60 வயதில் கேமிங் ஸ்ட்ரீமராக கலக்கும் சீன பெண் – 5.27 லட்சம் பாலோயர்களுடன் அசத்தல்!

தினமும் இரண்டு முறை கேமிங் லைவ் ஸ்ட்ரீமிங் செய்யும் இவரது ஒவ்வொரு நிகழ்ச்சியையும் சுமார் 10 ஆயிரம் பேர் பார்ப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Zhong Juanjuan
Published on: 

சீனாவின் குவாங்டாங் மாகாணம், மெய்சோ நகரைச் சேர்ந்தவர் 60 வயதான சோங் ஜுவான்ஜுவான். இவர் சமூகவலைதளத்தில் ஆண்ட்டி ஜுவான் என்று பிரபலமாக அழைக்கப்படுகிறார். சமூக வலைதளங்களில் இவரை சுமார் 5.27 லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். தினமும் இரண்டு முறை கேமிங் லைவ் ஸ்ட்ரீமிங் செய்யும் இவரது ஒவ்வொரு நிகழ்ச்சியையும் சுமார் 10 ஆயிரம் பேர் பார்ப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகனின் கேம் பழக்கத்தால் ஏற்பட்ட பிரச்சனை

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு, சோங்கின் இளைய மகன் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது, வீடியோ கேம்களுக்கு அதிக நேரம் செலவிட்டுள்ளார். இதனால் அவரது படிப்பு கடுமையாக பாதிக்கபட்டதாகவும்

இதனால் கோபமடைந்த சோங், தனது மகனை தேடி அடிக்கடி இணையதள கேம் மையங்களுக்கு செல்வார். சில நேரங்களில் அவரை அங்கிருந்து வலுக்கட்டாயமாக வீட்டுக்கும் அழைத்து வந்துள்ளார். ஆனால் பல ஆண்டுகளுக்குப் பிறகு நிலைமை தலைகீழாக மாறியது.

மகனைப் புரிந்துகொள்ள கேமிங் கற்ற தாய்

2020-ம் ஆண்டு, வேலைக்கு சென்றதை நிறுத்தியிருந்த தனது மகன் நீண்ட நேரம் வீடியோ கேம் விளையாடுவதை சோங் கவனித்தார்.

இவ்வளவு நேரம் கேம் விளையாடுவதில் என்ன இருக்கிறது?என்பதை தெரிந்துகொள்ள அவரும் கேம் விளையாட முடிவு செய்தார். ஆரம்பத்தில் கேம் விளையாடுவது அவருக்கு மிகவும் சிரமமாக இருந்தது. பார்வை குறைபாடு மற்றும் வயது காரணமாக சரியாக கையாள தெரியாமல் சற்று சிரமங்களை சந்தித்துள்ளார்

ஆனால் அவர் முயற்சியை கைவிடவில்லை. மகன் அவருக்கு கேம் விளையாட கற்றுக்கொடுத்தார். தொடர்ந்து பயிற்சி செய்த சோங், பின்னர் திறமையான கேமராக மாறியுள்ளார்.

8,000 மணி நேரத்துக்கும் மேல் கேமிங்

2022-ம் ஆண்டு முதல் கேமிங் லைவ் ஸ்ட்ரீமிங் செய்யத் தொடங்கிய சோங், இதுவரை 8,000 மணி நேரத்துக்கும் மேல் கேம் விளையாடியுள்ளதாக கூறப்படுகிறது.

2024-ம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற கவுண்டர்-ஸ்ட்ரைக் குளோபல் ஆஃபன்சிவ் ஆன்லைன் கண்காட்சி போட்டியில் பங்கேற்றதும் அவருக்கு மிகப்பெரிய கவனத்தை பெற்றுத் தந்தது. அந்த போட்டியில் இளம் ரஷிய கேமிங் வீரர் டோங்க்-ஐ அவர் வீழ்த்திய சம்பவமும் பார்வையாளர்களிடையே கவனம் பெற்றது.

எனக்கும் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள உரிமை உள்ளது

சோங் பிரபலமான பிறகு, சிலர் அவரது கேமிங் திறமை குறித்து சந்தேகங்களை எழுப்பினர். வேறு ஒருவர் அவருக்குப் பதிலாக கேம் விளையாடுவதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.

இதையடுத்து அவரது மகன், பல கேமராக்களை பொருத்தி சோங் தானாகவே விளையாடுவதை பார்வையாளர்கள் தெளிவாக பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்தார்.

ஒரு தாயாக நான் வீட்டு வேலைகளில் மட்டுமே இருக்க வேண்டுமா? என்று கேள்வி எழுப்பிய சோங், புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதற்கு வயது ஒரு தடையல்ல என்று கூறி திறைமையாக விளையாடி நிரூபித்துள்ளார்.

ஒரு காலத்தில் கேம் விளையாடியதற்காக மகனை கண்டித்த சோங், தற்போது கேமிங் உலகில் பிரபலமாகியுள்ளார். மேலும், அவரது மகனே தற்போது தாயின் முழுநேர மேனேஜராக செயல்பட்டு வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com