

லெபனானில் இன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 20 பேர் காயமடைந்தனர்.
தெற்கு லெபனானின் நபதியே மாவட்டத்தைக் குறிவைத்து இன்று காலை முதல் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவின் மத்யஸ்தத்தில் ஏற்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை மீறி இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
லெபனான் சுகாதார அமைச்சகத்தின்படி, நபதியே அல் பெவ்கா பகுதியில் இருவரும், அரப் சலீம் நகரில் இரு பெண்களும் உயிரிழந்தனர்.
அரப் சலீம் பகுதியில் இரு சிறுமிகள் உட்பட 6 பேரும், நபதியேவின் அல் ரஹ்பத் பகுதியில் 8 பேரும், கபார் ரம்மான் பகுதியில் 4 பெண்களும் காயமடைந்துள்ளனர்.
இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் தொன்மை வாய்ந்த கட்டிடங்கள், முன்னாள் மேயரின் இல்லம், பூங்கா ஆகியவை கடுமையாக சேதமடைந்தன.
பயன்பாட்டில் இல்லாமல் இருந்த மருத்துவமனை கட்டிடம் இந்தத் தாக்குதலில் முற்றிலும் தரைமட்டமாக்கப்பட்டது.
சர்வதேச மனிதநேயச் சட்டங்களை மீறி மருத்துவமனை மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலை லெபனான் சுகாதார அமைச்சகம் கடுமையாகக் கண்டித்துள்ளது.
நபதியேவில் அமைந்துள்ள லெபனான் நிதி அமைச்சகத்தின் பிராந்திய அலுவலகக் கட்டிடம் பீரங்கித் தாக்குதலால் பலத்த சேதமடைந்தது.
தெற்கு லெபனானில் உள்ள தனது பாதுகாப்பு மண்டலத்தை இலக்கு வைத்து ஹாய்ஸ்புல்லா அமைப்பு இரு வெடிபொருள் நிரப்பப்பட்ட டிரோன்களை ஏவியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.
இதனை போர்நிறுத்த ஒப்பந்தத்தின் மீறல் எனக் குறிப்பிட்ட இஸ்ரேல் ராணுவம் பதிலடியாக தெற்கு லெபனானில் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல்கள் குறித்துப் பேசிய லெபனான் அதிபர் ஜோசப் அவுன், அரசு நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்கள் அபாயகரமான போக்கைக் காட்டுவதாகச் சாடினார்.
அமெரிக்கா மற்றும் சர்வதேச சமூகம் உடனடியாகத் தலையிட்டு இஸ்ரேலின் தாக்குதல்களை தடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.