search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    • 3 நாள் வசந்தோற்சவம் நிறைவடைந்தது.
    • உற்சவர்கள் புறப்பட்டு ஏழுமலையான் கோவிலுக்கு திரும்பினர்.

    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 நாட்கள் வசந்தோற்சவம் நடந்து வந்தது. முதல் நாள் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி கோவிலில் இருந்து திருச்சி வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகள் வழியாக வசந்த மண்டபத்துக்கு சென்று வசந்தோற்சவம் கண்டனர்.

    2-வது நாள் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் தங்கத்தேரில் எழுந்தருளி நான்கு மாடவீதிகள் வழியாக வசந்த மண்டபத்துக்கு சென்று வசந்தோற்சவம் கண்டனர்.

    கடைசி நாளான நேற்று முன்தினம் உற்சவர்களான ஸ்ரீதேவி பூதேவி, மலையப்பசாமி மற்றும் சீதா, ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர் மற்றும் ருக்மணி, சத்தியபாமா ஸ்ரீகிருஷ்ணர் கோவிலில் இருந்து புறப்பட்டு தனித்தனி திருச்சி வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகள் வழியாக வசந்த மண்டபத்தை அடைந்தனர்.

    அங்கு மதியம் 2 மணியில் இருந்து மாலை 4 மணி வரை உற்சவர்களான சாமிகள், தாயார்களை ஒரே மேடையில் வைத்து மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர், பஞ்சாமிர்தம் ஆகிய நறுமண திரவியங்களால் அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

    வசந்தோற்சவம் முடிந்ததும் வசந்த மண்டபத்தில் இருந்து உற்சவர்கள் புறப்பட்டு ஏழுமலையான் கோவிலுக்கு திரும்பினர். இதோடு 3 நாள் வசந்தோற்சவம் நிறைவடைந்தது.

    மேற்கண்ட நிகழ்ச்சியில் திருமலை பெரிய ஜீயர் சுவாமி, சின்னஜீயர் சுவாமி, தேவஸ்தான அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி, தேவஸ்தான இணை அதிகாரி கவுதமி, தலைமை செய்தி மற்றும் மக்கள் தகவல் தொடர்பு அதிகாரி டி.ரவி, கோவில் துணை அதிகாரி லோகநாதன் மற்றும் அலுவலர்கள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • வசந்த உற்சவம் நிறைவாக மன்மத தகனம் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். சித்திரை மாதத்தில் சித்திரை வசந்த உற்சவ விழா நடைபெறும். இந்த விழா 10 நாட்கள் நடைபெறும்.

    இந்த ஆண்டிற்கான சித்திரை வசந்த உற்சவம் கடந்த 14-ந் தேதி தொடங்கியது. விழா நாட்களில் மகிழ மரத்தை வலம் வந்த உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரருக்கு பொம்மை பூ கொட்டும் நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக நடைபெற்றது.

    விழாவின் நிறைவாக நேற்று முன்தினம் அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து கோபால விநாயகர் கோவிலில் இரவு மண்டக படி நிகழ்ச்சி நடைபெற்றது.

    தொடர்ந்து கோவிலுக்குள் வந்த அருணாசலேஸ்வரர் கோவிலின் 3-ம் பிரகாரத்தில் மங்கள வாத்தியங்கள் முழங்க வலம் வந்து தங்க கொடிமரம் அருகே உள்ள சபா மண்டபத்தில் எழுந்தருளினார்.

    இதையடுத்து அருணாசலேஸ்வரர் ஆழ்ந்த தியானத்தில் சென்றுவிட்டார். தொடர்ந்து தன் மீது அம்பு எய்த மன்மதனை அருணாசலேஸ்வரர் எரிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

    20 அடி உயர பொம்மை

    சிவபெருமான் ஆழ்நிலை தியானத்தில் இருக்கும் போது உலகில் உள்ள அனைத்து நிகழ்வுகளும் நின்று இருள் சூழ்ந்து விடுவதால் அந்த தியானத்தை கலைப்பதற்காக தேவர்கள் மன்மதனை சாமி மீது அம்பு விட அனுப்பி வைக்கின்றனர்.

    மன்மதன் அருணாசலேஸ்வரர் மீது பானம் தொடுத்த நேரத்தில் அருணாசலேஸ்வரரின் தியானம் கலைந்து எதிரே இருந்த மன்மதனை தீப்பிழம்பால் சுட்டு அழித்தார். இந்த நிகழ்வையே மன்மத தகனம் என்று கூறப்படுகிறது.

    இதற்காக 20 அடி உயரம் கொண்ட மன்மதன் பொம்மை கையில் வில்லோடு அருணாசலேஸ்வரர் முன்பு நிறுத்தப்பட்டது. அப்போது மன்மதனை அருணாசலேஸ்வரர் தன் நெற்றிக்கண்ணால் சுட்டெரிக்கும் நிகழ்வு நடந்தேரியது.

    அருணாசலேஸ்வரர் முன்பிருந்து சீறி பாய்ந்து வந்த தீ மன்மதன் மீது பட்டு கொழுந்துவிட்டு எரிந்தது. இதில் மன்மதன் உருவம் முழுவதும் எரிந்து சாம்பலானது.

    அங்கிருந்தவர்கள் தங்களுடைய கர்ம வினைகள் போவதற்கும், பில்லி சூனியம் தங்களை அண்டாமல் இருப்பதற்கும், வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு கண் திருஷ்டிக்காக எரிந்த சாம்பலை எடுத்து சென்றார்கள்.

    இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மட்டும் மன்மத தகனம் நிகழ்ச்சி நடைபெறுவது சிறப்பு வாய்ந்ததாகும்.

    • சித்திரை மாதத்தில் சூரிய ஒளி நேரடியாக சிவ லிங்கம் மீது விழும்.
    • பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த நெல்லிக்குப்பம் அருகே உள்ள திருக்கண்டேஸ்வரத்தில் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற நடனபாதேஸ்வரர் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் தொடர்ந்து ஒரு வாரம் சூரிய ஒளி நேரடியாக சிவ லிங்கம் மீது விழும். அந்த வகையில் நேற்று மாலை 6 மணிக்கு சூரிய ஒளி நேரடி யாக சிவலிங்கம் மீது விழுந்தது. தொடர்ந்து 10 நிமிடம் நீடித்த இந்த அதிசய நிகழ்வின்போது சிவலிங்ககத்துக்கு சிறப்பு பூஜை செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    அப்போது பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் சாமி கும்பிட்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சேனாதிபதி குருக்கள், கோவில் கணக்கர் சரவணன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • குருபகவான் தவக்கோலத்தில் சுயம்புவாக எழுந்தருளி உள்ளார்.
    • லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் குருப்பெயர்ச்சி விழா தொடங்குகிறது.

    சோழவந்தான்:

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு சித்திர ரத வல்லபபெருமாளை நோக்கி குருபகவான் தவக்கோலத்தில் சுயம்புவாக எழுந்தருளி உள்ளார். அருகில் சக்கரத்தாழ்வார் உள்ளார்.

    இங்கு குருப்பெயர்ச்சி விழா 3 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு வருகிற 29-ந்தேதி காலை 9.30 மணிக்கு லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் குருப்பெயர்ச்சி விழா தொடங்குகிறது.

    1-ந்தேதி (புதன்கிழமை) பிற்பகல் 12 மணி வரை தொடர்ந்து 3 நாட்கள் லட்சார்ச்சனை நடைபெறும்.அன்று மதியம் 3 மணி அளவில் யாகசாலை தொடங்கி 5.21 மணிக்குள் பரிகார மகாயாகம், மகா பூர்ணாகுதி, திருமஞ்சனம், சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

    பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள்

    குருப்பெயர்ச்சியை முன்னிட்டு பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள் ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய ராசிகளுக்கு பரிகாரம் செய்யவேண்டும். குருப்பெயர்ச்சியை முன்னிட்டு லட்சார்ச்சனை மற்றும் பரிகாரம் செய்ய விரும்பும் ராசிக்காரர்கள் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், வாடிப்பட்டி தாசில்தார் மூர்த்தி, சமயநல்லூர் துணை கண்காணிப்பாளர் ஆனந்தராஜ் மற்றும் சுகாதாரத்துறையினர் குருப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். குருப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டு வருகிறது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் கார்த்திகை செல்வி, கோவில் பணியாளர்கள் நாகராஜன், மணி, நித்தியா, ஜனார்த்தனன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    குருப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு அன்று இரவு 10 மணி வரை தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தினசரி காலை 8 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், பகல் 3.30 மணி முதல் மாலை 6 மணி வரையும், வியாழக்கிழமை அன்று காலை 7.30 மணி முதல் பகல் 2 மணி வரையும், பகல் 3.30 மணி முதல் இரவு 7 மணி வரையும் பக்தர்களுடைய வசதிக்காக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • முருகப்பெருமான் தனது இருப்பிடமான திருப்பரங்குன்றம் நோக்கி புறப்பட்டார்.
    • பவளக்கனிவாய் பெருமாளும் திருப்பரங்குன்றம் புறப்பட்டார்.

    திருப்பரங்குன்றம்:

    மதுரையில் மீனாட்சி அம்மன் - சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்திற்கு சென்ற திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் பூப்பல்லக்கில் ஊர் திரும்பினார். தங்கை மீனாட்சிக்கு, சுந்தரேசுவரருக்கு தாரை வார்த்துக் கொடுத்த பவளக்கனி வாய்பெருமாளும் தன் இருப்பிடம் வந்தார்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 12-ந்தேதி முத்திரை பதிக்கும் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வந்தது.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக கடந்த 21-ந் தேதி மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபோகம் வெகு விமரிசையாக நடந்தது. அதில் மீனாட்சி அம்மனின் அண்ணனாக பவளக்கனிவாய் பெருமாள் இருந்து சுந்தரேசுவரருக்கு மீனாட்சி அம்மனை தாரை வார்த்து கொடுத்தார்.

    இதனையொட்டி திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து கடந்த 20-ந்தேதி மாலை 5 மணியளவில் மேள தாளங்கள் முழங்க பல்லக்கில் பவளக்கனிவாய் பெருமாள் புறப்பட்டு மதுரைக்கு வந்தார்.

    இதேவேளையில் முருகப்பெருமான் தனது தாய், தந்தை (மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்திற்காக) புறப்பட்டு மதுரைக்கு வந்தார்.

    பின்னர் 21-ந் தேதி நடைபெற்ற திருக்கல்யாணம் வைபவத்தில் பங்கேற்று அருள்பாலித்தனர். நேற்று மாலை 5 மணி வரை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தங்கி இருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் மதுரை நகைக்கடை வீதியில் இருந்து மேள தாளங்கள் முழங்க வாசனை கமழும் வண்ண மலர்களான பூப்பல்லக்கில் தெய்வானையுடன் முருகப்பெருமான் தனது இருப்பிடமான திருப்பரங்குன்றம் நோக்கி புறப்பட்டார்.

    இதே வேளையில் பல்லக்கில் பவளக்கனிவாய் பெருமாளும் திருப்பரங்குன்றம் புறப்பட்டார். மீனாட்சி பள்ளம், ஜெய்ஹிந்த்புரம், பழங்காநத்தம், பைக்கரா பசுமலை வழியாக வழிநெடுகிலுமாக அமைக்கப்பட்டு இருந்த திருக்கண் மற்றும் மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தப்படியே இரவில் திருப்பரங்குன்றம் வந்தடைந்து தன் இருப்பிடம் சென்றார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து இருந்தது.

    • அழகர் மலை உச்சியில் வற்றாத நூபுர கங்கை நதி ஓடுகிறது.
    • துர்வாச முனிவர் சுதபஸ் முனிவரை மண்டூகம் ஆகும்படி சாபம் விடுத்தார்.

    சித்திரை திருவிழாவையொட்டி அழகர் கோவிலில் இருந்து மதுரை நோக்கி புறப்படும் கள்ளழகர், மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தை காண மட்டும் இங்கு வருவதில்லை. மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிப்பதற்காகவும் வருகிறார் என்கிறது புராண வரலாறு.

    அதாவது, அழகர் மலை உச்சியில் வற்றாத நூபுர கங்கை நதி ஓடுகிறது. இதில் ஒரு நாள் சுதபஸ் என்ற முனிவர், தண்ணீரில் மூழ்கி நீராடி மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருந்தார்.

    அப்போது பிரபல முனிவரான துர்வாச முனிவர் தனது சீடர்களுடன் நூபுர கங்கைக்கு வந்தார். அவரை சுதபஸ் முனிவர் கவனிக்கவில்லை. நீண்ட நேரம் கழித்து பூஜைகளை செய்த பின்னரே, துர்வாச முனிவரை வரவேற்றார்.

    இதனால் துர்வாச முனிவர் கோபமடைந்து சுதபஸ் முனிவரை மண்டூகம் (தவளை) ஆகும்படி சாபம் விடுத்தார். அதிர்ச்சி அடைந்த சுதபஸ் முனிவர், தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டார்.

    அதற்கு துர்வாச முனிவர், சித்திரை மாதம் பவுர்ணமிக்கு மறுநாள் கிருஷ்ணபட்ஷ பிரதமை திதியில் கள்ளழகராக சுந்தரராஜ பெருமாள் வந்து சாப விமோசனம் அளிப்பார் என்று கூறிவிட்டு சென்றார்.

    சாபத்தினால் தவளையாக மாறிய சுதபஸ் முனிவர், சுந்தரராஜ பெருமாளை நினைத்து தவம் இருந்தார். தவத்தினால் மனம் இறங்கிய சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் கோலத்தில் மதுரை வந்து மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்கினார் என வரலாறு கூறுகிறது.

    இந்த சம்பவத்தை நினைவு கூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் வைகை ஆற்றில் அமைந்து உள்ள தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. அதன்படி நேற்று நடந்த நிகழ்ச்சியில் மண்டூக முனிவருக்கு கள்ளழகர் சாப விமோசனம் அளித்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

     மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சியில் நாரை பறக்கவிடுவது வழக்கம். இதற்காக உயிருடன் நாரையை பிடித்து வருவார்கள். இதை பல தலைமுறையாக தேனூரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர்தான் செய்து வருகின்றனர். இதுகுறித்து தற்போது நாரை பிடித்து வந்த மணிமாறன் கூறியதாவது:-

    மதுரை தேனூரை சேர்ந்த எங்கள் குடும்பத்தினர்தான் பல தலைமுறையாக மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சியின்போது பறக்க விடுவதற்காக நாரை பிடித்து வந்து கொடுக்கிறோம். நாரையை பிடிப்பதற்காக கடும் சிரமப்படுவோம்.

    இதற்காக நிலத்தில் விவசாயம் செய்வது போல தண்ணீர் நிரப்பி வைத்து, உழுத நிலமாக மாற்றுவோம். அங்கு இரை தேடி வரும் நாரைகளை பிடிப்போம்.

    பிடிபட்ட உடன் நாரைகள், எந்த உணவை கொடுத்தாலும் உண்ணாது. அவற்றை எச்சரிக்கையுடன் பாதுகாக்க வேண்டும். சாப விமோசன நிகழ்ச்சி முடிந்த உடன், நாங்கள்தான் நாரையை பறக்க விடுவோம். நாரை எந்த திசையை நோக்கி பறக்கிறதோ, அந்த பகுதி இந்த ஆண்டு செழிப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை. இந்த வேலையை தலைமுறை, தலைமுறையாக செய்வது மகிழ்ச்சியை தருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நேற்று மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • சாப விமோசனம் பெற்றதை விளக்கும் விதமாக நாரை பறக்கவிடப்பட்டது.

    மதுரை:

    சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக மதுரை சித்திரை திருவிழா நடந்து வருகிறது. கடந்த 12-ந் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா தொடங்கியது. கடந்த 21-ந் தேதி மீனாட்சி திருக்கல்யாணமும், மறுநாள் தேரோட்டமும் நடந்தது.

    பின்னர் தீர்த்தவாரியுடன் நேற்று முன்தினம் மீனாட்சி அம்மன் கோவில் திருவிழா நிறைவு பெற்றது.

    இதற்கிடையில் அழகர்கோவிலில் சித்திரை பெருவிழாவையொட்டி அழகர், கள்ளழகர் வேடம் பூண்டு கடந்த 21-ந் தேதி தங்கப்பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நேற்று முன்தினம் நடந்தது. அன்றைய தினம் காலை 6.02 மணி அளவில் மேள, தாளங்கள் முழங்க, தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் `பச்சைப்பட்டு' உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார். அப்போது 10 லட்சத்திற்கும் அதிகமான கூட்டம் கூடியதால் மதுரை நகரமே ஸ்தம்பித்தது.

    பின்னர் வழி நெடுகிலும் உள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளிய கள்ளழகர் அன்று மாலையில் அண்ணா நகர் பகுதியில் உள்ள மண்டகப்படிகளில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் மதுரை வண்டியூர் பகுதியில் உள்ள வீரராகவ பெருமாள் கோவிலுக்கு இரவு 11 மணி அளவில் வந்து சேர்ந்தார்.

    அங்கு அவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதனைத்தொடர்ந்து நேற்று காலையில் வீரராகவ பெருமாள் கோவிலில் இருந்து கருட வாகனத்தில் புறப்பாடாகி வைகை ஆற்றுக்குள் உள்ள தேனூர் மண்டபத்தில் எழுந்தருளினார்.

     சாப விமோசனம்

    அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதற்காக அங்கு சிறிய குளம் ஏற்படுத்தப்பட்டு, தண்ணீர் நிரப்பப்பட்டு இருந்தது. அதில் பூக்களை மிதக்கவிட்டனர். குளத்தில் மண்டூக முனிவரின் உருவச்சிலை ஒன்று இருந்தது. அதன் அருகில் நாரை ஒன்றும் கட்டி வைக்கப்பட்டு இருந்தது. அங்கு பூஜைகள் முடிந்து கள்ளழகர் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் பெற்றதை விளக்கும் விதமாக நாரை பறக்கவிடப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • நேற்று நள்ளிரவில் தசாவதார நிகழ்ச்சி தொடங்கியது.
    • அழகரை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.

    கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நேற்று முன்தினம் நடந்தது. நேற்று மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதற்காக அங்கு சிறிய குளம் ஏற்படுத்தப்பட்டு, தண்ணீர் நிரப்பப்பட்டு இருந்தது. அதில் பூக்களை மிதக்கவிட்டனர்.

    குளத்தில் மண்டூக முனிவரின் உருவச்சிலை ஒன்று இருந்தது. அதன் அருகில் நாரை ஒன்றும் கட்டி வைக்கப்பட்டு இருந்தது. அங்கு பூஜைகள் முடிந்து கள்ளழகர் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் பெற்றதை விளக்கும் விதமாக நாரை பறக்கவிடப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இந்தநிகழ்ச்சி முடிந்த உடன் மதியம் 3.30 மணி அளவில் இதேபகுதியில் உள்ள அனுமார் கோவிலில் கள்ளழகர் எழுந்தருளினார். அங்கு அங்கப்பிரதட்சணம் நடந்தது. பின்னர் மேள, தாளம் முழங்க மதுரை ஆழ்வார்புரத்தில் உள்ள ராமராயர் மண்டபத்துக்கு கிளம்பினார்.

    நேற்று நள்ளிரவில் தசாவதார நிகழ்ச்சி தொடங்கியது. விடிய, விடிய நடந்த இந்த நிகழ்ச்சியில் முத்தங்கி சேவை, மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வாமன அவதாரம், ராம அவதாரம், கிருஷ்ண அவதாரம், மோகினி அவதாரம் உள்ளிட்ட அவதாரங்களில் அழகர் காட்சி தந்தார். அழகரை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.

    மோகினி அவதாரத்தில் உலா

    இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 6 மணி அளவில் மோகினி அவதாரத்தில் கள்ளழகர் வீதி உலா வருகிறார். பகல் 2 மணி அளவில் ராமராயர் மண்டபத்தில் ஆனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க கோலத்தில் எழுந்தருள்கிறார். பின்னர் இரவு 11 மணி அளவில் தல்லாகுளத்தில் உள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் திருமஞ்சனமாகி, நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 2.30 மணிக்கு கள்ளர் கோலத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்புரிகிறார்.

    அதே கோலத்துடன் கருப்பணசாமி கோவில் சன்னதியில் வையாழி ஆனவுடன் அங்கிருந்து அழகர் மலை நோக்கி புறப்படுகிறார்.

    மூன்றுமாவடி, அப்பன் திருப்பதி, கள்ளந்திரி வழியாக 27-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10.32 மணி அளவில் தனது இருப்பிடம் சென்று அடைகிறார்.

    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
    • திருமாவிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் காலை மோகனாவதாரம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு சித்திரை-12 (வியாழக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: பிரதமை காலை 6.57 மணி வரை பிறகு துவிதியை

    நட்சத்திரம்: விசாகம் பின்னிரவு 2.09 மணி வரை பிறகு அனுஷம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருமாவிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் காலை மோகனாவதாரம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. சென்னை ஸ்ரீ சென்ன கேசவப் பெருமாள் காலை கருட வாகனத்திலும் இரவு சந்திர பிரபையிலும் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு சிறப்பு குருவார திருமஞ்சன சேவை. ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சிறப்பு அபிஷேகம், அலங்காரம் வழிபாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பொறுப்பு

    ரிஷபம்-சாந்தம்

    மிதுனம்-உழைப்பு

    கடகம்-தாமதம்

    சிம்மம்-கவனம்

    கன்னி-நட்பு

    துலாம்- நன்மை

    விருச்சிகம்-பொறுமை

    தனுசு- பெருமை

    மகரம்-முயற்சி

    கும்பம்-சிறப்பு

    மீனம்-கவனம்

    • பக்தர்கள் கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து குளிர்வித்தனர்.
    • மண்டூக முனிவருக்கு கள்ளழகர் சாப விமோசனம் கொடுக்கும் நிகழ்வு.

    மதுரை:

    மதுரை சித்திரை திருவிழாவின் சிகரநிகழ்ச்சியான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் நேற்று காலை நடந்தது. இதற்காக கடந்த 21-ந்தேதி அழகர் கோவிலில் இருந்து கள்ளழகர் வேடம் பூண்டு பெருமாள் தங்கப் பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார்.

    கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, கடச்சனேந்தல் உள்ளிட்ட இடங்களை கடந்து நேற்று முன்தினம் (22-ந்தேதி) மூன்று மாவ டிக்கு வந்தார்.

    அங்கு கள்ள ழகரை பக்தர்கள் எதிர் கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் கள்ளழகரை எதிர்கொண்டு வரவேற்றனர்.

    பின்னர் தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கு வந்தார். அங்கு நள்ளிரவு 12 மணியளவில் திருமஞ்சனமாகி தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளினார்.

    அதைத்தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை அணிந்து நேற்று அதிகாலை தல்லாகுளம் கருப்பணசாமி கோவில் அருகில் ஆயிரம் பொன் சப்பரத்தில் கள்ளழகர் எழுந்தருளினார்.

    அங்கிருந்து அதிகாலை 3 மணி அளவில் தங்க குதிரையில் அமர்ந்தபடி வைகை ஆற்றுக்கு வந்தார். பின்னர் அதிகாலை 6.02 மணியளவில் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கினார். இதனை காண 10 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் குவிந்தனர்.

    சுமார் ஒரு மணி நேரம் அங்கு அமைக்கப்பட்டிருந்த மண்டபத்தில் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதன் பின்னர் மதிச்சியம் ராமராயர் மண்டபத்தில் எழுந்தருளினார். அப்போது கள்ளழகர் வேடமணிந்த பக்தர்கள் கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து குளிர்வித்தனர்.

    இரவு 9 மணி அளவில் வண்டியூர் வீரராகவ பெரு மாள் கோவிலில் கள்ளழகர் எழுந்தருளினார். அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை தரிசனம் செய்தனர். வண்டியூர் வீர ராகவ பெருமாள் கோவிலில் கள்ளழகருக்கு இன்று காலை திருமஞ்சனம் நடந்தது. அதனைத் தொடர்ந்து ஏகாந்த சேவை, பக்தி உலாத்துதல் நடந்தன.

    அதனைத் தொடர்ந்து கள்ளழகர் சேஷ வாகனத்தில் எழுந்தருளினார். அப்போது திரளான பக்தர்கள் சர்க்கரை தீபம் எடுத்து வழிபட்டனர்.

    பின்பு அங்கிருந்து புறப்பட்ட கள்ளழகர் தேனூர் மண்டபத்தை வந்தடைந்தார். அங்கு கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    பின்னர் மண்டூக முனிவருக்கு கள்ளழகர் சாப விமோசனம் கொடுக்கும் நிகழ்வு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். மாலை 3.30 மணியளவில் அனுமன் கோவிலில் கள்ளழகர் எழுந்தருள்கிறார். அப்போது பக்தர்கள் அங்க பிரதட்சணம் செய்து வழிபாடு நடத்துகின்றனர்.

    இரவில் கள்ளழகர் மீண் டும் ராமராயர் மண்டகப்ப டிக்கு வருகிறார். அங்கு இரவு 11 மணி முதல் நாளை (25-ந்தேதி) காலை வரை விடிய, விடிய தசாவதார நிகழ்ச்சி நடக்கிறது. மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வராக அவதாரம், நரசிம்ம அவதாரம், வாமன அவதாரம், பரசுராம அவதாரம், ராம அவதாரம், பலராம அவதாரம், கிருஷ்ண அவதா ரம், மோகன அவதாரம் ஆகிய திருக்கோலங்களில் அழகர் காட்சி அளிக்கிறார்.

    நாளை காலை 6 மணிக்கு மோகன அவதார கோலத்தில் கள்ளழகர் வீதி உலா வருகிறார். பகல் 12 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க கோலத்தில் கருப்பணசாமி கோவில் சன்னதியில் இருந்து அழகர் மலைக்கு புறப்படுகிறார்.

    நாளை இரவு 11 மணிக்கு தல்லாகுளத்தில் ராமநாதபு ரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் திருமஞ்சனமாகி 26-ந்தேதி அதிகாலை 2.30 மணிக்கு பூப்பல்லக்கில் கள்ளழகர் எழுந்தருளுகிறார். அதே கோலத்தில் கருப்பணசாமி கோவில் சன்னதியில் இருந்து அழகர் மலைக்கு புறப்படுகிறார். மூன்றுமாவடி, அப்பன் திருப்பதி, கள்ளந்திரி வழி யாக 27-ந்தேதி காலை அழ கர்மலையில் உள்ள இருப்பிடம் போய் சேருகிறார்.

    • திருநங்கைகள் தாலி அறுத்து ஒப்பாரி வைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
    • தேரோட்டம் இன்று காலை நடந்தது.

    திருநாவலூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் மற்றும் திருநங்கைகள் தாலி அறுத்து ஒப்பாரி வைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

    திருநங்கைகளின் குலதெய்வமாக கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இதில் கூவாகத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற தாகும். இங்கு ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் திருநங்கைகள் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சி, தேரோட்டம், அரவாண் பலி, தாலி அறுத்து ஒப்பாரி வைக்கும் நிகழ்ச்சி போன்றவைகள் தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது.

    மகாபாரத போரில் பாண்டவர்களுக்கும், கவுர வர்களுக்கும் மோர் மூண்டது. இதில் பாண்டவர்கள் வெற்றி பெற வேண்டும் என்றால், சாமூத்ரிகா லட்சணம் கொண்ட ஆண்மகனை பலி கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

    பாண்டவர்களின் படை யில் இருந்த அரவாண், 32 சாமூத்ரீகா லட்சணத்துடன் இருந்ததால் அவரை பலி கொடுக்க முடிவெடுத்தனர்.

    அப்போது அரவாண் ஒரு நிபந்தனை விதித்தார். தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். தாம்பத்திய உறவு முடிந்த பின்பு தன்னை பலி கொடுக்க வேண்டுமென அரவாண் கூறினார்.

    இதனை ஏற்ற கிருஷ்ணன் மோகினி அவதாரம் எடுத்து, அரவாண் கையால் தாலியை கட்டிக்கொண்டு, அன்றிரவு முழுவதும் கணவன், மனைவியாக வாழ்ந்தனர். தொடர்ந்து மறுநாள் காலை அரவாண் களப்பலி கொடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற போரில் பாண்டவர்கள் வெற்றி பெற்றனர்.

     எனவே, இவ்வுலகில் வாழும் திருநங்கைகள் தங்களை கிருஷ்ணரின் அவதாரமாக கருதி, பூசாரி கைகளினால் தாலி கட்டிக்கொண்டு அன்றிரவு முழுவதும் ஆடிப்பாடி மகிழ்வர், தொடர்ந்து மறுநாள் நடைபெறும் தேரோட்டத்தை தொடர்ந்து அரவாண் பலி முடிந்த பின் தங்களது தாலியை அறுத்துக் கொண்டு ஓப்பாரி வைத்து அழுவது ஐதீகம்.

    அதன்படி இந்த ஆண்டிற்கான கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 9-ந் தேதி சாகை வார்த்தலுடன் தொடங்கியது. தொடர்ந்து 10-ந் தேதி முதல் மகாபாரத சொற்பொழிவு, சாமி வீதி உலா நடைபெற்றது.

    நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் திருநங்கைகளுக்கு கோவில் பூசாரி கையால் தாலி கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நேற்று இரவு முழுவதும் திருநங்கைகள் கூவாகத்தில் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

     விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை தொடங்கியது. கூவாகத்தின் முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா வந்த தேர் காலை 10 மணியளவில் தெய்வநாயக செட்டியார் பந்தலடிக்கு வந்தது. அங்கு அரவாண் பலி நடந்தவுடன், திருநங்கைகள் அனைவரும் தங்களின் தாலிக்கயிறை அறுத்துவிட்டு, கணவரை நினைத்து ஓப்பாரி வைத்தனர். பின்னர் அருகில் இருந்த நீர்நிலைகளில் குளித்துவிட்டு வெள்ளை புடவை அணிந்து தங்களின் சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.

    இவ்விழாவில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள், புதுச்சேரி, ஆந்திரா, கேரளா, கர்நாடக, வட மாநிலங்களை சேர்ந்த திருநங்கைகளும், வெளிநாட்டை சேர்ந்த திருநங்கைகளும் பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள், கிராம பொதுமக்கள், திருநங்கைகள் கூட்டமைப்பினர் செய்திருந்தனர்.

    • பிரத்யங்கிரா தேவிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.
    • சிறப்பு மிளகாய் வத்தல் யாகம் நடைபெற்றது.

    ஓசூர்:

    சித்ரா பவுர்ணமி நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கோயில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது.

    அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மோரனபள்ளி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ராகு கேது அதர்வன ஸ்ரீ மகா பிரத்யங்கிரா தேவி கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, மூலவர் பிரத்யங்கிரா தேவிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர், மகா தீபாராதனை நடத்தப்பட்டது.

    இதைத் தொடர்ந்து சிறப்பு மிளகாய் வத்தல் யாகம் நடைபெற்றது. இதில், மிளகாய் வத்தல் உள்ளிட்ட திரவியங்களை யாகசாலை குண்டத்தில் நிரப்பி பூரண ஆகுதியுடன் சிறப்பு அஷ்டோத்திர வழிபாடு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ராகு கேது பரிகார பூஜைகள் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மன் வழிபாடு நடத்தினர்.

    ×