சென்னையில் 2 இடங்களில் சோதனை: மன்னார்குடியைச் சேர்ந்த அதிகாரியும் சிக்குகிறார்

இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் டெல்லி போலீசார் சென்னையில் இன்று ஒரே நாளில் 2 இடங்களில் அதிரடி சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ராஜாஜி பவன்
ராஜாஜி பவன்
Published on

இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் அடுத்தடுத்து பலர் சிக்கி வருகிறார்கள்.

டெல்லி குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட தினகரன் சென்னையில் போலீஸ் காவலில் உள்ளார். பெசன்ட் நகரில் ராஜாஜி பவனில் வைத்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

நேற்று இரவு 11 மணி அளவில் ராஜாஜி பவனுக்குள் அழைத்து செல்லப்பட்ட தினகரன் இன்று பிற்பகல் 1 மணி வரையிலும் வெளியில் அழைத்து வரப்படவில்லை.

இன்று அதிகாலை 4.30 மணி அளவில் ஆந்திரா அல்லது பெங்களூருக்கு தினகரன் அழைத்துச் செல்லப்பட இருப்பதாக நேற்று இரவு தகவல் பரவியது. ஆனால் ராஜாஜி பவன் வளாகத்தில் வைத்து இன்று அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதற்கிடையே காலை 11 மணி அளவில் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் ராஜாஜி பவனில் இருந்து கார்களில் வெளியில் புறப்பட்டனர். அவர்களுடன் டி.டி.வி.தினகரனும் வெளியில் அழைத்து வரப்படுவார் என்று பத்திரிகையாளர்கள் பரபரப்புடன் காத்திருந்தனர். ஆனால் போலீஸ் அதிகாரிகள் மட்டும் வெளியில் வந்தனர்.

அவர்கள் ஆதம்பாக்கம், நிலமங்கை நகர், வள்ளலார் தெருவில் உள்ள ஓய்வு பெற்ற அரசு அதிகாரியான மன்னார்குடியைச் சேர்ந்த மோகனரங்கம் வீட்டுக்கு சென்றனர். மோகனரங்கம் வீட்டு வசதி வாரிய பொது மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார்.

டி.டி.வி.தினகரனுக்கு இவர் மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. அந்த அடிப்படையிலேயே இன்று அவரது வீட்டுக்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.

காலை 11.45 மணிக்கு தொடங்கிய விசாரணை 1 மணி நேரம் நீடித்தது. அதன் பின்னர் வெளியே வந்த போலீசார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.


போலீசார் சென்றதும் மோகனரங்கத்தின் மனைவி வசந்தி வெளியே வந்து நிருபர்களிடம் கூறும்போது, “பல ஆண்டுகளாக நாங்கள் இங்கு வசித்து வருகிறோம். மன்னார்குடியைச் சேர்ந்தவர் என்பதால் போலீசார் விசாரித்து விட்டு சென்றனர்” என்றார்.

வீட்டில் இருந்து எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

ஆதம்பாக்கத்தில் ஓய்வு பெற்ற அதிகாரி மோகனரங்கத்தின் வீட்டில் சோதனை நடத்திய பின்னர் போலீசார் போரூர் பகுதிக்கு சென்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com