமிக்கும் சதித்திட்டத்தை ஒன்றிய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்

என்று தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com