

இஸ்ரேலின் தீவிர வலதுசாரி தேசிய பாதுகாப்பு அமைச்சர் இட்டாமர் பென் கிவிர், காசா பகுதியில் இருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றி வெளிநாடுகளுக்கு அனுப்பும் திட்டத்தை முன்வைத்தார்.
கடும் போட்டி நிலவிய இஸ்ரேலிய தேர்தல்களுக்கு முன்னதாக பேசிய அவர், இந்த திட்டத்தின்படி முதல் ஆண்டில் காசாவில் இருந்து 250,000 பாலஸ்தீனியர்களும், அதனை தொடர்ந்து அடுத்த ஆறு ஆண்டுகளில் மீதமுள்ள சுமார் இரண்டு மில்லியன் மக்களும் வெளியேறுவார்கள் என்று கூறினார்.
"இது யதார்த்தமானதுதான்," என்று கூறிய பென் கிவிர், அந்த நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடாமல், சில நாடுகள் காசா மக்களை ஏற்றுக்கொள்ள "தயாராக" இருப்பதாக கூறினார்.
"காசாவின் மக்கள் வெளியேறுவதை நாம் ஊக்குவிக்க வேண்டும்," என்று கூறிய அவர், இந்த திட்டம் பாலஸ்தீனியர்களை அவர்களின் நிலத்தை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்துவதை குறிக்கவில்லை என்று தாம் நம்புவதாக மேலும் கூறினார்.
ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தில் பொதுமக்களை வலுக்கட்டாயமாக இடம்பெயர செய்வது, ஜெனீவா உடன்படிக்கைகளின்படி ஒரு போர்க்குற்றமாகக் கருதப்படுகிறது.
பாலஸ்தீனியர்களை பொறுத்தவரை, அவர்களை அவர்களின் நிலத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றும் எந்தவொரு முயற்சியும், 1948-இல் இஸ்ரேல் உருவாக்கப்பட்டபோது அவர்கள் பெருமளவில் இடம்பெயர்ந்த 'நக்ஃபா' அல்லது பேரழிவை நினைவூட்டும்.
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வலதுசாரி கூட்டணியில் முக்கிய அமைச்சராக உள்ள பென் கிவிர் தெரிவிக்கும் ஆத்திரமூட்டும் கருத்துக்கள், தொடர்ந்து சர்வதேச கண்டனத்தை ஈர்த்து வருகின்றன.
அடுத்த அரசாங்கம் அமையும்போது, தனது வலதுசாரி ஜனரஞ்சக யூத சக்தி கட்சி "குடியேற்றப் பொறுப்புள்ள ஒரு அமைச்சகத்தை" கோரும் என்று பென் கிவிர் கூறினார். மேலும், தனது திட்டம் "ஒன்றரை வருட உழைப்பின் விளைவு மற்றும்... உறுதியானது" என்றும் அவர் குறிப்பிட்டார்.