

பெங்களூரு :
உலக புகழ் பெற்ற மைசூரு தசரா விழா, ஆண்டுதோறும் நவராத்திரி நிகழ்வின்போது வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விழாவின் முத்தாய்ப்பாக நடைபெறும் ஜம்பு சவாரி ஊர்வலத்தை காண வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவார்கள். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக தசரா விழா கொண்டாடப்படுமா? என்ற சந்தேகம் எழுந்தது.
தசரா விழா கொண்டாட்டம் குறித்து முடிவு எடுக்க முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் உயர்மட்ட குழு கூட்டம் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் துணை முதல்-மந்திரிகள் கோவிந்த் கார்ஜோள், அஸ்வத் நாராயண், லட்சுமண் சவதி, கன்னடம் மற்றும் கலாசாரத்துறை மந்திரி சி.டி.ரவி, மைசூரு மாவட்ட பொறுப்பு மந்திரி எஸ்.டி.சோமசேகர் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மைசூரு தசரா விழாவை கொண்டாடுவது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் மைசூரு தசரா விழாவை கொண்டாடுவது குறித்து எனது தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் துணை முதல்-மந்திரிகள் உள்பட குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இதில் மைசூரு தசரா விழாவை முழுமையாக ரத்து செய்ய வேண்டாம் என்ற கருத்து வந்தது. இந்த விழாவை அடையாளத்திற்கு, எளிமையாக நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த தசரா விழா பணிகளுக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்படும். உணவு மேளா, விளையாட்டு, இளைஞர் தசரா உள்பட கலாசார நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. மேலும் ஜம்பு சவாரியை மைசூரு அரண்மனை வளாகத்திற்குள் நடத்துவது என்றும், இதில் அதிகபட்சமாக 5 யானைகள் மட்டும் பங்கேற்க அனுமதிப்பது என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு பூஜை நிறைவேற்றுவது மற்றும் தசரா விழாவை தொடங்கி வைப்பது போன்றவற்றுக்கு கொரோனாவுக்கு எதிராக முன்களத்தில் நின்று போராடி வரும் 5 பேரை தேர்வு செய்து அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.
அதாவது டாக்டர், நர்சு, ஆஷா ஊழியர், துப்புரவு பணியாளர் மற்றும் போலீஸ்காரர் என 5 பேர் தசரா விழாவை தொடங்கி வைப்பார்கள். தசரா விழாவையொட்டி மைசூரு நகரம், மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்படும். பிரதமர் சுயசார்பு திட்டத்தின் கீழ் சீனாவின் பொருட்களை பயன்படுத்தக்கூடாது. இந்திய உற்பத்தி பொருட்களை பயன்படுத்த வேண்டும். கலை நிகழ்ச்சிகளை நடத்தி வீடியோ மூலம் பதிவு செய்து அதை தொலைக்காட்சிகள் மூலம் ஒளிபரப்பலாம் என்று சில ஆலோசனை வந்துள்ளது. அதுபற்றி விவாதித்து முடிவு எடுக்கப்படும்.”
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
இந்த கூட்டத்திற்கு பிறகு மந்திரி சி.டி.ரவி நிருபர்களிடம் கூறியதாவது:-
“ஜம்பு சவாரி யானைகள் வரவேற்பு, அரண்மனை மைதானத்தில் எளிமையாக நடைபெறும். மைசூருவில் முக்கியமான சர்க்கிள்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்படும். அரண்மனையில் நடைபெறும் நிகழ்ச்சிகளை எளிமையாக நடத்த முதல்-மந்திரி அனுமதி வழங்கியுள்ளார். தசரா கிரிடா ஜோதியை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெறும். திரைப்பட கண்காட்சி இருக்காது.
தசரா குஸ்தி சம்பிரதாயத்திற்கு நடைபெறும். ரங்கோலி, அரண்மனையில் மட்டும் நடைபெறும். குழந்தைகள் தசரா, மகளிர் தசரா இருக்காது. யோகா தசராவும் இருக்காது. விவசாய தசரா, விளையாட்டு, கருத்தரங்கு உள்ளிட்டவை இருக்காது. பாரம்பரிய நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி இல்லை. இசை நிகழ்ச்சி இல்லை. ஓவிய சந்தை, பசுமை சந்தை, விமான கண்காட்சியும் இருக்காது.
மைசூருவில் மாவட்ட பொறுப்பு மந்திரி எஸ்.டி.சோமசேகர் தலைமையில் ஒரு ஆலோசனை கூட்டம் நடைபெறும். அதில் தசரா விழா குறித்து விவாதிக்கப்படும். கடந்த 2003-ம் ஆண்டு இதேபோல் தசரா விழா எளிமையாக கொண்டாடப்பட்டது. இது கடினமான காலம் என்பதால் மக்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.”
இவ்வாறு சி.டி.ரவி கூறினார்.
இந்த கூட்டத்தில் மைசூரு, மண்டியா, சாம்ராஜ்நகர் மாவட்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.