இரட்டை இலை பெற லஞ்சம்: 2 அமைச்சர்களை விசாரிக்க முடிவு

இரட்டை இலை சின்னம் பெற ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் தமிழகத்தை சேர்ந்த சில அமைச்சர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவர்களை விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இரட்டை இலை பெற லஞ்சம்: 2 அமைச்சர்களை விசாரிக்க முடிவு
Published on

இரட்டை இலை சின்னத்தைப் பெற ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அ.தி.மு.க. அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.

மேலும் அவரது நண்பர் பெங்களூரை சேர்ந்த மல்லிகார்ஜுனா, இடைத்தரகர்கள் சுகேஷ் சந்திரசேகர், நரேஷ் ஆகியோரும் போலீசாரிடம் சிக்கியுள்ளனர்.

இந்த 4 பேரில் இடைத்தரகர்கள் சுகேஷ், நரேஷ் இருவரிடமும் டெல்லி குற்றப்பிரிவின் ஒரு பிரிவினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். டி.டி.வி.தினகரன், மல்லிகார்ஜுனா இருவரையும் போலீசார் 5 நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள். இதற்காக அவர்கள் இருவரும் நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.

முதலில் அவர்கள் பெசன்ட் நகரில் உள்ள டி.டி.வி.தினகரன் வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டனர். இரண்டாவது நாளான நேற்று அவர்களிடம் ராஜாஜி பவனில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது 16 பேரின் பெயர்களை டி.டி.வி.தினகரன் தெரிவித்ததாக தெரிகிறது.

இதையடுத்து அந்த 16 பேர் தொடர்பான விசாரணையை டெல்லி போலீஸ் அதிகாரிகள் தீவிரப்படுத்தினார்கள். ஆதம்பாக்கம் நிலமங்கை நகரில் வசிக்கும் ஓய்வு பெற்ற வீட்டுவசதி வாரிய அதிகாரியான மோகனரங்கம் என்ற மோகனுக்கு ‘சம்மன்’ கொடுத்தனர். அவரை டெல்லியில் நடக்கும் விசாரணைக்கு வருமாறு போலீசார் அழைப்பு விடுத்தனர்.

ராஜாஜி பவன்

இதற்கிடையே ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் தமிழகத்தை சேர்ந்த சில அமைச்சர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ரூ.50 கோடி பணத்தைத் திரட்டும் பொறுப்பை அந்த அமைச்சர்களிடம் டி.டி.வி. தினகரன் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.

குறிப்பாக இரு அமைச்சர்கள் ரூ.50 கோடியை திரட்ட முயன்றதில் முக்கிய பங்கு வகித்துள்ளதாக தெரியவந்துள்ளது. சுகேஷ் சந்திரசேகர் பிடிபட்டது முதல் அந்த இரு அமைச்சர்களையும் டெல்லி போலீசார் பல்வேறு வகைகளில் ரகசியமாக கண்காணித்து வருகிறார்கள்.

அடுத்தக்கட்ட விசாரணை பட்டியலில் அந்த இரு அமைச்சர்களின் பெயர்களை போலீசார் சேர்த்துள்ளனர். எனவே அந்த இரு அமைச்சர்களிடமும் எந்த நேரத்திலும் டெல்லி போலீசார் விசாரணை நடத்த வாய்ப்புள்ளது.

இந்த நிலையில் ரூ.50 கோடி லஞ்சம் விவகாரத்தில் டி.டி.வி.தினகரன் மற்றும் 2 அமைச்சர்களுக்கு தமிழக உயர் போலீஸ் அதிகாரிகள் சிலர் உதவியாக இருந்தது தெரியவந்துள்ளது. ஏற்கனவே இந்த வழக்கில் இருந்து டி.டி.வி.தினகரனை காப்பாற்ற முயன்றதாக மூன்று உயர் போலீஸ் அதிகாரிகளை டெல்லி போலீசார் கண்காணித்தப்படி உள்ளனர்.

இந்த நிலையில் பணம் திரட்டுவதற்கும், அதை எடுத்துச் செல்வதற்கும் கூடுதல் டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ள 2 பேர், ஐ.ஜி.அந்தஸ்தில் உள்ள ஒருவர் என மூன்று ஐ.பி.எஸ். அதிகாரிகள் உதவியாக இருந்தது தெரியவந்துள்ளது. டி.டி.வி. தினகரனுக்கு இந்த உதவியை செய்து கொடுத்து அடுத்த உயர் பதவிக்கு வந்து விட வேண்டும் என்ற திட்டத்துடன் அவர்கள் இதில் ஈடுபட்டதாக தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com