

வேலூர்:
திருக்கழுகுன்றத்தில் நடந்த அ.தி.மு.க. பொதுக் கூட்டத்தில் முதல் -அமைச்சர் எடப்பாடி பேசும் போது, ‘கட்சி ஆரம்பித்த நடிகர் விஜயகாந்த் நிலைமை இப்போது எப்படி இருக்கிறதோ அதே போல் கமல்நிலையும் மாறும் என்று கூறி இருந்தார்.
இதற்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பதிலடி கொடுத்துள்ளார்.
வேலூரை அடுத்த ஸ்ரீபுரம் தங்க கோவில் வளாகத்தில் இன்று நடந்த தே.மு.தி.க. பிரமுகர் திருமண விழாவில் விஜயகாந்த் கலந்து கொண்டார்.
அப்போது முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறிய கருத்து பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த விஜயகாந்த் ‘கூடிய விரைவில் தேர்தல் வரும். அப்போது யார் காணாமல் போவார்கள் என்பது தெரியும். காணாமல் போவது தே.மு.தி.க.வா? அல்லது அ.தி.மு.க.வா? என பார்ப்போம்’ என்றார்.
தமிழக அரசியல் கட்சிகள் கொள்கை ரீதியாக வேற்றுமையில் இருந்தாலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
ஜெயலலிதா நினைவிடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் தற்கொலை செய்ததற்கான காரணம் விசாரணையில் தான் தெரியவரும். ஆனால் பணி அழுத்தத்துக்கு தற்கொலை தீர்வல்ல.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews #vijayakanth #edappadipalanisamy #kamal