டிடிவி.தினகரன் இன்று இரவு டெல்லிக்கு அழைத்து செல்லப்படுகிறார்

டிடிவி. தினகரனிடம் சென்னையில் தற்போது நடத்தப்படும் விசாரணை இன்றுடன் முடிய உள்ளது. இன்று இரவு 7.40 மணிக்கு அவர் சென்னையில் இருந்து டெல்லிக்கு அழைத்து செல்லப்படுகிறார்.
டிடிவி.தினகரன் இன்று இரவு டெல்லிக்கு அழைத்து செல்லப்படுகிறார்
Published on

இரட்டை இலை சின்னம் பெற ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக அ.தி.மு.க. அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கைது செய்யப்பட்டார்.

அவர்மீது டெல்லி குற்றப்பிரிவு போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கு விசாரணைக்காக டி.டி.வி. தினகரன் கடந்த வாரம் சனிக்கிழமை டெல்லி சென்றார். அவரிடம் தனிப்படை போலீசார் சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய்க்கிழமை ஆகிய 4 நாட்கள் விசாரணை நடத்தினார்கள்.

செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கைதான பிறகு புதன்கிழமை அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க டெல்லி போலீசாருக்கு டெல்லி கோர்ட்டு அனுமதி வழங்கியது.

அதன் பேரில் டி.டி.வி. தினகரன் கடந்த வியாழக்கிழமை சென்னை அழைத்து வரப்பட்டார். இன்று அவரிடம் மூன்றாவது நாளாக விசாரணை நடந்தது.

தினகரனையும், மல்லிகார்ஜுனாவையும் இன்று கொச்சி மற்றும் பெங்களூர் அழைத்து செல்ல போலீசார் திட்டமிட்டிருந்தனர். ஆனால் சென்னையில் நடந்து வரும் விசாரணையே 3 நாட்களை கடந்து விட்டது.

எனவே அவர்களை கொச்சிக்கு அழைத்து செல்லும் திட்டத்தை போலீசார் கைவிட்டனர்.

இதற்கிடையே டி.டி.வி.தினகரனுக்கு வழங்கப்பட்டுள்ள 5 நாள் போலீஸ் காவல் திங்கட்கிழமையுடன் முடிகிறது. எனவே அவரிடம் சென்னையில் தற்போது நடத்தப்படும் விசாரணை இன்றுடன் முடிய உள்ளது. இன்று இரவு 7.40 மணிக்கு அவர் சென்னையில் இருந்து டெல்லிக்கு அழைத்து செல்லப்படுகிறார்.


டெல்லியில் இந்த வழக்கில் ஏற்கனவே கைதாகி இருக்கும் சுகேஷ் மற்றும் நரேசுடன் ஒன்றாக வைத்து டி.டி.வி.தினகரனிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com