

சென்னை மெட்ரோ ரெயில் ஆன்லைன் டிக்கெட் சேவையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் பயணிகள் சிரமம் அனுபவித்தனர். இரண்டு மணி நேரத்தில் கோளாறு சரிசெய்யப்பட்டு, மொபைல் செயலி மற்றும் இணையவழி டிக்கெட் சேவைகள் மீண்டும் இயல்புக்கு திரும்பியதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு இடத்திற்கு செல்வதற்கு மெட்ரோ ரெயில் சேவை மிகவும் கை கொடுத்து வருகிறது. மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து விமான நிலையம், புறநகர் ரெயில் நிலையம், பஸ் நிலையம் போன்றவற்றை இணைக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. 2 வழித்தடங்கள் மூலம் மெட்ரோ ரெயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகிறது.
இதனால் தினமும் லட்சக்கணக்கானோர் பயணம் செய்து வருகிறார்கள். மெட்ரோ ரெயிலில் பயணிகள் எளிதாக செல்ல பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இதனால் நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், இன்று செல்போன் வழியாக ஆன்லைன் டிக்கெட்டுகள் பெறுவது, தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக இயங்காததால் பயணிகள் தவித்தனர்.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருந்ததாவது:-
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, மொபைல் செயலி மூலம் பெறப்பட்டவை உள்பட இணையவழி டிக்கெட்டுகள் (QR டிக்கெட்டுகள்) தற்காலிகமாக வழங்கப்படவில்லை.
அடுத்த அறிவிப்பு வரும் வரை, பயணிகள் மெட்ரோ ரெயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுண்டர்களில் டிக்கெட்டுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கோளாறைச் சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் ஏற்படும் சிரமத்திற்கு CMRL வருத்தம் தெரிவிக்கிறது என தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, இரண்டு மணி நேரம் கழித்து தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு விட்டதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,
தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டுள்ளது.
CMRL மொபைல் செயலி உள்ளிட்ட இணையவழி டிக்கெட் முன்பதிவு சேவைகள் தற்போது சீராகச் செயல்படுகின்றன.
பிற இணையவழி டிக்கெட் முன்பதிவு வசதிகளும் கிடைக்கின்றன:
நிலையான QR குறியீடு (Static QR Code), CMRL மொபைல் செயலி, WhatsApp, Paytm, PhonePe
டிக்கெட் கவுண்டர்களில் 'சிங்கார சென்னை அட்டை' (Singara Chennai Card) மற்றும் 'CMRL பயண அட்டைகள்' (CMRL Travel Cards) மூலமாகவும் டிக்கெட்டுகளைப் பெறலாம்.
ஏற்பட்ட சிரமத்திற்கு CMRL வருத்தம் தெரிவித்துக்கொள்கிறது என கூறப்பட்டுள்ளது.