பிரிக்ஸ்  
இந்தியா

பாலஸ்தீனத்தை தனி நாடாக உருவாக்க பிரிக்ஸ் நாடுகள் ஆதரவு - இஸ்ரேலுக்கு அறிவுரை வழங்கிய "டெல்லி பிரகடனம்"

ஈரான் மீதான அமெரிக்காவின் போர் உலக நலனுக்கு உகந்ததல்ல என்றும் பிரிக்ஸ் நாடுகள் தெரிவித்துள்ளன.

பிரிக்ஸ் மாநாட்டில் எட்டப்பட்ட "டெல்லி பிரகடன"த்தில் பாலஸ்தீனம் மற்றும் லெபனான் பிரச்சனைகள் குறித்த நிலைப்பாட்டை பிரிக்ஸ் நாடுகள் அறிவித்துள்ளன.

டெல்லியில் நடந்து வரும் 18வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் முதல் நாளான நேற்று"டெல்லி பிரகடனம்" என்ற பெயரில் உறுப்பு நாடுகள் பல நிலைப்பாடுகளுக்கு கூட்டாக ஆதரவளித்துள்ளது.

சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் புதின், ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான், பிரதமர் மோடி உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் கையொப்பம் இட்டு இந்த கூட்டுப் பிரகடனத்தை வெளியிட்டனர்.

பாலஸ்தீன நாடு

அந்த பிரகடனத்தில் குறிப்பாக, இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினைக்கு 'இரு நாடுகள் தீர்வே' ஒரே வழி என்றும் இஸ்ரேலுடன் இணைந்து சுதந்திரமான பாலஸ்தீன நாடு உருவாக்கப்பட வேண்டும் என்றும் பிரிக்ஸ் நாடுகள் கூட்டு நிலைப்பாடு எடுத்துள்ளன.

1967ஆம் ஆண்டிற்கு முந்தைய எல்லைகளை அடிப்படையாகக் கொண்டு, காசா முனை, மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசலேம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக பாலஸ்தீன நாடு அமைய வேண்டும். கிழக்கு ஜெருசலேமே அதன் தலைநகராக இருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாலஸ்தீனியர்கள் தங்களது எதிர்காலத்தை சுயநிர்ணயம் செய்யும் உரிமையையும், தங்களது தாய்நாட்டிற்கு திரும்பும் உரிமையையும் கொண்டுள்ளனர்; ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீனத்திற்கு முழுமையான உறுப்பினர் தகுதி வழங்கப்பட வேண்டும் எனவும் பிரிக்ஸ் வலியுறுத்தியுள்ளது.

இடப்பெயர்வுக்கு தடை

பாலஸ்தீனியர்களை தங்களது சொந்த நிலத்திலிருந்து தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ பலவந்தமாக வெளியேற்றும் இஸ்ரேலின் திட்டத்தை பிரிக்ஸ் கூட்டமைப்பு கடுமையாக எதிர்த்துள்ளது.

போரின் உத்தியாக பொதுமக்களுக்கு உணவை மறுப்பதையோ, மருத்துவமனைகள் மற்றும் பொதுமக்கள் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவதையோ பிரிக்ஸ் கண்டித்துள்ளது.

ஜெருசலேமில் உள்ள புனிதச் தலங்களை மக்கள் வழிபடுவதற்கான உரிமை பாதுகாப்பப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

லெபனான் பிரச்சனை

லெபனானில் அமைதியை நிலைநாட்ட ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானம் 1701 முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என "டெல்லி பிரகடனம்" சொல்கிறது.

லெபனானின் இறையாண்மை மற்றும் எல்லைகள் மதிக்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ள பிரிக்ஸ், தெற்கு லெபனானில் தங்கியுள்ள இஸ்ரேலியப் படைகள் உடனடியாகத் தங்களது வீரர்களை திரும்ப அழைக்க வேண்டும் என கோரியுள்ளது.

மேலும் ஈரான் மீதான அமெரிக்காவின் போர் உலக நலனுக்கு உகந்ததல்ல என்றும் பிரிக்ஸ் நாடுகள் தெரிவித்துள்ளன.

SCROLL FOR NEXT