போலி நூல்கள் கொள்முதல் விவகாரத்தில் தீவிரம்: அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ஆய்வு

AI மூலம் உருவாக்கப்பட்ட புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகப் அமைச்சர் ராஜ்மோகன் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியிருந்தார்.
Anna Centenary
Published on: 
Summary

சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த கால திமுக ஆட்சியின் போது அரசு நூலகங்களுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலி மற்றும் தரம் குறைந்த நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து இந்த விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

கோட்டூர்புரத்தில் உள்ள புகழ்பெற்ற அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்குள் நுழைந்த நான்கு பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை காவல் அதிகாரிகள் குழுவினர், அங்கு கடந்த காலங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நூல்கள் தொடர்பான கோப்புகள் மற்றும் பதிவேடுகளை தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். குறிப்பாக, முறைகேடான முறையில் அரசுப் பணத்தை கையாடல் செய்யும் நோக்கில் போலியான பெயர்களில் வெளியிடப்பட்ட புத்தகங்கள் நூலகத்திற்கு எவ்வாறு வாங்கப்பட்டன என்பது குறித்து ஒவ்வொரு ஆவணமாக ஆராய்ந்து வருகின்றனர்.

செயற்கை நுண்ணறிவு முறைகேடு

முன்னதாக, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசு நூலகங்கள் மற்றும் பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட இடங்களில் போலிப் பெயர்களைப் பயன்படுத்தி கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியிருந்தார். மேலும், சென்னை கன்னிமாரா நூலகம் மற்றும் மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் உள்ளிட்ட பல முக்கிய நூலகங்களிலும் இதுபோன்ற முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

தொடரும் அரசு நூலகங்களின் தணிக்கை

இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறையின் இந்த திடீர் ஆய்வு நூலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்கியதில் நடந்துள்ள முறைகேடுகள் மற்றும் நிதி கையாடல்கள் குறித்து முழுமையான உண்மையை வெளிக்கொண்டு வர இந்தச் சோதனையானது துரிதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த முறைகேடு புகார்கள் தொடர்பாகத் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் கைப்பற்றி அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X