

நவராத்திரி என்பது துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியரை வழிபடும் விழாவாகும். இதில் இரண்டாம் பகுதியான 4 முதல் 6-ஆம் நாட்கள் செல்வம் மற்றும் ஐஸ்வர்யத்தின் வடிவமான மகாலட்சுமிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.
இந்நாட்களில் அன்னை லட்சுமியை அஷ்டலட்சுமி வடிவங்களில் (ஆதி லட்சுமி, தான்ய லட்சுமி, தைரிய லட்சுமி, கஜ லட்சுமி, சந்தான லட்சுமி, விஜய லட்சுமி, வித்யா லட்சுமி, தன லட்சுமி) மக்கள் வழிபடுகின்றனர்.
தீய குணங்களை அழிக்கும் துர்க்கை வழிபாட்டுக்குக் பிறகு, மனம் அமைதியாகவும் வளம் பெறவும் லட்சுமி தேவியின் அருள் வேண்டப்படுகிறது. இறுதியில் ஞானத்தை வழங்க சரஸ்வதி தேவி வழிபடப்படுகிறாள்.
இந்த நாட்களில் லட்சுமி அஷ்டோத்திரம், லலிதா சகஸ்ரநாமம் மற்றும் மகாலட்சுமி கவசம் போன்ற ஸ்லோகங்கள் சொல்லி தேவியை வழிபடுகின்றனர்.
நவராத்திரி வழிபாட்டின் அடுத்த 3 நாட்களான வருகிற 14, 15, 16-ந்தேதிகளில் மகாலட்சுமியை வழிபட வேண்டிய முறையையும், அதற்கான பலனையும் பார்ப்போம்.
இந்த நாளில் மகாலட்சுமி தாயாரை மல்லிகை, முல்லை, வெண் தாமரை, செந்தாமரை மலர்கள் வைத்து வழிபட வேண்டும். அன்னைக்கு உகந்த இலை கதிர்ப்பச்சை. பழம் கொய்யா.
கதம்ப சாதம் பிரசாதம் ஆகும். பஞ்சமுக விளக்கிட்டு கூட்டுப்பிரார்த்தனை செய்யவேண்டும். கோட்டு வாத்தியம் இசைக்க பைரவி ராகம் பாடப்படவேண்டும்.
நினைக்கவேண்டிய தெய்வம், விசாலாட்சி. அட்சதை கோலமிட வேணும். பச்சை பயறு தானியம், மரகத ரத்தினத்துடன் புளி சாதம், பாசிபருப்பு சாதம் நைவேத்தியமாக படைக்க வேண்டும்.
இந்த வழிபாட்டின் மூலம் நல்லறிவு பெருகும்.
இந்த நாளில் சொல்லவேண்டிய புதன் ஸ்தோத்திரம்:
இதமுற வாழ இன்னல்கள் நீக்கு, புத பகவானே
பொன்னடி போற்றி! பதந் தந்தாள்வாய் பண்ணெலியானே
உதவியே அருளும் உத்தமா போற்றி!
மங்கை மனம் மைஇழ்ந்து நெல்லிக்கனி தர
சங்கரர் உன்னைத் துதித்துமே பாட
தங்கக் கனிகளால் விருக்ஷம் பொழிய
எங்கும் அதுபோல் செல்வம் தழைக்க.
இந்த நாளில் வளர்ச்சியை காட்டும் வைஷ்ணவியை வணங்க வேண்டும். மலர்கள் பாரிஜாதம், முல்லை, செவ்வந்தி. இலை விபூதி பச்சை. பழம் மாதுளை. பிரசதம் தயிர்சாதம். விளக்கு நிறைய ஏற்றவேண்டும்.
அல்லரி வாத்தியம் இசைக்க பந்துவராளி ராகம் பாட வேண்டும். கடலை கோலம் இடவேண்டும். இந்த நாளில் இளம்பச்சை, மஞ்சள் வஸ்திரம் வழங்கலாம்.
நைவேத்யம் தயிர்சாதம், சுண்டல், கடலைபொடி சாதம் போன்றவை.
இந்த நாளில் சொல்லவேண்டிய குரு ஸ்தோத்திரம்:
குணமிகு குரு பகவானே
மணமுடன் வாழ மகிழ்வுடன் அருள்வாய்
பிரகஸ்பதி வியாழப் பரகுரு நேசா
கிரஹ தோஷமின்றி கடாஷித்தருள்வாய்!
கமல மலரணையில் கனகச் சிலை வடிவில் திகழும் அன்னையடி கிளியே தேவி லக்ஷ்மியே (கமல)
அருளும் நவராத்திரி ஐந்தாம் நாள் அசுரன் தூது கேட்டாளடி கிளியே தோற்றம் காண்பாயடி (கமல) செல்வ மழை பொழிய சிகப்புத் தாமரையில்
திருமகள் வந்தாளடி கிளியே திருவடி சேர்வோமடி (கமல)
சங்க நிதியென்னும் பதுமநிதியென்றும்
அள்ளித் தருவாளடி அவளைத் தொழுவோமடி (கமல)
இந்த நாளில் செல்வ வளர்ச்சியைத் தரும் சண்டிகா, இந்திராணியை செம்பருத்தி மலர்கொண்டு வழிபட வேண்டும்.
அன்னைக்கு உகந்த இலை சந்தன இலை, பழம் உலர் திராட்சை, நார்த்தம்பழம், பிரசாதம் தேங்காய் சாதம்
பஞ்சமுக விளக்கு ஏற்ற வேண்டும். பேரி வாத்தியத்துடன் நீலாம்பரி ராகம் பாட வேண்டும்.
பருப்பு கோலம் இடவேண்டும்.
இந்த நாளில் சொல்லவேண்டிய சுக்ர ஸ்தோத்திரம்:
சுக்ரமூர்த்தி சுபம் மிக ஈவாய் !
வக்ரமின்றி வரம் மிகத் தருவாய்
வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே
அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே !
இந்த வழிபாட்டின் மூலம் செல்வ வளர்ச்சி கிடைக்கும்.
பொன்னான அன்னை ஸ்ரீலட்சுமியே புகழ்பாடி வந்தேன்
மகாலட்சுமியே அன்பான தெய்வம் நீயல்லவோ அலமேலு மங்கைத் தாயல்லவோ (பொன்)
அம்மா உன்காட்சி நவமங்கலம் ஆறாம் நாள் மேடை ஷர்பாசனம்
பூமேனி கோலம் ஸ்ரீசண்டிகா பொருள்யாவும் தருகின்ற சாகம்பரி நீ (பொன்)
நவரத்னமாலை அலங்காரமே நவதான்யம் படைத்து அபிஷேகம்
நவநாமம் கூறும் என்பாடலே நவசக்தி பீடம்தான் உன்வாசலே (பொன்)
கல்லார்கள் என்ன கற்றோர் என்ன நல்லோர்கள் என்ன தீயோர் என்ன
உள்ளாரைக் கண்டால் ஊர் வாழ்த்துமே உன்னால்தான் மேன்மையெல்லாம் உண்டாகுமே (பொன்)
அம்பாள் பக்கத்தில் குழந்தையை ஒரு பலகையை போட்டு அமர்த்தி வைக்க வேண்டும். குழந்தைக்கு மகிழ்ச்சி தரக்கூடிய நெற்றிச் சூட்டி, ஜிமிக்கி, வளையல், பொட்டு, பாசிமணி, ஒட்டியாணம், கண்ணாடி, சீப்பு, புத்தாடை, பூ, தேங்காய், பழம் போன்ற பொருட்களை ஒரு தாம்பாளத்தில் வைக்க வேண்டும். தாம்பாளத்தை பூஜை செய்கிற பெண் குழந்தை கையில் கொடுக்க வேண்டும்.
எல்லாவற்றையும் குழந்தைக்கு அணிவித்து மறுபடியும் குழந்தையை பலகையில் அமர்த்தி தாம்பாளத்தில் இரு கால்களையும் வைத்து தெய்வமாக நினைத்து பாத பூஜை செய்ய வேண்டும். மலர் தூவி, மாலை அணிவித்து மலர்களால் அர்ச்சித்து கற்பூரம் காட்டி மந்திரம் சொல்லி பூஜை செய்ய வேண்டும்.
அன்றைக்குள்ள நைவேத்தியத்தை குழந்தைக்கு ஊட்டிவிட வேண்டும். குழந்தை காலில் விழுந்து வணங்கிட வேண்டும். பக்கத்தில் (1 ரூபாய் அல்லது 5 ரூபாய் நாணயம்) காசு வைத்திருக்க வேண்டும். அதை குழந்தை கையினால் நமக்கு விபூதி இட சொல்லி காசை நாம் வாங்கிக் கொள்ள வேண்டும். அதை நாம் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். செல்வம் பெருகும்.
இறுதியில் கண்ணாடியைக் குழந்தை கையில் கொடுத்து தன் முகம் பார்க்கச் சொல்ல வேண்டும். குழந்தை சந்தோஷத்தில் சிரிக்கும். அது நமக்கு அம்பாள் மகிழ்ச்சி அடைவதற்கு சமம். தேங்காய், பழம், சந்தனம், குங்குமம் எல்லாம் கொடுத்து ஆர்த்தி எடுத்துவிட்டு குழந்தையை எழுந்திருக்கச் செய்ய வேண்டும்.