ராகுல், ரோகித் சதமடித்து அசத்தல் - வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற 388 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா

ரோகித் சர்மா, கேஎல் ராகுலின் அபார சதத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற 388 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது இந்தியா.
சத்மடித்த ரோகித் சர்மா, கேஎல் ராகுல்
சத்மடித்த ரோகித் சர்மா, கேஎல் ராகுல்
Published on

விசாகப்பட்டினம்:

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று பகல்-இரவு மோதலாக நடக்கிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும் கேஎல் ராகுலும் களமிறங்கினர். 

ஆரம்பத்தில் இருந்தே இருவரும் ஒன்று, இரண்டு என ரன்களை எடுத்தனர். கிடைத்த பந்துகளில் சிக்சர், பவுண்டரிகளை அடிக்க தவறவில்லை. 

இருவரும் சிறப்பாக ஆடி அரை சதமடித்து அசத்தினர். இந்திய அணி 24 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 139 ரன்கள் எடுத்துள்ளது. தொடர்ந்து அதிரடி காட்டிய ரோகித் சர்மா சதமடித்தார். 

மறுமுனையில் நிதானமாக ஆடிய கே.எல்.ராகுல் சதமடித்து அசத்தினார். அவர் 102 ரன்னில் அவுட்டானார். முதல் விக்கெட்டுக்கு ராகுல், ரோகித் சர்மா ஜோடி 227 ரன்கள் எடுத்தது.

அடுத்து இறங்கிய கேப்டன் விராட் கோலி ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அப்போது அணியின் எண்ணிக்கை 2 விக்கெட்டுக்கு 232 ரன்கள் எடுத்திருந்தது. அவரை தொடர்ந்து ஷ்ரேயஸ் அய்யர் களமிறங்கினார்.

சதம் கடந்த ரோகித் அதிரடியாக ஆடினார். இதனால் 35 ஓவருக்கு பிறகு இந்திய அணியின் ரன்ரேட் 6 ஆக உயர்ந்தது. அவருக்கு அய்யர் ஓத்துழைப்பு கொடுத்தார். இருவரும் இணைந்து 60 ரன்கள் எடுத்தனர்.

ரோகித் சர்மா 138 பந்துகளில் 5 சிக்சர், 17 பவுண்டரி என 159 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ரிஷப் பந்த் இறங்கினார். இருவரும் அடித்து ஆடினர். 45 ஓவர் முடிவில் இந்தியா 300 ரன்களை கடந்தது.

இறுதிக்கட்டத்தில் ரிஷப் பந்தும் ஷ்ரேயஸ் அய்யரும் அதிரடி காட்டினர். சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர். ரிஷப் பந்த் 16 பந்துகளில் 4 சிக்சர், 3 பவுண்டரி என 39 ரன்களை எடுத்து அவுட்டானார். ஷ்ரேயஸ் அய்யர் அரை சதமடித்து 53 ரன்னில் வெளியேறினார்.

முடிவில், இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 387 ரன்களை குவித்துள்ளது.

இதையடுத்து, 388 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்குகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com